புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-19

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-19


செரோக்கி தான் வளர்ந்து கொண்டிருக்கும்போதே தனது தந்தையுடன் வனத்துக்குள் செல்வது - அத்தையின் கணவரிடம் வேட்டையாடக் கற்றுக்கொள்வது - வெளியுலக நண்பனிடம் ஆங்கிலம் கற்பது, வனத்துக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியுலகைக் கண்டு வருவது போன்றவற்றில் தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தான்.

அவனது வெளியுலக நண்பன் 'ஹபிங்டன் இர்வின்'னை செரோக்கி ”இர்வின்”என்றே அழைத்து வந்தான். ஒருமுறை இர்வின் செரோக்கியின் பெயரைப் புகழ்ந்தபோது அது செரோக்கிக்குப் பெருமையாக இருந்தது.

“அழகான பெயர் உனக்கு எங்கிருந்து தேடி வைத்தார்கள்” என்று இர்வின் கேட்டவேளை செரோக்கியால் பதில் கூறிக் கொள்ள முடியவில்லை. தந்தையிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறியிருந்த அவன், ஒருநாள் தந்தையுடன் வனத்துக்குள் நுழைகின்ற வேளை தனது பெயர் வந்த விதம் பற்றித் தன்  தந்தையைக் கேட்டான்.

அமெரிக்காவில்  “செரோக்கிஸ்” என்னும் செவ்விந்திய இனத்தவர் தொண்டு தொட்டு வாழ்ந்து வந்ததாகவும் - வெள்ளையர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன் இவ்வினத்தவர் அங்கு சிறப்பாக வாழ்ந்து வந்தபோதிலும் வெள்ளையர்கள் குடியேற்றமானது அவர்களை அமெரிக்காவின் வளமான பகுதியிலிருந்து வரண்ட பகுதிகளுக்கும் - உலகின் வேறும் பல இடங்களுக்கும் விரட்டியடிக்கச் செய்துவிட்டதாகவும் தந்தை கூறினார்.

ஆதிகாலம் தொட்டு பூர்வக்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து புதிய தேசங்களை கண்டுபிடித்ததாகக் காட்டிக்கொள்வதும், அவர்களை அடிமைகளாக்கிக் கடின வேலைகள் வாங்குவதும் வெள்ளையர்கள் உலகில் காலாகாலமாகச் செய்து வரும் மோசடியான செயலாகும்! 

விரட்டியடிக்கப்பட்ட “செரோக்கிஸ்” இனத்திலிருந்து 
“புரோகோனிஷ்” பகுதிக்குள் வந்து சேர்ந்து திசானா பழங்குடியோடு கலந்து வாழ்ந்து கொண்டிருந்த குடும்பமொன்றின் அழகிய மங்கையொருத்தியை செரோக்கியின் பாட்டன் மண முடித்துள்ளார். அவர்களை நினைவு கூருமுகமாக “சேரோக்கி” என்று அவனுக்குப் பெயர் வைத்ததாகக் கூறிய தந்தை - இன்னொன்றையும் செரோக்கியிடம் கூறிவைத்தார். அது அவரது வேண்டு கோளாகக் கூட இருந்ததெனலாம்!

தனது பெயர் வந்த விவரத்தை தந்தையிடமிருந்து அறிந்து அதனைத் தனது நண்பர் இர்வினிடம் ஒப்புவித்தபோதிலும்,  தந்தை குறிப்பிட்ட அடுத்த வேண்டுகோள் விடயத்தை அவன் இப்போதைக்கு எவரிடமும்  வெளிப்படுத்தவில்லை!

புதுமையான முறையில் அமைந்த நண்பர்களின் இளமைக்கால முதற்சந்திப்பு தொடர்ந்தும் பல வருடங்களாக நீடித்த வண்ணமிருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ஊடகத்துறையை இலக்காகக் கொண்டு தனது கற்கை நெறியை மேற்கொண்டுவரும் இர்வின் - இனங்களாக வேறுபட்டு வாழும் வனவாசிகளது அபூர்வ வாழ்க்கை முறைகளை அறிவதில் கொண்டிருந்த ஆர்வமும் நட்பின் யதார்த்தத்தை துருவங்களான நண்பர்கள் புரிந்து கொண்டமையுமே எனலாம். செரோக்கிக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுப்பதிலும் வெளியுலகைச் சுற்றிக் காட்டி அதில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதிலும் இர்வின் தீவிர ஆர்வம் காட்டி வந்தான்.

தனது இளமைக் காலத்தில் செரோக்கி இர்வினோடு சேர்ந்து மைதானத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பல்வேறு விளையாட்டுச் சாதனங்களிலும் ஆசை தீர விளையாடினான். 

ஆரம்பத்தில் வெளியுலக மனிதர்கள் மைதானத்தை விட்டும் அகலும் வரை காத்திருந்தே இர்வின்  செரோக்கியை மைதானத்துக்குள் கூட்டிச் சென்றபோதிலும், நாட்கள் செல்ல செரோக்கியின் ஆடை அணிகளில் மாற்றத்தை ஏற்படுத்திய மிகவும் சூட்சுமமான முறையில் செரோக்கியை வெளியுலக மனிதர்களில் ஒருவனாக்கி விட்டான் இர்வின்!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post