”தமிழ்நாட்டு கல்வியை பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல்” : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!

”தமிழ்நாட்டு கல்வியை பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல்” : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!


கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

இப்படி தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதனால்தான் ஒன்றிய அரசின் குலக்கல்வியை போதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மேலும் இருமொழி கொள்கையிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளது. தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, ”தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டு கல்வியை பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”தமிழ்நாட்டின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை என்று சிலர் அவதூறு கிளப்புகிறார்கள். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி இருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். இதைப்பிடிக்காத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை குறை சொல்கிறார்கள்.

நமது பாடத்திட்டத்தை குறை சொல்வது என்பது மாணவர்களையும், ஆசிரியர்களையும் குறைசொல்வதற்கு சமம். இதற்கு நமது திராவிட மாடல் அரசும், நமது முதலமைச்சரும் எந்தகாலத்திலும் இடம் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி என்றால் அது தமிழ்நாட்டு கல்விதான்” என பதிலடி கொடுத்துள்ளார்.

kalaignarseithigal


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post