Ticker

6/recent/ticker-posts

அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு... இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்... ஐடி ஊழியரின் சாதனை கதை!


ஆரவாரம் இல்லாத அமைதியான தொடக்கமும் அதில் கிடைக்கும் தோல்விகளுமே நம் வாழ்க்கையின் சிறந்த ஆசான்கள். ஒரு சிலர் இதில் கிடைத்த பாடத்தை கற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றுகிறார்கள். அப்படியொரு உத்வேகமளிக்கும் பிரஜா ராவுத்தின் வாழ்க்கை கதையை பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.

வெறும் ரூ.20,000 முதலீடாக கொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த கிரில் பர்கரை விற்பனை செய்து வருகிறார் பிரஜா ராவுத். இன்று இவருடைய ஃபாஸ்ட் ஃபூட் நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி.

ஐடி ஊழியராக இருந்த ராவுத், வேலை நிமித்தமாக பெங்களூருக்கு மாற்றலாகினார். அங்குதான் தன்னுடைய 21 வயதில் வாழ்க்கையில் முதல் முறையாக பர்கரை சுவைத்து பார்த்தார் ராவுத். அன்றிலிருந்து பர்கர் அவரது விருப்பமான உணவாக மாறியது. ஒவ்வொரு முறை பர்கர் சாப்பிடும் போதும் அவர் மனதிற்குள் ஒரு விஷயம் மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது. இங்கு விற்பனையாகும் பர்கர் அனைத்துமே மெக்டொனால்ட் (McDonald), கேஎஃப்சி (KFC) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடையதாக இருக்கிறதே தவிர ஏன் இந்தியாவைச் சேர்ந்த நிறூவனங்கள் எதுவும் பிரபலமாக இல்லை என்ற கேள்வி அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதற்கு விடை தேடும் விதமாக தானே ஒரு பர்கர் ரெஸ்டாரெண்டை திறந்தால் என்ன என்று யோசனை அவருக்கு பிறந்தது. அதுதான் Biggies Burger. அதுவரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர ரெஸ்டாரெண்ட் தொழில் களம் இறங்கினார் ராவுத்.

அதுவரை சமையல் குறித்து ஏதும் அறியாத ராவுத், யூடுயூப் வீடியோ மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பர்கர் எப்படி செய்வது என்பதை கற்றுக்கொண்டார். அப்போது தனது சேமிப்பில் இருந்த ரூ.20,000 தொகையை முதலீடு செய்து பெங்களூரு நகரில் சிறிய பர்கர் கடையை தொடங்கினார். இந்த தொழில் நல்ல லாபம் ஈட்டுமா என்றெல்லாம் யோசிக்காமல் தைரியமாக களத்தில் இறங்கினார் ராவுத்.

தன்னுடைய அயராத உழைப்பாலும் விடா முயற்சியாலும் இன்று Biggies Burger ரெஸ்டாரெண்ட் இந்தியாவின் பல நகரங்களில் கிளை பரப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகப் பிரபலமான உள்ளூர் பர்கர் பிராண்ட் என்ற பெயரையும் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு Biggies Burger நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியை எட்டியது. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் Biggies Burger கிளையை தொடங்க வேண்டும் மற்றும் நிறுவனத்தின் வருவாயை ரூ.500 கோடியாக மாற்ற வேண்டும் என்பதே ராவுத்தின் அடுத்த இலக்கு.

தற்போது இந்தியாவின் 14 மாநிலங்களில் உள்ள 28 நகரங்களில் 130 இடங்களில் Biggies Burger கடைகள் உள்ளன. இதன் மூலம் 50 லட்சம் பர்கர்களை இவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.


news18


 



Post a Comment

0 Comments