Ticker

6/recent/ticker-posts

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் 9வது ஜனாதிபதி அநுரகுமார!

ஓர் கண்ணோட்டம்.

இலங்கையின் பழைமை வாய்ந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காக இளைய தலைமுறைப் போராளியாக பெரும்பான்மைச் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து களத்தில் இறங்கியவர் அநுரகுமார திசாநாயக்க!

ஆட்சிமுறையின் தார்மீகப் பண்புகளை ஒதுக்கிவிட்டு, ஆட்சிபீடத்தில் தொடர்ந்தும் அமர்ந்திருப்பதற்காக எடுக்கப்பட்ட அரசியல் கலாசாரம் அண்மைக்காலமாக இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களினதும் ஒற்றுமையையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து, பாரிய கடன் சுமைக்குள் நாட்டை அடகுவைக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இவ்வாறான சாக்கடை அரசியலை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டு, புதிய அரசியல் சகாப்தம் ஒன்று உருவாக்கப்படாதவரை இலங்கைக்கு சுபீட்சமில்லை; ஊழல்கள் நிறைந்த நிர்வாகத்தையும், வலுவிழந்த நீதிமையையும், நெறிமுறை தவறிய அரசியற் கலாச்சாரத்தையும் மாற்றுவதற்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அநுரகுமார திசாநாயக்காவுக்கு அரசியல் வரம் வழங்கியுள்ளமை சந்தோஷப்படும் செய்தியாகும்!

ஜே.வீ.பீ. கட்சியின் எழுச்சி

1982ம் ஆண்டு ஒக்தோபர் 20ம் திகதி நடந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர போட்டியிட்ட சந்தர்ப்பம், ஜே. வீ பீ.யின் முதல் தேர்தல் அனுபவமாகும்.

ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியான இத்தேர்தலில்,  ரோஹண விஜேவீர  273,428 வாக்குகள் பெற்றதன் மூலம், குமார் பொன்னம்பலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு வந்ததன் மூலம்,  ஜே.வீ.பீ. கட்சியின் எழுச்சி  ஆரம்பமானது!
1983 கறுப்பு ஜூலை வன்செயல்களை அடுத்து, ஜே  ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் ஜே.வீ.பீ. தடைசெய்யப்பட்டதற்குப் பிறகு, இக்கட்சி மீண்டும் தேர்தலில் 1994ம் ஆண்டில் போட்டியிட முனைந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளர்  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஜே.வீ.பீ. அதன் பிரதான உறுப்பினர்களுள் ஒருவரான நிஹால் கலப்பதியைக் களமிறக்கியது.

இருந்தபோதிலும், 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி' முறையை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்ததன் காரணமாக, ஜே.வீ.பீ. குமாரதுங்கவை ஆதரிக்கத் தீர்மானத்ததையடுத்து கலப்பதி போட்டியிலிருந்து விலகியபோதிலும், அவரின் நியமனப்பத்திரம்  வாபஸ் பெறப்படாததால், அவரது பெயரும், சி்ன்னமும் வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருந்ததனால் அவருக்கு 22749 வாக்குகள் கிடைத்திருந்தன.

அதன் பிறகு, 1999 திஸம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான மக்கள் ஆணையைக் கேட்ட திருமதி குமாரதுங்கவை எதிர்த்து ஜே.வீ.பீ. வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தன குணதிலக 344173 வாக்குகள்  பெற்றார்.

2005ம் ஆண்டு நவம்பர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வீ.பீ. கட்சியானது, சுதந்திரக் கட்சி தலைமையிலான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மஹிந்த ராஜபக்‌ஷவையும், 2010ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் களமிறங்கிய எதிரணியின் பொதுவேட்பாளரான, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவையும், அதேபோன்று, 2015ம் ஆண்டு ஜனவரியில் நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் புதிதாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட, எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவையும் ஆதரித்தது!

ஜே.வி.பி.யால் 2015ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. கல்வியாளர்கள், தொழிலறிஞர்கள், சில கலைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் என அழைக்கப்படுபவை, பௌத்த பிக்குகள், ஜே.வீ.பீ. மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் உட்பட பல அமைப்புகளின் கூட்டணியாக தேசிய மக்கள் சக்தி உருவானது.

இறுதியாக,  2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்‌ஷவை எதிர்த்து, ஜே.வீ.பீ.யின் புதிய பதிப்பான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க போட்டியிட்டு, 418,553  வாக்குகளைப் பெற்று, மூவரைப் பின்தள்ளச் செய்து மூன்றாம் இடத்திற்கு வந்தார்.

'அரகலய' அமைப்பால்  பதவியிழந்த கோட்டாபே ராஜபக்ஷ

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களையும், மலையகத்தின் நுவரெலியாமாவட்டத்தையும் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோட்டாபே ராஜபக்ஷ ஜனாதிபதியாகி, இரண்டு வருடங்கள் கூட நிறைவேறாத நிலையில், காலிமுகத் திடல் 'அரகலய' அமைப்பால் அவர் பதவியிழக்கச் செய்யப்பட்டார். 
நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஜே.வீ.பீ. முதற்தடவையாக 1994 ஆகஸ்ட் தேர்தலில் போட்டியிட்டு மொத்தம் 90,078 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்,  2000ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 518774 வாக்குகளைப் பெற்று பத்து ஆசனங்களையும், 2001ம் ஆண்டு டிஸம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 815353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்!

1994ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  1.13 சதவீத வாக்குகளையும்,  2000ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  6.0 சதவீத வாக்குகளையும்,  2001ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 9.0 சதவீத வாக்குகளையும் பெற்று, படிப்படியாக மக்கள் மனதைக் கவர்ந்து தேர்தல்களில் முன்னேற்றம் கண்டுவந்த தேசிய மக்கள் சக்தி; அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 2019ம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை   எதிர்த்துப் போட்டியிட்டபோது, 3.16 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் களத்தில் அமோக முன்னேற்றம் கண்டு வந்தவர்.

அவர் இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில்  களமிறக்கப்பட்டுள்ள நிலையில், பழம்பெரும் அரசியல்வாதியும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவருமான ஸஜித் பிரேமதாச ஆகியவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராக செயல்பட்ட  அனுரகுமார திசாநாயக்க மேற்குறிப்பிட்ட இருவருக்கும் சவாலாக இருந்தார்.

56 வயது 56 வயதான அநுரகுமார திசாநாயக்க, 1990ம் ஆண்டில் தான் இளைஞராக இருந்தபோது, சோசலிஸ அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

1992ம் ஆண்டில் களனி பல்கலைக் கழகத்தில் இணைந்து பயின்றுள்ள இவர், 1997ம் ஆண்டில் சோசலிஸ இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் நியமனம் பெற்று, 2000ம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

2004ல் இவர் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்ததால், அக்கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகப் பதவி வகித்தார்.

2008ல், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர், 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின், ஏழாவது தேசிய மாநாட்டின்போது, அவ்வமைப்பின் தலைவரானார்.

"இலங்கையானது முன்னெப்போதுமில்லாத நிலையில் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னோக்கிச் செல்லும் அதன் பாதை எளிதானதல்ல; ஆனாலும் ஐக்கியத்துடன் செயல்பட்டால், புதியதொரு தொடக்கத்தை எம்மால் உருவாக்க முடியும். நாடு புத்துயிர் பெறுவதற்கு, தேசிய மறுமலர்ச்சிக்கான ஒரு கூட்டு முயற்சியில் என்னுடன் சேர உங்களை அழைக்கிறேன்" என்ற தொனிப்பொருளுடன் அநுரகுமார திசாநாயக்க இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வரத்தை நாடி நின்றார்!

ஒருமைப்பாட்டுடனும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பணியில் தன்னுடன் இணைவதன் மூலம் நாட்டில் இன்பகரமான ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது.

சிறுபான்மையினர் மீதான 
அடக்குமுறை

நல்லாட்சியின் தோல்வியும், தொடராக இடம்பெற்ற சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும், நாட்டில் நிலவிவரும் பொருளாதார பாதிப்புகள் உட்பட இன்னபல காரணிகளும் அநுரகுமார மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்க வைத்தது!
பேரினவாதக் கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி ஓரளவேனும் சிறுபான்மை இனத்தவருக்கு பாதகமற்ற கட்சி என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மீதும் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை கூட உண்டு.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் மூன்று அல்லது அதற்கு மேலாகப் பிரிகின்றபோது, சிறுபான்மையினரின் 25 சதவீதம் அநுரகுமாரவுக்கு அளிக்கப்பட்டதால் இத்தேர்தலில் அவரால் அமோக வெற்றியீட்ட முடிந்தது.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர திசாநாயக்க அவர்கள், கடந்த காலங்களில் சீர்கெட்டுப்போன ஸ்ரீலங்காவை சீர்படுத்தி, ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முனைப்புடன் செயல்படுவார் என்பது இலங்கை மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

செம்மைத்துளியான்




 Ai SONGS

 



Post a Comment

0 Comments