Ticker

6/recent/ticker-posts

அரளிப் பூவைச் சாப்பிட்ட பெண் மரணம்


திருவனந்தபுரம்: போனில் பேசிக்கொண்டே அரளிப் பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது சூர்யா சுரேந்திரன், பிஎஸ்சி நர்சிங் படித்தவர். அவருக்கு லண்டனில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிவதற்கான பணி ஆணை கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூர்யா, தனக்கு வேலை கிடைத்த செய்தியை அனைவரிடமும் சந்தோஷமாக போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, ஞாயிறு (மே 4) மதியம் லண்டன் செல்வதற்காக கொச்சி சர்வதேச நிலையத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, சூர்யாவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. குடும்பத்தினரும் சாதாரண வாந்தி என்று நினைத்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்து அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர்.

மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது, போனில் பேசிக் கொண்டிருக்கையில் மாடியில் இருந்த சில பூக்களை வாயில் வைத்து மென்றதாக சூர்யா கூறினார். அது அரளிப்பூ எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக விஷ முறிவு சிகிச்சையை தொடங்கினர். ஆனால் அதற்குள் சூர்யா உயிரிழந்தார். அவரது இதயம் சட்டென நின்றதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது தந்தை சுரேந்திரன் கட்டடத் தொழிலாளி. இதய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பள்ளிப்பட்டு அருகே பொய்யக்கரையில் தாயார் அனிதா தற்காலிக டீக்கடை நடத்தி வருகிறார். குடும்பத்தின் ஒரே வருமானம் அதுதான்.

“லண்டன் பயணம் என்பது குடும்பத்தினதும் சூர்யாவினதும் கனவாக இருந்தது. ஆனால் சில மணிநேரங்களில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது,” என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.

tamilmurasu


 



Post a Comment

0 Comments