Ticker

6/recent/ticker-posts

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய கன்னி உரை!


இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க கொழும்பு ஜனாதிபதித் தலைமை செயலகத்தில் 2024 செப்தெம்பர் 23ம் திகதி காலை   பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அவர்களினால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைத்து மக்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய இலங்கையின் நெருக்கடியைத் தான் புரிந்து கொண்டுள்ளதாகவும், இதனைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும்,  சர்வதேசத்தின் ஆதரவும் இதற்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்விற்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதானிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

பதவி பிரமாணம் செய்து கொண்ட பிறகு பேசிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, "உலகின் போக்கிலிருந்து இலங்கை ஒருபோதும் தனித்து செயல்பட முடியாது" என்றார்.

”நம் நாட்டிற்கு சர்வதேச உதவி தேவை என்பது நமக்குத் தெரியும். எவ்வாறான பிரிவுகள் காணப்பட்டாலும், அந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.” என்று அவர் கூறினார்.

"நான் மந்திரவாதி அல்ல; இலங்கையின் சாதாரண குடிமகன்; என்னிடமும் திறமைகளும்  இயலாமைகளும் இருக்கத்தான் செய்கின்றன; எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களும் உள்ளன. உங்களால் ஜனாதிபதி நிலைக்கு வந்துள்ள நான், எனது திறன்களை மேம்படுத்தி,  மேலும் தேவைப்படும் அறிவுகளைப் பெற்று பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,
"நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது. அதற்காக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டு முயற்சியாகும். அதனால், இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது. இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனவும் தெரிவித்தார்.

“ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சம் மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்காக ஒரு ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதுதான். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிடுவதோடு மட்டும் ஜனநாயகம் முடிந்துவிடாது.

ஜனநாயகம் என்பதன் அடிப்படை அம்சம், நம் நாட்டில் அதனை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களின் வலிமையும் அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்காக எனது அதீத அர்ப்பணிப்பை வெளிப்படுத்த நான் தயாராக உள்ளேன் என்பதை எமது நாட்டு மக்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்" என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் ஆணையை ஏற்று ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றியமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவித்தார்!

"நாம் மிகவும் சவாலான நாட்டைப் பொறுப்பேற்கின்றோம் என்பதை ஆணித்தரமாகப் புரிந்துகொள்கிறோம். எமது அரசியல் தூய்மையாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  நல்ல அரசியல் கலாச்சாரத் தேவையை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ளோம்.
நம் நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் குறித்தும்  குடிமக்களுக்கு மிகவும் மோசமான எண்ணம் உள்ளது. எங்கள் தரப்பிலிருந்து, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மேலும் இந்த நாட்டின் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். ஆனால் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் எனக்கு மிக முக்கியமான பணி ஒன்று உள்ளது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். இந்த சவாலை முறியடிக்கும் வகையில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவேன். 

எங்களை ஆதரிக்காத மற்றும் எங்களை நம்பாத குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் எனது நிர்வாகத்தின் போதான எனது பணியாகும்.அதனை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது.

எனவே இதையெல்லாம் நாம் நடைமுறையிலும் அனுபவத்திலும் எதிர்காலத்தில் அனுபவிக்க அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
புதிய ஜனாதிபதி சில மறைமுக வரிகளை குறைப்பதன் மூலம் பொருட்களின் விலைகளை குறைப்பார் என்றும், பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை அளிக்குமுகமாக எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது!

பொறுத்திருந்து பார்ப்போம்!

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments