Ticker

6/recent/ticker-posts

ஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது...! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவரும்,    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி A.L.M.இப்றாஹீம் அவர்கள்காலமானார்கள்.  
கோட்டே ரோட், கோட்டே  941/26 இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிய முடிகின்றது.

இலங்கை முஸ்லிம் சமூக ஆளுமைகளுள் ஒருவரான மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம்  (கபூரி) அவர்கள், முஸ்லிம் சமூகத்தை அறிவுசார்ந்து நகர்த்துவதிலும், சமூகத்தின் மத்தியில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்துவதிலும் மிகுந்த பங்களிப்புச்  செய்த ஒருவராவார்.

விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்ற பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் ஸ்தாபகரான அன்னார், அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடியும், முஸ்லிம் சமூகத்தின் ஆய்வாராச்சித் துறையின் முன்னோடியும்,  பெண்களுக்கான முன்மாதிரி மிகுந்த  மார்க்கக்கல்வி நிலையங்களின் ஸ்தாபகருமாவார்.

அன்னார் ஜமாஅதே இஸ்லாமி அமீராக இருந்த காலத்தில் நான் கல்ஹின்னை இஸ்லாமிய பயிற்சி மன்றத்தின் செயலாளராக இருந்தேன். அக்காலை தலைமையகம் செல்கின்ற போதெல்லாம், அன்னாரை நான் சந்திப்பதுண்டு. சீதேவித்தனமான அந்த முகம் இப்போதும் என்னுள் நிழலாடுகின்றது!

வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு, அன்னாருக்கு மறுவுலகில் நற்பாக்கியத்தைக் கொடுத்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்!

காலஞ்சென்ற மெளலவி A.L.M.இப்றாஹீம் அவர்கள் மற்றிய மேலதிக குறிப்புக்கள் சில:

மாவனல்லை உயன்வத்தையில் 1937ம் வருடம் பிறந்துள்ள மௌலவி A.L.M.இப்றாஹீம் அவர்கள் ஆறு தசாப்தகால இஸ்லாமியப் பணியின் அடையாளமாவார். 
 
கபூரிய்யாவில் தனது மார்க்கக் கல்வியைக் கற்றுத்தேறி அங்கிருந்து வெளியாகிய அன்னார், 1958ம் ஆண்டு தனது 21 வயதில் ஜமாஅத்தே இஸ்லாமியில் இணைந்து,  மிகக்குறுகிய காலத்தில் அதன் பொதுச் செயலாளரானார். 

1976/77 மற்றும் 1982-1994 வரை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக செயற்பட்டு இயக்கத்தை வழிநடத்திய அன்னார், இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் உப தலைவர்களுள் ஒருவருமாகவும் பணிபுரிந்தவராவார்.

திஹாரிய அங்கவீனர் நிலைய ஸ்தாபகக் குழுவில் ஒருவராகவும் செயற்பட்டுள்ள அன்னார், மாதம்பை மற்றும் புத்தளம்  இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரிகள், ஓட்டமாவடி பாத்திமதுஸ் ஸஹ்ரா, மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா, சிங்கள மொழி மூலமான முதலாவது ஷரீஆ நிறுவனமான திஹாரி தன்வீர் அகடமி ஆகியன உருவாகக் காரணமாக இருந்தவருமாவார்.

அல்குர்ஆன் விளக்கவுரை - தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பணியின் உயிர்நாடியாய் செயற்பட்ட இவர், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செரண்டிப் நிறுவனம் அவர் இயங்கிய மற்றொரு களமாகும். 

அல்குர்ஆனை ஓதுவோம், விளங்குவோம், அதன் வழி நடப்போம் என்ற செய்தியை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்ற தஃவதுல் குர்ஆன் செயற்பாட்டின் முன்னோடியுமான அன்னார், எப்போதும், பிரதியுபகாரம் பாராது சமூகத்திற்காய் பணி செய்கின்ற நல்லுள்ளம் கொண்டவருமாவார்.

அன்னார், 1973ல் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பிரதான உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறை பணிக்காய் தன் வாழ்நாள் முழுவயதையும் அர்ப்பணித்துள்ள அமைதியான சாதனையாளரான அன்னாருக்கு வல்ல அல்லாஹ் தன் அருள் மழையைப் பொழிவானாக!

-செம்மைத்துளியான்.


 



Post a Comment

0 Comments