மழைக் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி சளி பிரச்னை உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், மூக்கு அடைத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
இதன் பிறகு, மூக்கு மூலம் சுவாசிப்பது கடினமாகி சில சமயம் நாம் வாய் மூலம் மூச்சு விடுவோம். இப்படி வாய் மூலம் சுவாசிப்பது ஆரோக்கியமானதா? இப்படி சுவாசிக்கும் போது உடலுக்கு என்ன நடக்கும்? இதுகுறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
ஒரு நாளில் சுமார் 10,000 முதல் 12,000 லிட்டர் வரையிலான காற்றை நாம் சுவாசிக்கிறோம். இந்த காற்றில் தூசு, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்றவையும் இருக்கும். இவை, சுவாசக் குழாய் மூலம் நுரையீரலை சென்றடைகின்றன.
எனினும், இதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நமது சுவாச அமைப்புக்கு இந்த மாசுக்களை எப்படி சுத்தம் செய்வது என தெரியும்.
மூன்று மைக்ரானுக்கும் குறைந்த அளவிலான துகள்கள் மட்டுமே சுவாச மண்டலத்தைக் கடந்து நுரையீரலை சென்றடைய முடியும்.
நாம் சுவாசிக்கும் காற்றுடன் உள்நுழையும் மாசு மற்றும் நுண்ணுயிர்களை எப்படி நமது சுவாச மண்டலம் வடிகட்டுகிறது? இந்த கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன், முதலில் நீங்கள் சிலியா (Cilia) எனும் சூப்பர் ஹீரோ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
சிலியா என்பவை மயிர்க்கால் போன்ற சன்னமான அமைப்பு கொண்டதாகும்.
நமது சுவாச குழாயில் இருக்கும் சளியில் (Mucus) ஆயிரக்கணக்கில் இந்த சிலியா இருக்கும். மூக்கின் உள்ளே இருக்கும் சளியின் ஒவ்வொரு செல்லிலும் 25 முதல் 35 என்ற எண்ணிக்கையில் சிலியாக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிலியாவின் நீளம் ஐந்து முதல் ஏழு மைக்ரான் அளவில் இருக்கும்.
செல் சவ்வுகளில் காணப்படும் இவை ஒரு பிரஷ் போல செயற்படுகின்றன. இவற்றின் வேலையே, 0.5 மி.மி குறைவான தடிமனில் இருக்கும் நுண்ணுயிர்களின் ஊடுருவல்களை தடுப்பது தான்.
இதன் விளைவாக, வடிகட்டுதல் நடக்கிறது மற்றும் நுண்ணுயிர்கள் மூக்கின் வழியே வெளியேற்றப்படுகின்றன.
மூக்கில் இருக்கும் வடிகட்டிகள்
மறுபுறம், மூக்கில் இருக்கும் திசுக்கள் காற்றின் மூலம் பரவும் நுண்ணுயிர்களை வடிகட்டுவதற்கு ஏற்றவை ஆகும். மூக்கில் இருக்கும் சளி (Mucus) சில நுண்ணுயிர்களை உள்நுழைய அனுமதிக்கிறது. முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தாத நுண்ணுயிர்களை உடலுக்குள் அனுமதிக்கிறது.
சளியை கடந்து உள்ளே செல்லும், நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்களை தடுப்பதில் டைப்-பி வகை செல்கள் உற்பத்தி செய்யும் ஆன்டிபாடிகள் பெரும்பங்காற்றுகின்றன.
வாய் வழியாக சுவாசிக்கும் போது என்ன நடக்கிறது?
வாயின் முக்கிய பயன்பாடு உணவு உட்கொள்வது மட்டுமே. வாயில் சிலியா போன்ற காற்றை வடிகட்டும் அமைப்புகள் இல்லை.
இந்த சிலியா அமைப்பு உணவில் இருந்து வரும் நுண்ணுயிர்கள் நம் உடலை பாதிக்காமல் தடுக்கிறது.
இதனால் தான் நாம் வாய் வழியே சுவாசிக்க கூடாது.
நீண்ட நேரம் நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நடக்கும்?
ஒருசில மரபியல் மாற்றங்களால் மற்றும் சுவாசக் குழாய் பிரச்னைகள் காரணமாக சிலர் வாய் வழியே சுவாசிக்கும் பழக்கம் கொண்டிருப்பர்.
உறக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளும் சில சமயம் வாய் வழியே சுவாசிக்க காரணமாக அமையலாம்.
ஓர் ஆய்வின் மூலம் வாய் வழியாக நீண்ட காலம் சுவாசிக்கும் பழக்கம் கொண்ட சிறார்களுக்கு முகத்தின் எலும்புகளில் பாதிப்பு தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
வாய் வழியாக சுவாசிப்பது பெரியவர்கள் இடையே முகத்தின் தசை மற்றும் கழுத்து வலி, ஏன் தலைவலி ஏற்படவும் காரணமாக அமைகிறது.
2020 ஆம் ஆண்டு வாய் வழியே சுவாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இடையே ஸ்பெயினை சேர்ந்த பல் மருத்துவர்கள் மற்றும் ஸ்டோமாட்டாலஜிஸ்டுகள் (Stomatologists) கல்லூரிகளின் பொது கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில், பங்கெடுத்த 12 வயது நிரம்பிய பாதி சிறுவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னை இருப்பது தெரியவந்தது.
இதே ஆய்வில், பெரியவர்கள் சுவாசிக்க கழுத்தை சற்றே முன்னோக்கி வளைக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டது.
மூக்கு மூலம் சுவாசிப்பதன் நன்மைகள் என்ன என்பது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வாய் வழியே சுவாசித்து பாருங்கள். மூக்கின் மூலம் சுவாசிப்பது தான் இயற்கையானது. வாய் வழியே சுவாசிப்பது நம் உடலை நிர்பந்திப்பது போலாகும்.
எனினும், நிபுணர்கள் அவசர சூழல்களில் வாய் மூலம் சுவாசிக்கலாம் என பரிந்துரை செய்கின்றனர்.
bbc
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments