பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 32 ஆண்டுகள் வரை சட்டப் போராட்டம் நடத்திய ஒரு துணிச்சலான பெண்ணின் கதை.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
“அப்போது எனக்கு 18 வயது. பாட்டு கேசட் வாங்க சந்தைக்குப் போயிருந்தேன். அப்போது நண்பகல் சுமார் 12 மணி இருக்கும். என் பக்கத்து வீட்டுக்காரர் திடீரென அங்கு வந்து என் கையிலிருந்து இரண்டு கேசட்டுகளையும் பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார். நான் பின்தொடர்ந்து ஓடினேன். அவரும் அவரைத் துரத்திச் சென்ற நானும் இடிபாடுகள் இருந்த ஒரு பகுதியை அடைந்தோம்.”
அந்த இடிபாடுகளில் ஏற்கெனவே ஏழு-எட்டு பேர் இருந்தனர். என் வாயையும் இரண்டு கைகளையும் அவர்கள் கட்டினார்கள்.
அவர்கள் அனைவரும் என்னைப் பாலியல் வன்புணர்வு செய்து என்னை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்தனர். என்னை வன்புணர்வு செய்துவிட்டு இருநூறு ரூபாய் கொடுத்து லிப்ஸ்டிக், பவுடர் வாங்கிக் கொள்ளுமாறு சொன்னார்கள். நான் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்.
அந்த இடிபாடுகளில் இருந்து வெளியேற இரண்டு வழிகள் இருந்தன. அவர்கள் என்னை மற்றொரு கதவு வழியாக வெளியே விட்டனர். அப்போது மாலை நான்கு மணி.
இதுபற்றிக் கூறும்போது சஞ்சனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கண்கள் குளமாகின. அவரது கைகள் நடுங்கின. கண்கள் நிலத்தைப் பார்த்தபடி இருந்தன.
கடந்த 1992ஆம் ஆண்டு ராஜஸ்தானின் அஜ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 16 பேரில் சஞ்சனாவும் ஒருவர்.
அந்தக் கயவர்கள் இந்தச் சிறுமிகளைப் பல நாட்கள் பிளாக்மெயில் செய்தனர். நகரில் சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விநியோகிக்கத் தொடங்கினர்.
விஷயம் வெளிச்சத்திற்கு
வந்தது எப்படி?
கடந்த 1992 ஏப்ரல்-மே மாதத்தில் தைனிக் நவ்ஜோதி என்ற நாளேடு இந்த விஷயத்தை அம்பலப்படுத்தி செய்திகளை வெளியிட ஆரம்பித்தது.
“செய்தி வெளி வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த பிளாக்மெயில் நடந்து கொண்டிருந்தது. இது பற்றிய தகவல்கள் மாவட்ட காவல்துறை, உளவுத்துறை மற்றும் மாநில அரசுக்கு ஏற்கெனவே சென்றிருந்தன. ஆனால் அனைவரும் அமைதியாக இருந்தனர்,” என்று அந்த செய்தித்தாளில் பணிபுரியும் செய்தியாளர் சந்தோஷ் குப்தா பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
மாநிலத்தின் அப்போதைய பைரவ் சிங் ஷெகாவத் அரசு, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிஐடி-குற்றப்பிரிவிடம் விசாரணையை ஒப்படைத்தது.
சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அஜ்மீர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், நஃபீஸ் சிஷ்டி, நசீம் என்கிற டார்ஜன், சலீம் சிஷ்டி, இக்பால் பாடி, சோஹைல் கனி மற்றும் சையத் ஜமீர் ஹுசைன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் சிலர் தலைமறைவாக உள்ளனர். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு உள்ளது. சிலர் தண்டனையை முடித்துவிட்டனர். சிலர் சிறையில் உள்ளனர்.
சஞ்சனாவை அந்த இடிபாடுகளுக்கு அழைத்துச் சென்ற அண்டை வீட்டுக்காரரின் பெயர் கைலாஷ் சோனி. அவருக்கும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு பற்றிப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் வீரேந்திர சிங் ராத்தோர், "கைலாஷ் சோனிக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர் சுமார் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால், உயர்நீதிமன்றம் கைலாஷ் சோனியை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது," என்று கூறினார்.
”நான் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது, ஆனால் தாமதமாக,” என்கிறார் சஞ்சனா.
இப்படிக் கூறிய பிறகு சஞ்சனா கதறி அழ ஆரம்பித்தார். இதற்கிடையில் சஞ்சனாவின் பெற்றோர், அண்ணன், அண்ணி ஆகியோர் இறந்துவிட்டனர். இந்தச் சம்பவம் பற்றி சஞ்சனா தனது குடும்பத்தினரிடம் கூறவில்லை.
“அவர்கள் என்னைப் பயமுறுத்தினார்கள். என்னை மிரட்டினார்கள், நான் என் சகோதரர்களிடம் சொன்னால் அவர்களைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவோம் என்று சொன்னார்கள்” என்று பயந்த குரலில் சஞ்சனா சொன்னார். ஆனால் இந்தத் தகவல் எப்படியோ குடும்பத்தினரை எட்டியது.
”மிரட்டல்களால் பயந்துபோனேன். அதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் சம்பவம் நடந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வீட்டுக்கு வந்துவிட்டனர். அப்போதுதான் குடும்பத்திற்கு விஷயம் தெரிய வந்தது," என்று அவர் கூறினார்.
தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தின் வலியை விவரிக்கும்போது அவரது முகம் வெளிறிப் போனது.
செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கவில்லை.
ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமானால் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில போலீசாரும் எடுத்துக் கூறினர்.
அரசு வழக்கறிஞர் வீரேந்திர சிங் ராத்தோர், "32 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நீதி கிடைக்கச் செய்ததில் சஞ்சனாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது’’ என்கிறார். இந்த வழக்கில் மூன்று சாட்சிகள் இருந்தனர். அதில் சஞ்சனாவும் ஒருவர்.
விவாகரத்து செய்த கணவர்
இதற்கிடையில் சஞ்சனாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.
சஞ்சனா இந்த உறவை முழு நம்பிக்கையுடனும் உண்மையுடனும் தொடங்க விரும்பினார். அந்தச் சம்பவத்தைத் தனது கணவரிடம் இருந்து மறைக்க அவர் விரும்பவில்லை.
“பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன. கைகளில் மருதாணியின் நிறம்கூட மங்கியிருக்கவில்லை. எல்லாவற்றையும் கேட்ட பிறகு அவர் எதுவும் பேசவில்லை."
"ஆனால் மறுநாள் காலையில் உன்னை உன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னார். ஏமாற்றி என்னை என் வீட்டிற்கு அழைத்து வந்தார். பிறகு விவாகரத்து செய்துவிட்டார். என் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை இருண்டுவிட்டதைப் போலத் தோன்றியது,” என்று சஞ்சனா குறிப்பிட்டார்.
சஞ்சனா காலப்போக்கில் தன்னைத் தேற்றிக்கொண்டு அடுத்த நான்கு ஆண்டுகளை ஓட்டினார். இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகளும் அந்த நேரத்தில் நடக்கத் தொடங்கின. சஞ்சனாவுடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் சுவரில் சில புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
ஒரு புகைப்படத்தைச் சுட்டிக்காட்டிய சஞ்சனா, "எனக்கு 28 வயது ஆனபோது, குடும்பத்தினர் அவருடன் எனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர், நான் அவருடைய மூன்றாவது மனைவி," என்று கூறினார்.
“சிறிது காலத்திற்குப் பிறகு எனக்கு ஒரு மகன் பிறந்தான். வாழ்க்கை அப்போதுதான் தொடங்கியது போலத் தோன்றியது.”
“எனக்கு என்ன நடந்தது என்பது எனது இரண்டாவது கணவருக்கு எப்படியோ தெரிய வந்தது. அதன் பிறகு அவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு என் பத்து மாதக் குழந்தையையும் என்னிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டார்,” என்று சஞ்சனா கூறினார்.
தன் குழந்தையின் புகைப்படத்தை வருடியபடி அவர், “இப்போது அவனுக்கு 22 வயதாகிறது. இந்தியாவிற்கு வெளியே ஒரு நாட்டில் வாழ்கிறான். பெயரளவில் மட்டுமே அவன் எனது மகன்,” என்று சொன்னார்.
'இலவச உணவுப் பொருட்களால்
நாட்கள் கழிகின்றன'
சஞ்சனா தற்போது ஒரு வாடகை அறையில் வசிக்கிறார். குறைவான வசதிகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
"ஓய்வூதியம் மற்றும் இலவச உணவுப் பொருட்கள் மூலம் வாழ்க்கையைக் கழிக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
பணம் சம்பாதிக்க அவரிடம் வேலை இல்லை. சஞ்சனா அதிகம் வெளியில் செல்வதில்லை. வயது ஏற ஏற நோய்களும் வர ஆரம்பித்தன.
"அந்தச் சம்பவத்திற்குப் பிறகு உங்கள் மனதில் என்ன எண்ணம் இருந்தது?" என்று கேட்டபோது, “நான் அப்போது மிகவும் சிறியவள். எனக்கு எதுவும் புரியவில்லை. அப்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்,” என்று அவர் பதில் அளித்தார்.
“கடந்த 32 ஆண்டுகளில் யாரும் எனக்கு உதவவில்லை. நான் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்கச் செல்ல வேண்டியிருந்தபோது என் சித்தப்பா என்னை அழைத்துச் சென்றார். அவர்தான் என்னை முதல் தடவையாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரும் இறந்துவிட்டார்,” என்று மிகுந்த சோகத்துடன் சஞ்சனா தெரிவித்தார்.
“கடந்த 2015ஆம் ஆண்டு வாக்குமூலம் அளிக்க நான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டேன். நீதிமன்ற ஆவணங்களைக் கொண்டு வந்த காவலரிடம் ’நான் யாருடன் நீதிமன்றத்திற்கு வருவது, என்னை அழைத்து வர யாரும் இல்லை’ என்று சொன்னேன். பிறகு அவரே என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்," என்று அவர் கூறினார்.
திடீரென்று உணர்ச்சிவசப்பட்ட அவர், “கடந்துபோன இந்த ஆண்டுகளில் நான் நிறைய துக்கங்களைப் பார்த்தேன். என் அன்புக்குரியவர்கள் என்னைவிட்டுப் பிரிந்து இறந்து போவதைப் பார்த்தேன். இனி எஞ்சியிருக்கும் வாழ்க்கையும் இப்படித்தான் கழியும். என் தலையெழுத்தே இப்படி இருக்கும்போது வேறு என்ன செய்ய முடியும்,” என்றார்.
இவ்வளவு நீண்ட போராட்டம் நடத்துவதற்கான மன உறுதி எங்கிருந்து வந்தது?
இந்தக் கேள்விக்கான சஞ்சனாவின் பதில்:
“ஊடகங்கள் போராடின. அவர்களிடமிருந்து ஊக்கம் கிடைத்ததால் நான் நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து சென்றேன். அங்கு என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கு நான் பதிலளித்தேன்,” என்று குறிப்பிட்டார்.
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments