புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-35

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-35


பணப்புழக்கம் செய்யாத வனவாசிகள் பண்டமாற்றின் மூலமே தமது தினசரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்!

ஆனால் உலகத்து வாழ்க்கைக்கு பணம்தான் முக்கியம்; வெளியுலகத்திலிருந்து தான் விரும்பியதை ரெங்க்மாவுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்றால் தன்னிடம் பணம் இருந்தாக வேண்டும்!

இதனை விபரமாக அவன் இர்வினிடம் கூறியபோது, அவனும் உடன் பட்டான்! 

செரோக்கி பகுதிநேரத் தொழில் ஒன்றைச் செய்வதே இதற்கான தீர்வு என்பதை இர்வின் உணர்ந்து கொண்டான்!

இவ்வாறு பலதையும் பேசிக்கொண்டே அவர்கள், தள்ளிவந்த வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு,  இன்றும் புல்வெளிக்கு மத்தியில் இருந்த அந்த விற்பனை அகத்துக்குள்  நுழைந்தனர்.

செரோக்கியையும் இர்வினையும் கண்ட பணிப்பெண்கள் முகமகிழ்வோடு அவர்களை வரவேற்றனர். செரோக்கியின் கைகளிலும் கால்களிலும் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருப்பதைக் கண்ட அவர்களுள் ஒருத்தி - நேற்றைய தினம் ஓரப்பார்வை யோடும், ஏக்கத்தோடும் அவனை வழியனுப்பி வைத்த அதே பணிப்பெண் அதிர்ந்து போனாள்!

நேற்றைய தினம் அவர்கள் அங்கு வந்தபோது வெகுளித்தனமாக செரோக்கியை விழுந்து கவனித்து, அவனிடத்தில் அலாதி கரிசனை எடுத்துக் கொண்டவள் அவள்!

நடந்த சம்பவத்தை இர்வின் குறிப்பிட்டபோது, செரோக்கியிடத்தில் மேலும் அவளுக்குப் பரிவு ஏற்பட்டது!

முதலுதவிப் பிரிவுக்குள் அவனை அழைத்து சென்று, உரசிக்கொண்டே அவனது காயங்களைத் தொற்று நீக்கினாள்! 

அவளிடமிருந்து வந்த செண்ட் வாசனை செரோக்கியின் மூக்கைத் துளைத்தது!

அவன் தன் வாழ்க்கையில் முதன் முதலாக  இந்த வாசனையை நுகர்கின்றான்!

குமட்டல் எடுக்கும் நாற்றத்தை தம்மின வனவாசிகளிடத்தில் நுகர்ந்து பழக்கப்பட்ட செரோக்கிக்கு இதுவொரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும்!

குனிந்தவளாக பணிப்பெண்  அவனது கால்களின் காயங்களுக்குத் தொற்று நீக்கம் செய்து கொண்டிருந்த போது, அவனது கண்கள் அவளை ஊடுருவின. 

அவளது பொன்வண்ண மேனி அவனைக் கிரங்க வைத்தது!

மெலிந்த பொன்னிறமான இவளது தோற்றத்தை கருத்துப் பெருத்த ரெங்க்மாவின் தோற்றத்தோடு  ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான்! 

அந்த விற்பனை பீடத்தில்  அவன் கண்ட கழிவறை - அதற்கு நேரெதிரில் முதலுதவிப் பெட்டகம்  -  அங்கே அவன் பார்த்த மருந்து வகைகள்; அனைத்தும் அவனை வியப்பில் ஆழ்த்தின.

காயம் பட்டால் மூலிகை இலைகளைக் கசக்கித் தடவிக்கொள்ளும் வனவாசிகளுக்கும், இவர்களுக்கு மிடையில் எவ்வளவு இடைவெளி?

வனவாசிகள் ஒருபோதும் கழிவறைகள் உபயோகித்த தில்லை.  காட்டுக்குள் சென்று கழிவிறக்கிவிட்டு, அருகிலிருக்கும் ஓடைகளில் அல்லது குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் கழுவிக் கொள்வார்கள்,  சில வேளைகளில் கழுவாமலே விட்டுவிடுவோரும் உளர்! வனவாசிகளின் வாழ்க்கையை வெளியுலக மக்களது வாழ்க்கையோடு ஒப்பிடுகின்ற போது துயரப்படுவதைத் தவிர, அவனால் வேறெதுவும் செய்து கொள்ள முடியாது!

தம்மினத்தவர்களுக்கு இளம் பிராயம் முதல் முறையாகக் கல்வியறிவூட்டுவதே எதிர்காலத்தில் அவர்கள் வெளி உலக மக்களது வாழ்க்கைக்கு ஓரளவாவது ஒத்த வாழ்க்கையை வாழ வழிசெய்யும்  என்பதை உணர்ந்து கொண்டவனாக - அதற்கான அடித்தளமொன்றைத் தனது சிந்தனைப் பெட்டகத்துக்குள் அடக்கிக் கொண்டான்!

(தொடரும்)

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post