Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா பின்னங்கால் வைக்க வெச்சுட்டாங்க.. பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் 3 காரணம்.. பாபர் வருத்தம்


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 6ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா தோற்கடித்தது. அமெரிக்காவின் டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 44, ஷடாப் கான் 40, சாகின் அப்ரிடி 23* ரன்கள் எடுத்தனர். 

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனக் பட்டேல் 50, ஆன்ட்ரிஸ் கவுஸ் 35, ஆரோன் ஜோன்ஸ் 36*, நிதீஷ் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதனால் அமெரிக்காவும் சரியாக 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்தார்.

ஆனால் அந்த ஓவரை வீசிய முகமது அமீர் பாகிஸ்தான் வீரர்களின் சுமாரான ஃபீல்டிங் காரணமாக மொத்தம் 8 ஒயிட் ரன்களை வழங்கி சொதப்பினார். அதனால் அமெரிக்கா சூப்பர் ஓவரில் 18/1 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்திய பாகிஸ்தானுக்கு நேத்ராவல்கர் 1 விக்கெட் எடுத்து 13 ரன்கள் மட்டுமே கொடுத்து அமெரிக்காவை த்ரில் வெற்றி பெற வைத்தார். 

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அமெரிக்கா வரலாறு படைத்தது. மறுபுறம் டி20 உலகக் கோப்பையில் உறுப்பு நாட்டு கிரிக்கெட் அணியிடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. இந்நிலையில் முதல் 6 ஓவரில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடத் தவறியதும் பவுலிங்கில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுக்காததும் தோல்வியை கொடுத்ததாக பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களை பின்னங்காலை வைக்க வைத்தது. அந்த நேரங்களில் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். பந்து வீச்சிலும் முதல் 6 ஓவரில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை” 

“மிடில் ஓவர்களில் எங்களுடைய ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்காதது தோல்விக்கு காரணமானது. வெற்றிக்கான முழு பாராட்டுக்களும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பிட்ச் கொஞ்சம் ஈரப்பதமாக இருதலை பட்சமாக இருந்தது. இருப்பினும் இதை நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

crictamil


 



Post a Comment

0 Comments