பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் - AI ஸ்டீவ்!

பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் - AI ஸ்டீவ்!


புரட்சிகரமான  செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் இப்போது எல்லாத் துறைகளிலும் உலகை ஆக்கிரமித்து விட்டது.

அந்தவகையில்  போர்க் கருவிகளை இயக்குதல், போர்ப் பயிற்சித் திட்டம் மட்டுமன்றி, சினிமாத்துறை, செய்தி வாசிப்பு, இசையமைப்புடன் கூடிய பாடல்கள் உருவாக்கம் போன்ற சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்  நுழைந்து சக்கைப் போடு போடுகின்றது. 

கல்ஹின்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் "வேட்டை" மின்னிதழே  முதன் முதலாக இலங்கையில்  AI செய்தி வாசிப்பாளரை அறிமுகப் படுத்தியது. மட்டுமன்றி, செம்மைத்துளியான், மேமன்கவி, சக்திரியாஸ், R.S. கலா மற்றும் இந்தியக் கவிஞர் பாபாராஜ் போன்றோர் இயற்றிய பாடல்வரிகளைக் கொண்டு AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இசையமைத்துப் பாடிய பாடல்களை தனது VTV தளத்தினூடாக வெளியிட்டு நேயர்களின் அபிமானத்தைப் பெற்றது!
தற்போது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரிலும் கூட,  இரு சாராரும் AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இலக்குகளை நுண்ணியமாகக் கண்டறிந்து, தாக்கி வருகின்றனர். 

அந்தவகையில் இங்கு இத்தொழில் நுட்பம் அழிவுப் பாதையில் பிரயோகிக்கப்படுவது வேதனைதரும் விடயமாகும்.
பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.

அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும், வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாக அண்மைக்காலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில்  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு செயற்கை நுண்ணறிவு வேட்பாளர்  (AI ஸ்டீவ்) ஒருவருக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் தேசியத் தேர்தலில் பிரைட்டன் பெவிலியன் தொகுதிக்கான வாக்குச் சீட்டில்   "AI ஸ்டீவ்" தோன்றும்.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட், செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி, அதனைக் கொண்டு தனது பிரச்சாரத்தை நடாத்தி வருகிறார்.

AI ஸ்டீவ்வால் ஒரே நேரத்தில் 10,000 உரையாடல்களை நடத்த முடியும் என்றும், வரும் அழைப்புகளுக்கு எப்போதும் உடன் பதில்தரும் என்கின்றார் திரு. எண்டாகாட். 
இது நரம்பியல் குரல் மூலம் இயக்கப்படுகிறது, AI ஸ்டீவ்-  LGBTQ உரிமைகள், வீடுகள், குப்பை சேகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், சைக்கிள் ஓடு பாதைகள் மற்றும் குடியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் வாக்காளர்களுடன் நிகழ்நேர விவாதத்தில் ஈடுபடுவதோடு,  பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு கொள்கை வளக்கங்களையும் வழங்கும். 

அதனால், வாக்காளர்கள் வேட்பாளருடன் தொடர்பு கொள்ளவும், கொள்கைகள் பற்றி விவாதிக்கவும், தொடர்ச்சியான தகவல்தொடர்பு மற்றும் பொதுத் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தன்மையை "AI ஸ்டீவ்" உறுதிப்படுத்துகின்றது!

வரவிருக்கும் பிரித்தானியாவின் தேர்தலின் மூலம் உலகின் முதல் AI சட்டமியற்றுபவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பிரித்தானிய வாக்காளர் பெறுவர்.

நரம்பியல் குரலை இயக்கும் எண்டாகாட், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் அதிகமான AI வேட்பாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் AI ஸ்டீவ் எப்படியாவது வெற்றி பெற்றால், உலகின் முதல் AI சட்டமியற்றுபவர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.  

"AI ஸ்டீவ்"  வெற்றி பெறும் பட்சத்தில், திரு.எண்டாகாட்டே நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவார் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 

மேலும் அந்நாட்டு அரசாங்கம் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு மேலும் AI வேட்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளை உலகில் AI வேட்பாளர், தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

செம்மைத்துளியான்


 



1 Comments

  1. வாவ் நல்ல சிந்தனை இதை தீய வழியில் பயன் படுத்தாமல் இருப்பின் நன்மையே இங்கும் வேட்டை தடம் பதித்ததில் மகிழ்ச்சி வேட்டைக்கு வாழ்த்துகள் என் பெயரும் சிறு புள்ளியாய் ஒட்டிக் கொண்டதில் பெருமையே நன்றி அண்ணா

    ReplyDelete
Previous Post Next Post