Ticker

6/recent/ticker-posts

தேர்தலுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது : பாஜக அரசுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் !


டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே நேற்று இரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே பா.ஜ.க அரசு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறையை வைத்து தொடர்ந்து பா.ஜ.க துன்புறுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.

அதே போல சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "தோல்வி பயத்தில் மோடி அரசு எதிர்க்கட்சிகளை தொடர்ந்து கைது செய்வது பாஜகவை தோற்கடிக்கவும், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கவும் மக்களுக்கு மேலும் மேலும் உத்வேகத்தை தான் அளிக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "ஒரு அச்சம்கொண்ட சர்வாதிகாரி மரணித்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி எதிர்க்கட்சிகளை உடைப்பது மட்டும் போதாது என்று தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களையும் கைது செய்ய தொடங்கியுள்ளார்கள்.இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே "வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பா.ஜ.க-விற்கு இல்லை. இருந்திருந்தால் தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்படி குறிவைக்கப்பட மாட்டார்கள்.மாற்றத்திற்கான நேரம் இது! இந்த முறை.அதிகாரம் பாஜகவிற்கு கிடைக்காது!!" என்று கூறியுள்ளார்.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments