Ticker

6/recent/ticker-posts

9-ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்

சந்தேகம் 

குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாமா?


தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)

சந்தேகம்:
நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)
சந்தேகம் :- “ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?

தெளிவு :-
ஸஹர் செய்யுமாறும், அதில் அதிகம் பரக்கத் உள்ளதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பல ஹதீஸ்கள் உள்ளன. (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் எண் -1692). இந்த ஸஹர் உணவை முடிந்தவரை தாமதப்படுத்துவதையே இஸ்லாம் விரும்புகின்றது. சுப்ஹுடைய நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தால் கூட உண்பதை நிறுத்த வேண்டியதில்லை. சுப்ஹுடைய நேரம் வந்துவிட்டது என்று உறுதியானால் தான் உண்பதை நிறுத்த வேண்டும். இதையே “குமரி இருட்டு நீங்கி விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள்…” (2:187) என்ற வசனம் உணர்த்துகின்றது.

றமழான் காலத்தில் மக்களை எழுப்புவதற்காகவும், சுப்ஹுடைய தொழுகைக்காகவும் இரு அதான் கூறும் வழிமுறை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அந்த இரு அதான்களுக்குமிடையில் சுமார் 50 ஆயத்துக்கள் ஓதும் இடைவெளி இருந்ததாக ஸஹாபாக்கள் கூறுகின்றனர். (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா 1694)

சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)

சந்தேகம் :
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா?

தெளிவு :
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.

“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)

சந்தேகம் :
நோன்பாளியொருவர் மறந்த நிலையில் எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :
பதினொரு மாதங்கள் உண்டு பழக்கப்பட்டிருப்பதனால் சில வேளைகளில் நோன்பாளிகள் எதேச்சையாக எதையேனும் வாயில் போட்டு விடுவதுண்டு. இவ்வாறு மறதியாக உண்பதால் நோன்பு முறியவும் மாட்டாது; அதன் பலன் குறைந்து விடவும் மாட்டாது. அவர் தொடர்ந்து நோன்பிலேயே இருக்க வேண்டும்.

“யாரேனும் ஒரு நோன்பாளி மறதியாக எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் தனது நோன்பை (நிறுத்திவிடாமல்) பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள். (அறிவிப்பவர்: அபூ ஹுறைரா(ரழி) – ஆதாரம்: புஹாரி, தாரமீ, முஸ்லிம்) 

(தொடரும்)


 

Email;vettai007@yahoo.com

 



Post a Comment

0 Comments