பாட்டியின் முதற்காதலன்!

பாட்டியின் முதற்காதலன்!

(மலையகத்து சிறுகதை)



நமுனுகல மலைத் தொடர் அடி வாரத்தில் அமைந்துள்ள பதுளையின் ஸ்பிரிங்வெலி ஊவா மாகாணத்தின் மிகவும் குளிரான பகுதி!

அதிகாலையில் 'அவிசீனியா' மரங்களுக்கூடாக வரும் சூரியக்கதிர், தோட்டவாசிகளைக் கடுங்குளிரிலிருந்தும் பாதுகாத்து, அவர்களைச் சுறுசுறுப்பானவர் களாக்கி,  சாரிசாரியாக தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழையச்செய்து பணிசெய்ய வைத்துக் கொண்டிருக் கின்றது!

அடர்ந்த தேயிலைத் தோட்டத்துக்குள் சின்னச்சின்ன லயக்காம்பராக்களில்  நசுங்கி வாழும்  தொழிலாளர், நிதமும் வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொண்டே சடங்கு, சம்பிரதாயம், உடை, உணவு  பற்றிய திடமான எண்ணக்கரு எதுவுமின்றி வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் போன்ற விஷயங்களை மறந்துபோன நிலையில் உழைப்பதை மட்டுமே நோக்காகக் கொண்டு, காலாகாலமாக தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாக, ஒரே நேர்கோட்டில்  நகர்ந்து கொண்டிருக்கின்றனர்!

ஆனால் அந்த லயக்காம்பராக்களிலொன்றில் வாழ்ந்துவரும் மைதிலி மட்டும்  கற்பது ஒன்றை மட்டுமே தன் வெறியாக்கிக் கொண்டு எந்த நிலையிலும் அதனைக் கை  விட்டுவிடாமல்,  இலக்குநோக்கிச் செயற்பட்டு வருகின்றாள்.  அவளுக்கு உந்து சக்தியாக நூறு வயதையும் தாண்டிவிட்ட பாட்டியும், கணவனை இழந்த அவளது அம்மாவும் திகழ்ந்து வருகின்றனர்.

அந்த லயன் தொகுதியை மட்டுமல்லாது, முழுத் தோட்டத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில், நாளை மறுதினம் மைதிலி பல்கலைக் கழகத்தில் பட்டமும், பாராட்டும் பெறப்போகின்றாள்!  
               
##

அதிகாலையில் நித்திரை விட்டும் எழுந்து கொண்ட மைதிலி, என்றைக்குமில்லாதவாறு இன்றைக்கு காலையில் குளித்துவர பீலியடிக்குச் செல்கின்றாள்; காலைக்குளிர் பீலியடியை எப்போதும் வெறிச்சோடிக் கிடக்கவைக்கும்; இன்றைக்கும் அது அப்படித்தான் கிடக்கின்றது!

அந்திசாயும் வேளையில் பீலியடி நெரிசல் மிகுந்து காணப்படும்; வேலை செய்துவிட்டு களைத்துவரும். தோட்டத்துவாசிகள் அந்திக் குளிப்பதற்காக பீலியடி வருவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்!

உடுத்தாடையை உயர்த்தி, மாரை மறைத்து இருக்கிக்கட்டி, ஆங்காங்கே ஓட்டை ஒடிசலுடன் பழசாகிப்போன துணி ஒன்றினால் தோற்பட்டையை போர்த்திக் கொண்டிருந்த போது, தேய்ந்துபோன சவர்க்காரத் துண்டுடன் தாயார் அவளருகில் வந்தாள்.

பருவ வயதை எட்டிவிட்ட மகள், என்றைக்குமில்லாதவாறு இன்றைக்கு, உயர்த்திக்கட்டிய உடுத்தாடையுடன்,  பூரிப்படைந்திருப்பதைக் கண்டதும் தாய் உவகைப் கொண்டாள்!

மெழுகிவிட்டாற்போன்ற  அழகிய மாநிற வதனங்களும், அதற்கேற்றாற்போன்ற நீண்டு வளர்ந்த கருநிறக் கூந்தலும் அபார வளர்ச்சி கண்டு, பூரிப்படைந்திருந்த  உடம்பையும் கொண்டிருந்த மகளை கண்டதும், அவளுக்கு தன் கண்ணே பட்டுவிடும் என்ற நினைப்பு ஒருபுறமும், மறுபுறம் இந்நொரு வகையில் புளங்காகிதமும் அடைந்துகொண்ட தாய்,  மகளின் காலடியில் குனிந்து, அவளது கால்களை அட்டை கடித்து விடாதிருப்பதற்காக சவர்க்காரத்தைப் பூசிவிட்டாள்!

சவர்க்காரம் பூசப்பட்ட வெற்றுக்கால்களோடு மைதிலி  பீலியடி நோக்கி நடந்து கொண்டிருந்த போது,  கையில் கம்பும், முதுகில் கூடையுமாக கொழுந்து பிய்க்கப் போய்க்கொண்டிருந்த பெண்கள் கூட்டம், வழமைபோல் மைதிலியை நையாண்டி செய்து கொண்டு சென்றதை அவள் கண்டும், காணாததுபோல் சென்றாள்.

"என்னடி மைதிலி இனி உன் பாட்டிக்கு 'ஈபிஎப்' எடுத்துக் கொடுத்துருவியோ?" - வாயாடிக் கிழவி ஒருத்தி வழமைபோல் நக்கலடித்தாள்.

மைதிலி  இவர்களின் வார்த்தைகளை எப்போதும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை; தானும் தனது படிப்புமாக இருந்து விடுவாள்!

படித்து முடித்து  பட்டம்பெற்றதும்  பாட்டியின் ஈபிஎப்பை எடுத்துக் கொடுக்கப் போவதாக மைதிலியின் குடும்பம் பல காலமாகபபபீற்றிக் கொண்டிருந்தது ஏதோ உண்மைதான்; மைதிலிக்குத் தெரியாமல் தோட்டத்துவாசிகள் அவளை 'ஈபிஎப் மைதிலி' என்று அழைத்து வருவதுவும் இன்னொரு உண்மையும்தான்!                

##

ஒருநாள், சரியாக  நூற்றி நான்கு வயதில், தெய்வானை ஐம்பத்தைந்து வருட சேர்வையின் மூலம் குவிந்து கிடக்கும் தனது ‘ஈபிஎப்’பை எடுப்பதற்காக பேத்தியையும் கூட்டிக் கொண்டு தோட்டத்துக் கணக்குப் பிள்ளையிடம் சென்றபோது, பாட்டியும் பேத்தியும் பட்ட அவமானமே அந்தத் தோட்டத்து கணக்குப் பிள்ளையிடம் மைதிலியை சவால்விடச் செய்துவிட்டது!

தனது சவாலின் பாதிப்பகுதியை மைதிலி இப்போது சரி செய்துவிட்டாள்; மீதிப்பகுதியைச் சமாளித்துவிடுவ தென்பது அவளுக்கு ஜுஜூப்பிதான்!
பீலியிலிருந்து பீரிட்டுவரும் குளிர்நீருக்கு தன் தலையை சாய்த்துக் கொண்டிருந்த மைதிலிமீது விழுகின்ற நீர், அவளது கருநிறக்கூந்தலையும், மாநிற வதனங்களையும் நனைத்தபடி உடுத்தாடைக்குள்ளாக ஊடுறுவி, உடல் முழுவதையும் வருடிக் சென்று காலடியில் விழுந்து கொண்டிருந்ததை சற்றுத் தொலைவில், தேயிலைத் புதருக்குள்ளிருந்த கருங்கல்மீது அமர்ந்து பார்த்து பார்ய்து ரசித்துக் கொண்டிருந்த பாட்டியைக் கண்டுவிட்டாள்.

பேத்தி நீராடிக் கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டே, தெய்வானை, தான் மதராசிப் பட்டணத்திலிருந்து தந்தை, தாயார், அண்ணன்மார்களுடன்  ‘ஸ்பிரிங்வெலி’க்கு வந்து சேர்ந்த விதத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.

##

தென்னிந்தியாவில்  மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த குடும்பம்; தான் பிறந்து  வயது ஐந்தாகும் வரை,  அவளை வளர்த்தெடுக்க, அவளது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள்! அப்பப்பா... இப்போது நினைத்தாலும்  தெய்வானைக்கு மனசு பதைக்கின்றது! 

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் தொழில்செய்து, நிறையவே  சம்பாதிக்கலாம் என்ற ஒரு கட்டுக்கதை, அக்காலத்தில்  இந்தியாவில் நிலவியதால், தன் தந்தைக்கு இலங்கையில் வேலை செய்யும் ஆர்வம் ஏற்பட்டு, அதற்கான வாய்ப்பைத் தேடியபோது, அண்ணாமலை என்பவர் அறிமுகமானார். மதராசிப் பட்டணத்தில் சீரும் சிறப்புமாக  வாழ்ந்துவந்த அண்ணாமலை,  இங்கிலீஸ்காரனின் நேரடித் தொடர்பில் இருந்தவராவார். ‘கொத்தமங்கலம்’ பகுதியிலிருந்த குடும்பங்களுக்கு ஆசைகாட்டி, அவர்களைக் கூலிகளாக இலங்கைக்கு அனுப்பிவைத்து இங்கிலீஸ்காரனிடமிருந்து கமிஷன் கரந்து கொள்வது அவரின் தொழில்!

‘கொத்தமங்கலம்’ பகுதிலிருந்து தொலைதூரத்திலுள்ள இராமேஸ்வரத்திற்கு குடும்பத்தாரோடு ரயிலில் வந்து சேர்ந்த தெய்வானை, அங்கிருந்து தலைமன்னார் வரை படகில் வந்து, அங்குள்ள மடமொன்றில் தங்க வைக்கப்பட்டு மற்றொரு ரயிலில் ஏறி, இலங்கையின் பொல்கஹவலை என்ற இடத்துக்கு வந்து சேர்ந்த குடும்பம், இறுதியாக  ரயில் ஒன்றில் ஏறி, அங்கிருந்து ஸ்பிரிங்வெலியை வந்தடைந்தது!
 
அன்று இந்த லயக்காம்பராவில் முடக்கப்பட்ட தெய்வானையின் குடும்பம், நூற்றாண்டு கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட இதற்குள்ளேலேயே தவமோ தவமாக வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது சிலரின் உயிர்கள் பிரிந்துபோக, நூறு வயதையும் தாண்டிவிட்ட தெய்வானை,  தனது மகள், பேத்தியோடு இன்றும் லயக்காம்பராவில் முடங்கி  வாழ்ந்து வருகின்றமை அபூர்வமானதாகும்!

##

தெய்வானை தனது பன்னிரெண்டு வயதில் கொழுந்து பறிக்க ஆரம்பித்தாள். அவளது பெற்றோருக்கு ஒரு மூத்த தொழிலாளி கொழுந்து பறிக்கக் கற்றுக் கொடுத்துள்ளார். பெற்றோரிடமிருந்து அண்ணன்மார் கற்றதை, அவர்கள் தங்கைக்கும் கற்றுக் கொடுத்தனர்!

தோட்டவெளிப்  பாதைகள்,  மிகவும் குறுகலாகவும் மேடு பள்ளமாகவும் இருந்ததால், அவளது தந்தையும் சகோதரர்களும் மாறி மாறி அவளைச் சுமந்து சென்று கொழுந்து பறிக்க வைத்தது,  இன்றைக்கும் தெய்வானைக்கு நினைவிருக்கின்றது. 

ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 25 கொழுந்துப்பைகள் பறிக்க வேண்டும் என்பது நியதி. தெய்வானையால் போதுமான கொழுந்து பறித்துக்கொள்ள முடியாவிட்டால், குடும்பத்தினர் தங்கள் ஒவ்வொருவர் சேகரிப்பிலிருந்தும் தெய்வானையின் பைகளில் கொழுந்தை நிறப்பி, அவளது பைகளைச்  சமநிலை செய்து விடுவார்கள்.

நூறுவயது தாண்டிவிட்ட போதிலும், இன்றும்கூட சுயதிறன், சுயநம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வானை,  மழைக்கேனும் பாடசாலைப் பக்கம் ஒதுங்கியதில்லை! விடிந்தும் விடியாததுமாக தேயிலைக் காட்டிற்கு  கொழுந்து பறிக்கச் சென்றால், அந்திசாயும் வேளையில் லயனுக்கு வந்துசேர்வதை அவள் வழக்கப் படுத்திக் கொண்டிருந்தாள்.

##

அக்காலை தேயிலைத் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்க வந்தவர்களுள் இளமையுடனான அழகிய யுவதி தெய்வானை!

பாடசாலை விடுமுறையின்போது, பெரியதொரை  தன் குடும்பத்தாரைக் கூட்டி வந்து சில வாரங்கள் தோட்ட பங்களாவில் தங்கியிருந்தார்.

அவரது மகனுக்கும் தெய்வானைக்கும்  அப்போது ஏற்பட்ட நெருக்கம்,  காதல் என்ற பெயரில் தோட்டம் முழுவதும் பரவ ஆரம்பித்தபோது, பெரியதொரை கடுப்பாகி தெய்வானையின் தந்தையை எச்சரித்ததுமட்டுமல்லாது, தெய்வானைக்கு ஒரு வரனைத்தேடி மணமுடித்துக் கொடுத்தால்தான், தொடர்ந்தும்  வேலைக்கு வரமுடியும் என்றும் கூறிவிட்டார். 

அந்த விவகாரமே தெய்வானையைத் திடுதிப்பென கல்யாணம் செய்துகொள்ள வைத்தது!

காதலைத் துறந்து, காதலனை மறந்து,  பதினேழு வயதில் பெற்றோர் பேசித்தந்தவரை மணம்செய்து கொண்டதும்,

"கடவுள் அமைத்து வைத்த மேடை, கிடைக்கும் கல்யாண மாலை,
இன்னார்க்கு இன்னாரென்று, எழுதி வைத்தானே கடவுள் அன்று"
என்று பாடுவதைக் தவிர, தெய்வானைக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது!

காலங்கள் நகர, அவளது பெற்றோர் ஒருவர் மாறி ஒருவராக இவ்வுலகை விட்டும் பிரிந்துபோக, மூன்று பிள்ளைகளை அவளுக்கு சுமையாக்கித் தந்துவிட்டு, பெற்றோர் கணவரும் மாண்டுபோனார்!

சுந்தர் சுகுமார் என்ற அழகிய பெயரும்,  அவரது அழகிய வதனமும் தெய்வானைக்கு அவ்வப்போது நினைவில் வந்து போவதுண்டு!

தன் பேத்தியுடன், சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், அவள் தனது முதற்காதல் பற்றியும், சுந்தர் சுகுமாருடன் தான் சுதந்திரமாக சுற்றியலைந்த நாட்கள் பற்றிய நினைவுகளையும் பரிமாறிக் கொள்வதுண்டு!

##

தெய்வானையின் மூத்த மகன் மதராசிப்பட்டணம் சென்று, அங்கேயே மணமுடித்து பிள்ளை குட்டிகளோடு வாழ்கின்றார். மற்றவன் கொழும்பில் குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் அவனின் மகனும், மகளும் மணமுடித்து, அவர்களும் பிள்ளை குட்டிகளோடு சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர்.

தெய்வானையின்  கடைக்குட்டி மைதிலியின் அம்மா; தோட்டமும் லயமுமாக, மகளின் எதிர்காலத்தை சீராக்கும் நோக்கில், இப்போதும் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து வாழ்ந்து வருகின்றாள்!

மைதிலியின் குடிகார அப்பா,  குடித்துக் குடித்தே இதயத்தைக் கெடுத்துக் கொண்டவர்; அற்ப ஆயுசில் உலகை விட்டும் பிரிந்து  போய்விட்டார்.

பன்னிரெண்டு வயதில் வேலையில் சேர்ந்த தெய்வானை 1980ம் ஆண்டில், அறுபத்தேழு வயதானபோது, தோட்ட நிர்வாகம்  அவளை வேலை நீக்கம் செய்தது!  ஐம்பத்தைந்து வருடங்கள் தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து வேலை செய்த தெய்வானைக்கு,  அவளது ஈபிஎப்பைப் பெற்றுக் கொள்வதென்பது இன்றுவரை சவாலாகவே இருந்து வருகின்றது!

தனது ஐந்து தசாப்த உழைப்பின் சேர்மானம்  ஊழிய சேமலாபநிதி; அதனைப் பெற்றுத் தருமாறு தோட்ட நிர்வாகத்திடமும், தொழிற்சங்கத்திடமும், முன்னைய மற்றும்  பின்னைய கணக்குப் பிள்ளைகளிடத்திலும், ஆயிரம் தடவைகள் மன்றாடியபோதிலும், தெய்வானைக்கு எவருமே கருணை காட்டவுமில்லை;  இன்றுவரைக்கும் சாக்கு போக்குச் சொல்லி ஏமாற்றித்தான் வருகின்றனர்.  

அவளது பேத்தி அதனை எப்படியேனும் பெற்றுத்தருவதாக பாட்டிக்கு உறுதிமொழி தந்துவிட்டு, தன் படிப்பில் கவனம் செலுத்தி வரலானாள்!

கடந்த நான்கு வருடகாலமாக பல்கலைக்கழகம் சென்று, தனது கற்கைநெறியை முடித்துக் கொண்ட மைதிலி, நாளை மறுதினம் பட்டத்தைக் கையிலெடுக்கப் போகின்றாள்.

அதனை  ஏந்திச் சென்று, சட்டக்கல்லூரிக்குள் நுழைந்ததும், ஒரு வருடத்தில்  அவள் தன் இலக்கை அடைந்து, வக்கீலாக மாறி விடுவாள்!                 
##

குளிர்ந்த நீரில் மைதிலி குளித்து முடிந்ததும், அவளைத் துவட்டி எடுத்து லயக்காம்பராவுக்குக் கூட்டிவந்தபோது, அங்கு அவளது தாய் மாமனின் மகனின் மகன் வந்திருப்பது கண்டு  மைதிலி ஆச்சரியப்பட்டாள்; அவனுக்கு  வயது பத்துப் பனிரெண்டாக இருக்கலாம்!

லயக்காம்பராவுக்குள் நுழைந்த மைதிலி, கிடப்பையிலிருந்த பார்சலைக் கண்டதும்,  ஆவலுடன் அதனைத் தொட விளைந்த போது, 

"உன் மாமன் உனக்காகவே அனுப்பியது; பிரித்துப் பார்" என்று பெருமையோடு பாட்டி கூறி முடிப்பதற்குள், மைதிலி பார்சலைப் பிரித்து முடித்து விட்டாள்.

என்ன ஆச்சரியம்? ஓர் அழகான சாரியும், அதற்கான  துணி மணிகளும்  அதற்குள் கிடந்தன.

"எப்படியம்மா...? இது எப்படி?" மைதிலி ஆச்சரியமாகக் கேட்டதும், அவளது தாயார், மகள் பட்டம் பெறப்போகும் செய்தியை அண்ணனிடம் கூறிய செய்தியை மைதிலியிடம் ஒப்புவித்தாள்.

கொழும்பில் வாழ்ந்துவரும் மைதிலியின் தாயின் அண்ணன்மார்களுள் ஒருவரான தெய்வானையின் மகனுக்கு மைதிலிமீது அலாதிப்பிரியம்; தன் மறுமகள் பல்கலைக்கழகப் பட்டம் பெறப்போகின்றாள் என்றதைக்கேட்டு களிப்படைந்த அவர், பட்டம் பெறச் சொல்லும்போது உடுத்திக் கொள்வதற்காக சாரி ஒன்றையும், அதற்கான உள்-வெளி ஆடைகளையும் வாங்கி,  தன் பேரனிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.

கொழும்பிலிருந்து காலையில் ரயிலில் வந்த தெய்வானையின் கொள்ளுப்பேரன், பகல் போஷனத்தின் பின்,  மாலை நான்கு மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் செல்வதென்ற முடிவுடன் வந்திருந்தான். அதே ரயிலில் சென்று மைதிலியும் அம்மா, பாட்டியுடன் பேராதனையில் இறங்கிக் கொண்டாள்.            

##

பேராதனைப் பல்கலைக்கழக வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பட்டம் பெற வந்தோர் தமது பெற்றோருடன்  அரங்கினுள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து கொள்ளலாயினர்.

கொட்டு முழக்கத்துடன் ஆரம்பமான விழாவில், அதிதிகள் உரைகளைத் தொடர்ந்து உபவேந்தரின் நன்றியுரை முடிந்ததும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெயர்களை வாசிக்க, ஒவ்வொருவராக சான்றிதழ் பெற்றுச் சென்றனர்.

"இனி, பேராசிரியர் சுந்தர் சுகுமாரிடமிருந்து ஏனையோர் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வர்" என்று குறிப்பிடப் பட்டதும் தெய்வானை திடுக்கிட்டாள்; பக்கத்து ஆசனத்திலிருந்த மைதிலி, பாட்டியின் முகத்தை உற்று நோக்கினாள். எட்டு தசாப்தங்களுக்கு முன் தெய்வானையின் முதற்காதல் மலர்ந்தது இதே பெயருடைய ஒருவருடன்தான் என்பதை பாட்டி சொல்லி, மைதிலி அறிந்து வைத்திருந்தாள்!

வயது முதிர்ந்த மனிதர் ஒருவரை, அவரின் இருமருங்குகளிலும் இருவர் கைத்தாங்களாக்கி, மேடையில் தோன்றச் செய்ததும், அந்த மனிதரின் முகத்தை தெய்வானை உற்று நோக்கலானாள்; சந்தேகமே இல்லை! அது அவரேதான்!

மைதிலி தன் பெயர் வாசிக்கப்பட்டதும், பாட்டியின் முதற் காதலனிடமிருந்து சான்றிதழ் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சிமேல் மகிழ்ச்சியடைந்தாள் என்பது மட்டும் உண்மை!

(யாவும் கற்பனையே)


செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post