சென்னையில் ஏஐ ஆய்வகங்களை அமைக்கிறது கூகுள் நிறுவனம்... அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னையில் ஏஐ ஆய்வகங்களை அமைக்கிறது கூகுள் நிறுவனம்... அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!


அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனங்களுக்கு நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 17 நாள் பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்ற நிலையில், 4 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 900 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதேபோல், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது பற்றி அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேசியதாக தெரிவித்துள்ளார். ஆசியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் தமிழ்நாடு முன்னணியில் திகழும் வகையில், பல்வேறு வாய்ப்புகளையும் மற்றும் வணிக ஒப்பந்தங்களையும் வலுப்படுத்தும் முடிவுடன் அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் 20 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறனை வளர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமது இளைஞர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ள டிஆர்பி. ராஜா, இன்றும் பல்வேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post