லெபனான் மீதான தாக்குதல் ஒன்றுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்த நிலையில் பதிலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பும் போர் எச்சரிக்கை விடுத்ததால், முழு அளவிலான போர் மூழலாம் என்று அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
'இது எதிர்காலத்தில் ஒரு பிராந்தியப் போருக்கு வழிவகுக்கலாம்' என்ற பொருள்பட அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் 23ம் திகதி வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கட் குண்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டது. அதனை ஒப்புக் கொண்ட இஸ்ரேல், தெற்கு லெபனானில் தாம் நடாத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லாப் போராளி ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
2023 ஒக்டோபர் 7ம் திகதி போர் தொடங்கியது முதல் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், இப்போது இஸ்ரேல்-லெபனான் போர் மூழும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ரஃபாவில் இடம்பெற்று வந்த தீவிர மோதல்கள் முடிவை எட்டி இருந்தாலும், அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும், ஹமாஸ் அமைப்பை அதிகாரத்திலிருந்து முழுமையாக வெளியேற்றும்வரை போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாவுடனான மோதல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் லெபனானுடனான எல்லைப் பகுதியில் துருப்புகளை நிலைநிறுத்தப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
"பலஸ்தீன நாடு ஒன்றை நிறுவுவதற்கோ, பலஸ்தீன அதிகார சபையிடம் காஸாவைக் கையளிக்கவோ தான் தயாரில்லை" என்று அவர் கூறியிருப்பது வெகுளித்தனமானது என்றுதான் குறிப்பிட வேண்டும்.
ரஃபாவில் மோதல்கள் தீவிரம் பெற்றிருப்பதாகவும், இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ள காஸா மக்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் காஸா அம்புலன்ஸ் மற்றும் அவசரப்பிரிவுப் பணிப்பாளர் ஹனி அல்-ஜப்ராவி கொல்லப்பட்டுள்ளார்.
‘மேற்கு ரஃபாவில் தல் அல்-ஸுல்தானின் நிலை அபாயகரமாக உள்ளது. தமது வீடுகளை விட்டு வேளியேற முயற்சிப்பவர்களை இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் துரத்துவதோடு, அல்–மவாஸியின் பகுதிகளை டாங்கிகள் கொண்ட துருப்புக்கள் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன’ என்று ரஃபா குடியிருப்பாளர் ஒருவர், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘வீதிகளில் மக்கள் கொல்லப்படுவது பற்றி எமக்குத் தெரியவருவதோடு ஆக்கிரமிப்பாளர்களால் வீடுகள் பல அழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்’ என்றும் அந்தக் குடியிருப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காஸாவில் படையினர் பல மாதங்களுக்கு முன்னரே படை நடவடிக்கையை நிறைவு செய்ததாக இஸ்ரேல் கூறியபோதும் காஸா நகரின் செய்தூன் புறநகர் பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் மீண்டும் ஒருமுறை முன்னேறி வருவதாகவும் பல பகுதிகளில் சரமாரி தாக்குதல்களை நடத்துவதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் காஸாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,600ஐயும் தாண்டி விட்டதோடு 86 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் 21,000 வரையான பாலஸ்தீனர்கள் காணாமல்போயிருப்பதாக 'சிறுவர்களைப் பாதுகாப்போம் அமைப்பு' வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுள் இடிபாடுகளில் சிக்கி மரணித்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படும் 4,000 வரையான சிறுவர்கள் உள்ளடங்குவதோடு 17,000 சிறுவர்கள் துணையின்றி மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டும் பிரிந்துள்ளனர் என்றும் அந்தத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments