Ticker

6/recent/ticker-posts

2024 ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் வெற்றியடைவார்களா?


இலங்கை உலகிலேயே ‘வங்குரோத்து’ நிலை அடைந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு வருவதற்குக் காரணமாக இருந்தனவாக  இனத்துவேசத்தை வளர்த்தல், அரச உடைமைகள் சூரையாடுதலும், சூறையாடப்படும்போது  கண்டும் காணாதிருத்தலும், அசிங்கத்தனமான ஆட்சியாளர்களை ஆட்சிபீடம் ஏற்றுதல் 
போன்ற இன்னோரன்னவற்றைக் குறிப்பிடலாம்.
  
மக்கள் இவற்றை நன்கு  உணர்ந்து சரியான தலைவரையோ பிரதிநிதிகளையோ தேர்ந்தெடுப்பதற்கு எப்போது தமது வாக்குச் சீட்டில் புள்ளி இடுவார்களோ அப்போதுதான் நாடு சுபீட்ச நிலையடையும்! 
  
அஹிம்சைவழிப் போராட்டம்
அதற்கான அடித்தளமாக இந்நாட்டு இளைஞர்கள்  இரண்டு வருடங்களுக்கு முன் அகிம்சைவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முன்னுதாரணமாகக் குறிப்பிடலாம்!
  
நாட்டு மக்கள் இன, மத, கட்சி பேதங்களை  மறந்து  போராட்டக்காரர்களுக்கு அநுசரணையாக நின்று,  அசிங்கத்தனமான ஆட்சியாளர்களின் கரங்களிலிருந்து நாட்டை  மீட்டெடுத்தார்கள்.
  
மீட்டெடுக்கப்பட்ட நாட்டை நல்லவர்களின் கரங்களில் ஒப்படைத்து,  சுபீட்சத்தின்பால்  கொண்டுசெல்வது இங்கு பிறந்து வளர்ந்த,  தாய் நாட்டை  நேசிக்கும் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்!
  
பொதுவாகவே இந்நாட்டு சிங்கள - பௌத்தர்கள் நல்லவர்கள்!
  
2019 ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் முஸ்லிம்கள் மீது  சேறுபூசப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட வேளைகளிலும் கூட, தனிப்பட்ட ரீதியாக  அவர்களுள் அதிகமானோர்  முஸ்லிம்களுக்காக அனுதாபப்பட்டார்கள்!

அறிந்திருந்தபோதிலும்,  ராஜபக்ஷாக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அபரிதமான நம்பிக்கையும், அபிமானமும் மட்டுமல்லாது, ராஜபக்ஷாக்களின் அடிவருடிகளால்  மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான தொடர் பிரசாரமாகவிருந்த  “இந்நாட்டை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என்ற தொனிப் பொருளுடனான கோஷமுமே  இலட்சக்கணக்கான மக்களை ஏமாற வைத்து, ராஜபக்ஷாக்களுக்கு வாக்களிக்க வைத்தது! 
  
அந்த வகையில் தமிழ் மக்களோ, முஸ்லிம்களோ அவர்களுக்கு வாக்களிக்கவில்லை!  இதை கோட்டாபயே அனுராதபுரத்தில் நடைபெற்ற தனது பதவியேற்பு வைபவத்தின்போது பகிரங்கமாகவே அறிவித்தார்!
  
மக்கள் பட்ட இன்னல்கள்

காலப்போக்கில் நாட்டு மக்கள் சகல துறைகளிலும் இக்கட்டான சூழலை அனுபவிக்கும் நிலைக்கு வந்து, நாடு பாரியதொரு பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டது! 

சூறையாடப்பட்டு, காலியாகிப்போன திறைசேரியும், அதனால் ஏற்பட்ட செலாவணிப் பற்றாக்குறையும். 
  
மக்கள் தமது அடிப்படைத் தேவைகளான எரிபொருள், பால்மா, சீமெந்து மற்றும் மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான நீண்ட வரிசைகளில் காத்து நின்று அவதிப்பட்ட துயரங்களும், ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும், அவற்றின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததன் மூலம் நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களும்.   
  
வரிந்து கட்டிக்கொண்டு வாக்களித்த இலட்சக் கணக்கானவர்களுடன், வாக்களிக்காத ஏனையவர்களும் சேர்ந்து அரசை வெறுத்தொதுக்க எடுத்த பிராயத்தனங்களும், அவற்றை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களும். 
  
இவ்வாறான இன்னபல நெருக்கடிகள்தான், ஏமாற்றப்பட்டு,  நிர்க்கதியாக்கப்பட்ட மக்களைக் கண் திறக்கவைத்து, உண்மையை உணரச் செய்தது!

ஆட்சியைக் கைவிட்டு ஓட்டம்

இவ்வாறான பல்வேறுபட்ட சிக்கல்களுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்நாட்டு மக்கள் இவற்றிலிருந்து விடுபட்டுவிடும் நோக்கில் இனங்களுக்கிடையிலான  ஒற்றுமை, நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றை மூலகமந்திரமாகக் கொண்டு  ராஜபக்ஷாக்களை வெளியேற்றக் கோஷமிட்டனர்!
  
"ராஜாக்கள்” என்று மிகவும் கௌரவமாக சிம்மாசனமேற்றப்பட்ட “ராஜபக்ஷாக்கள்” உலகில் எந்தவொரு ஆட்சியாளரும் கேட்டிராத கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டு, காலிமுகத்திடலிலும்  நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுகூடிய மக்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டு, ஆட்சியைக் கைவிட்டு விட்டு ஓடச் செய்தனர்.
  
“கத்திபோய் வாள் வந்தது” போன்று, வெற்றிடங்களுக்கான பதில் நியமனங்களுக்கான  நாடகங்கள் நடந்தேறின!
  
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் தனது சாணக்கியத் தனத்தைப் பிரயோகித்து, ரணில் விக்ரமசிங்க பிரதமராக  நியமனம்பெற்று, பின்னர் ஜனாதிபதியானார்!

2018ல் மக்களின் விருப்பத்திற்கு மாறாகப் பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ஷாக்களால் நீக்கப்பட்ட அவர், மறுபடியும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே  அதே ராஜபக்ஷாக்களால் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதொரு  விடயமாகும்!
  
தான் பிரதமராகப் பதவிவகித்த  ஐந்து தடவைகளிலும்  நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும்,  அச்சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி  நல்லாட்சி நடாத்தி நாட்டை முன்னேற்ற முடியாதுபோய்விட்ட அவர், கஜானா காலியாகி விட்டநிலையிலிருந்த இந்நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் மக்களுக்குத் துளியளவும்  நம்பிக்கை இருக்கவில்லை!
  
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைத் தன்னால் மட்டுமே சீர்செய்ய முடியுமென வரிந்து கட்டிக்கொண்டு பதவியேற்ற அவர், கடனுக்குமேல் கடன்களை வாங்கி,  வரிச்சுமைகளை மக்கள்மேல் சுமத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகளை மென்மேலும் உயர்த்தி நாட்டை அதலபாதாலத்திற்குத் தள்ளிச்சென்று கொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை!

பெற்றோலிய விற்பனைக்காக இந்தியக் கம்பனிகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, நாட்டின் வருமானத்தை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல வழி செய்த கடந்தகால அரசாங்கம், இப்போது இந்திய மருந்துக் கம்பனிகளை நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நிறுவி, மருந்துப் பொருட்களின் வருமானத்தை இந்தியாவுக்குத் தாரை வளர்ப்பதன் மூலம், உள்நாட்டு மருந்து வியாபாரிகளை ஒட்டாண்டிகளாக்க வழி செய்யத் திட்டமிட்டிருக்கின்றது. 
  
இதன் மூலம் இந்தியாவைத் திருப்திப் படுத்துவதில் தீவிரம் காட்டும் அரசு, இலங்கை மக்கள் அதலபாதாளம் செல்வதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை!
  
இதனால்தான்  ரணில் விக்ரமசிங்க  நீண்ட  காலம் அதிகாரத்தில் நிலைத்து நிற்கப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர்கள் ஊகம் தெரிவித்து வருகின்றனர்!  

வறுமைப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை  இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்ட நிலையிலும் கூட,  நமது நாடாளுமன்ற அங்கத்தவர்கள்  சுயநலம் கொண்டு  தமக்கான சிறப்புச் சலுகைகளைப் பெறுவதிலேயே தீவிரம் காட்டி வந்தனர்; தற்போதும் காட்டி வருகின்றனர்!
  
ராஜபக்ஷாக்களை விரட்டுவதிலேயே குறியாகவிருந்த திடல் போராட்டக் காரர்களிடமிருந்து  உருப்படியான கொள்கைத்திட்டம் மக்களை வந்தடையவில்லை!  ராஜபக்ஷாக்களின் நகர்வுக்குப் பின்னரான செயற்றிட்டங்களை அவர்கள் மக்கள் மயப்படுத்தவுமில்லை!
  
பாவம் இந்நாட்டு மக்கள்!
பத்தரமுல்லையில் நீண்ட வரிசை!
 
தாய் – தந்தையர்  தமது வயசான காலத்திலும் கூட - எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணை, பால்மாவு, சீமெந்து, மருந்துப்பொருட்கள் போன்ற இன்னோரன்ன அத்தியாவசியப் பொருட்களின் தேவைகளுக்காக வீதியோரங்களில் காத்திருக்க, இவற்றைப் பார்த்து பரிதாபப்பட்டு - விரக்தியின் உயர்மட்டத்திற்கே சென்றுவிட்ட நிலையில், இன்னாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வரத்துடிக்கும் மனோநிலையில் “பாஸ்போர்ட்” காரியாலய வாயில்களில்,  இரவு – பகலாக நீண்ட வரிசைகளில் காத்து நின்றனர்!
  
இப்போதுகூட பத்தரமுல்லையில் நீண்டு செல்லும் வரிசைகளின் வீடியோக்களை சமூகவலைத் தளங்கள் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான ஏழு மாதக் காலப்பகுதியில் தொழில் நிமித்தமாக 175163 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

இதில், ஜூலை மாதத்தில் மாத்திரம் சென்றோர் எண்ணிக்கை 28,003 பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
   
ராஜபக்ஷாக்கள் பதவிக்கு வந்தபோது, ‘நாங்கள் நல்லதோர் தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுத்து விட்டோம், இனி நமக்கு எந்தக் குறையும் வராது’ என்ற மகிழ்ச்சிப் பிரவாகத்தில், நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வெறுமையாகக் கிடந்த மதில்களில்  மிகவும் ஆர்வத்துடன் ஓவியங்களை  வரைந்து,  தமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய இவ்விளைஞர்கள், நாட்டின் பொருளாதாரம் சூரையாடப் பட்டதால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்காக வரிசைகளில் காத்து நின்றதையும், இப்போது பாஸ்போட்டுக்காக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பதையும் எப்போதும் மறந்துவிட மாட்டார்கள்.
 
இந்நாட்டு மக்கள்  சிந்தனைப் போக்கில்லாத நிலையில்,  காலாகாலமாக அரசியல் அடிவருடிகளாக்கப்பட்டமையே  இதற்குக் காரணமாகும்!
  
இவர்களுள் பெரும்பாலானோர் அரசியலென்பது தேர்தல்களோடும், தேர்தல் கூட்டங்களோடும் மட்டுப்பட்டு விடுவதாகக் கருதியவர்கள்!
  
ஏழு தசாப்தங்களாக இம்மக்கள் அரசியலில் ஏமாற்றப்பட்டு வந்தமைக்குக்கு இவர்களிடத்தில் சரியான ’அரசியல் புரிந்துணர்வு'  இல்லாது போனமையே  முக்கிய முதற் காரணமாகும்!
  
இந்நாட்டில் குறிப்பிட்ட சில முட்டாள்களால் இலட்சக்கணக்கான அறிஞர்களையும் புத்திசாலிகளையும் ஏமாற்ற முடியுமாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்!
  
இந்நாட்டில் அரசியலறிவு மிகக்கொண்ட படிப்பறிவற்றவர்களே ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள்.  

அரசியலறிவற்ற அறிவாளிகள்,  இந்தப் படிப்பறிவற்ற வர்களாலேயே ஆளப்பட்டு வருகின்றார்கள்! ஆள்பவர்களைவிட ஆளப்படுபவர்களது அரசியலறிவு எப்போது அதிகமாகிறதோ,  அப்போதுதான் இத்தேசத்தில் அரசியலின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுவது குறையும் என்ற பொருள்பட, தமது கருத்துக்களை சமூக நலன் விரும்பிகள்  ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்!
  
அந்தவகையில் திடல் போராட்டம்  மாற்றத்திற்கான முதற்படியாக இருந்தது; அதுவும் இப்போது இரும்புக் கரம் கொண்டு முடக்கப்பட்டுவிட்டது!
  
அரகலையின் அடுத்த இலக்கு...
 
நீண்ட நாட்கள் கவனிக்கப்படாமல் அழுகிப்போன  காயமொன்றை எப்படி உடனடியாகக் குணப்படுத்த முடியாதோ, அவ்வாறே நீண்ட காலமாக கவனிப்பாரற்று இருந்த  நாட்டின் பொருளாதாரத்தைக்  குறுகியதொரு காலத்துக்குள் மீட்டெடுப்பது கடினம் என்ற யதார்த்தத்தைத் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
  
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அரசாங்கம் செய்த வரிக்குறைப்பு, உரக்கொள்கையினால் ஏற்பட்ட பயிர்ச்செய்கையின் வீழ்ச்சி, வெளிநாடுகளில் உழைத்து அனுப்பும் பணத்திற்கு வகைதொகை கேட்டதால் ஏற்பட்ட வெளிநாட்டில் தொழில் செய்வோரிடமிருந்து வரும் அந்நியச் செலாவணியின் திடீர் சரிவு, “கொவிட் 19” காரணமாக உல்லாசப் பயணத்துறைக்கு  ஏற்பட்ட பாரிய பாதிப்பு மட்டுமல்லாது,  பல்வேறுபட்ட அரச நிறுவன ஊழல்களும், நிதிச்சூறையாடல்களும்  கொள்ளப்படுகின்றன! 
  
இவற்றை சீர்செய்து, நிறைவான பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்குள்  இலங்கையைக் கொண்டுவரக் கூடிய சரியான தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது காலத்தின் தேவையாகும்! அதனால்தான், 'அரகல'யின் அடுத்த கட்டமாக 2024 ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்படுகின்றது!
  
இந்நாட்டை வழிநடாத்திச் செல்லக்கூடிய நல்லதொரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை இலங்கை மக்கள் தவறவிடுவார்களேயானால், எதிர்காலம் சூன்யமாகிவிடும் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து தனது வாக்குச் சீட்டில் 
புள்ளி இடுவது காலத்தின் தேவையாகும்

செம்மைத்துளியான் 



 Ai SONGS

 



Post a Comment

0 Comments