Ticker

6/recent/ticker-posts

முக்கிய வீரர்களை ஒப்பந்த பட்டியலில் இருந்து கழற்றிவிட்ட பிசிசிஐ... யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?


நடப்பு ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று, 5 கோடி ரூபாய் ஆண்டு ஊதியம் கொண்ட A பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் B பிரிவில் இருந்து A பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். 3 கோடி ரூபாய் ஆண்டு ஊதியம் கொண்ட கிரேடு பி பிரிவில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் கொண்ட கிரேடு சி பிரிவில் 15 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெற உள்ளனர். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் கொண்ட கிரேடு சி பிரிவில், இம்முறை புதிதாக 10 பேர் இணைந்துள்ளனர். அதே சமயம், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனின் பெயர்கள் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் பரிசீலிக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உள்ளூர் போட்டிகளில் இவர்கள் விளையாடாததால் இவர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒரு நாள், அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், சி பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள துருவ் மற்றும் சர்ஃப்ர்ஸ் கான், தர்மசாலாவில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் விளையாட உள்ளனர். இதனால், கிரேடு சி அவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

news18


 



Post a Comment

0 Comments