இலங்கை வரலாற்றுடன் இணைத்துப் பேசப்படும் ஆதிபிதா!

இலங்கை வரலாற்றுடன் இணைத்துப் பேசப்படும் ஆதிபிதா!


கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம்

வரலாறு என்பது, கதை அல்லது காவியங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகும்.

இந்தியா மற்றும்  இலங்கைக்கிடையில் உள்ள  கடல் பகுதி 48 கிலோ மீற்றர் தூரமும், ஒன்று முதல் பத்து மீற்றர் வரையான ஆழமும் கொண்டதாகும்.

இந்தியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள இராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் தலைமன்னாருக்கிடையே உள்ள ஆதாம் பாலம்  என தொன்றுதொட்டு அழைக்கப்பட்டுவரும் மணல் திட்டு, புவியியல் சான்றுகளின்படி ஒரு காலத்தில் சுண்ணாம்புக் கற்களைக்  கொண்டிருந்ததாக அறியப்படுகின்றது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பெருநிலப்பரப்பான ஒரே தளத்தில் இந்தியாவுடன் இலங்கை இணைந்திருந்த காலமொன்றிருந்தது.   கடற்கோள், கடலரிப்பு மற்றும் காற்றின் வேகச்சுழற்சி போன்ற இயற்கைச் செயற்பாட்டினால்  நிலத்தொடர்பு துண்டிக்கப்பட்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளது! 
2024.ஜூன் மாதம் எடுக்கப்பட்ட படம்

இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் இக்கடற்பரப்பு “பாக்குநீரிணை” என்றும்,  ஆழமற்ற 'மணல் திட்டு' தொண்டுதொட்டு “ஆதாம் பாலம்” என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. பின்னர் அது  “இராமர் அணை” யானபோதிலும்,  வரலாற்றுத் தொன்மையை அடிப்படையாகக் கொண்டு, "ஆதாம் பாலம்" நிலை பெற்றுள்ளது!

இப்பரப்பை ஆழமாக்கும் இந்திய அரசின் சமீப காலத்திட்டம் “சேது சமுத்திரத் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தினூடாக,  உலகின் முதல் மனிதர் ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் தனது துணைவியாரான ஹவ்வா (அலை) அவர்களைக் காண, இலங்கையை விட்டும் வெளியேறி,  மக்கா சென்றதாக வரலாறு கூறுகின்றது.

முதல் மனிதன் ஆதம்  பற்றிய வரலாறு  பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து செல்கின்றபோதிலும், அது இலங்கை வரலாற்றுடன் இணைத்துப் பேசப்படுவது 

அல்-குர்ஆன் கூறும் கருத்தின் அடிப்படையில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு முன்னர், மனிதனைத் தவிர புவியில் வேறு உயிரினங்கள் வாழ்ந்தமை பற்றி அறிய முடிகின்றது.

வரலாற்றுக் குறிப்புக்களின் அடிப்படையில் மனித இனம் படைக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரிலிருந்து ஆதிபிதாவான ஆதம் (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறாகின்றது. அன்னாரும் அன்னாரது துணைவி ஹவ்வா (அலை) அவர்களும் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் புவியில் இறங்கினர் என்பது அல்குர்ஆன் உறுதி செய்வதாகும். (ஸூரத்துல் பகரா: வசனம்-35-39)

பிரபல்யமிக்க அல்குர்ஆன் விரிவுரை நூற்கள்  பல இக்கருத்தை விளக்கியபோதிலும்,  பூமியில் எந்த இடம் எனக் கூறுவதில் அவை மௌனம் சாதிக்கின்றன. 

இறங்கிய இடம் பற்றிய குறிப்புக்களில்  மக்கா, ஜித்தா, அறபா எனக் குறிப்பிடப்படுவது  போன்று, ஆதம் (அலை) அவர்களின் காற்பாதம் இலங்கையிலுள்ள ஒரு மலையில் பதிந்துள்ளது எனவும் வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அம்மலை இன்று வரை “ஆதம் மலை” என அழைக்கப்பட்டு வருகின்றது.

ஆதம் (அலை) அவர்கள்  சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இலங்கையிலிருந்து மக்காவுக்குச் சென்று ஹவ்வா(அலை) அவர்களைத் தன்னுடன் அழைத்து வந்ததாகவும், அதனால் அன்னார் போய்வந்த, இரு நாடுகளையும் பிரிக்கும்  மணல் திட்டு  தொண்டுதொற்று "ஆதாம் பாலம்" என்றே அழைக்கப்பட்டு வருவதாகவும் பிரபல வரலாற்றாசிரியர் H.W. கேவ் பின்வரும் கூற்றின் மூலம் உறுதிப்படுத்துகின்றார்:

The name Adam’s Bridge is insignificant and is  due to a legent of the Arabs, who were traders on this  coast in very early times. They believed that Adam lived 
Ceylon after his banishments from Paradise; that they juourneyed thence to Mecca and brought Eve back with him. It was natural that he should have gone to and fro by this passage, as there were no ships in those days. So they called it Adam’s Bridge.  (The Book of Ceylon by H. W.Cave – 1908 Page 638)

'ஆதாமின் பாலம் என்ற பெயர் அற்புதமானது, அரேபியர்களின் வரலாற்றில் மூலம் ஆதாம் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப் பட்டமையும், அன்னார் இலங்கையில்  வாழ்ந்ததாகவும் நம்பப்படுகின்றது. அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இலங்கையிலிருந்து மக்காவுக்குச் சென்று ஏவாளைத் தன்னுடன் அழைத்து வந்தார். அந்தக் காலத்தில் கப்பல்கள் இல்லாததால், இந்தப் பாதையில் அவர் அங்கு கால் நடையில் சென்று வந்திருப்பது இயற்கையானது.  எனவே அரேபியர் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் அந்த வழியை  "ஆதாமின் பாலம்" என்று அழைத்தனர்'   (H.W.Cave எழுதிய The  Book of Ceylon – 1908 பக்கம் 638)
தலைமன்னார் பகுதியில் ஆதம் மற்றும் ஏவாளின் கல்லறைகள் காணப்படுவதாக சமூகவலைத் தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

ஆனால், யூத மித்ராஷிக் இலக்கியம், முதல் மனிதரான ஆதாம் மற்றும் அவரது மனைவி ஏவாள் கேவ் ஆஃப் மக்பேலா என்ற முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றது.

கேவ் ஆஃப் மக்பேலா என்றழைக்கப்படுவது, ஜெருசலத்துக்குத் தெற்கே 30 கிலோ மீற்றர்கள்  தூரத்தில், மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் பழைய நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள குகைத் தொடர்களில் ஒன்றாகும்.

ஏவாளின் கல்லறை  ஸுஊதி அரேபியாவிலுள்ள ஜித்தாவில் அமைந்துள்ள தொல்லியல் தளமொன்றில் இருப்பதாக சில முஸ்லிம்கள் கருதுகின்றனர். 1928ம் ஆண்டில் இளவரசர் பைசல்  இந்தக் கல்லறையை அழித்ததாகவும், யாத்ரீகர்கள் கல்லறையில் பிரார்த்தனை செய்வதை தடுக்கும் நோக்கில் 1975ம் ஆண்டில் அந்த இடம் சமயக் குறவர்களால் சீல் வைக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. 
தலைமன்னாரில் ஆதம் மற்றும் ஏவாளின் கல்லறைகள் காணப்படுவதாகவும், ஆதமின் கல்லறை 40 அடி நீளமும், ஏவாளின் கல்லறை 38 அடி நீளமும் கொண்டது என்றும் சமூகவலைத்தள ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

இங்கு வரும் மக்கள், தலைமன்னார் கடற்கரையை சூரியன் முத்தமிட்டு இந்து சமுத்திரத்தில் மூழ்கும்போது, ​​இந்த மகா சமாதிகளின் தூண்களில் எரியும் தூபம் பரப்பும்  நறுமணத்தை நுகரத் தவறுவதில்லை என இந்த இடத்தைக் காணச்சென்றவர்கள் தமது  முகநூல் பக்கத்தில் பதிவிட்டுமுள்ளனர்.

தலைமன்னார்-ஊர்மனையில் கல்லறை என்று அழைக்கப்படுவது நாற்புறமும்  சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வகப் பகுதியில் உள்ள  மணலில்  பச்சைத் துணியால் மூடப்பட்ட  இரண்டு நீண்ட அரை உருளை கட்டமைப்பாகும். ஒன்றின் நீளம் 40 அடிகளாகும்;  மற்றையது 38 அடிகளாகும்;  சுவர்களால் சூழப்பட்ட செவ்வகப் பகுதிக்குள்  786 - 1968 பொறிக்கப்பட்ட சிமெண்டால் செய்யப்பட்ட படகு ஒன்றும் உள்ளதாம். 

கூகுல் சேர்ச்சின்போது  காணப்பட்ட இன்னொரு பதிவின்படி, இரண்டு உயரமான உடன்பிறப்புக்கள் படகில் வந்து தலைமன்னாரில் இறங்கியுள்ளனர்.  அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது, அவர்கள் இறந்தவுடன் குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டனர் என்றும் காலப்போக்கில், உயரமான அந்த உடன்பிறப்புகளுக்கு அப்பகுதி முஸ்லிம்கள் இரண்டு கல்லறைகளை உருவாக்கியதாகவும் அறிய முடிகின்றது. அவர்கள் பயணித்ததாகக் கூறப்படும், அங்கு வைக்கப்பட்டுள்ள சிமென்ட் படகில் 1968 என்று குறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட ஆண்டில்தான் அவர்கள் வந்திருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

அதனால் இந்தக் கல்லறைகளுக்கும் ஆதிபிதாக்களுக்கும்  சம்பந்தம் இருக்க எவ்வித வாய்ப்புமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது!

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post