Ticker

6/recent/ticker-posts

இப்படி நடக்கும்னு நான் சத்தியமா எதிர்பாக்கல.. தோல்விக்கு இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணத்தில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது :

உண்மையிலேயே இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸ்சின் போது நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 350 ரன்கள் பின்னடைவை சந்தித்தபோது நிச்சயம் இரண்டு வீரர்கள் நின்று ஆடினால் ஓரளவு முன்னிலை பெற முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் சர்பராஸ் கான், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடிய போது நாங்கள் ஆட்டத்திற்குள் இருந்ததாகவே நினைக்கிறேன்.

நாங்கள் நினைத்திருந்தால் இந்த போட்டியில் எளிதாக இரண்டாவது இன்னிங்சில் சுருண்டிருக்க முடியும். ஆனாலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் திருப்தி அளிக்கிறது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களது முதிர்சியை காண்பித்து இருந்தார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நான்காவது போட்டியில் மட்டுமே விளையாடும் சர்பராஸ் கான் அழுத்தமான சூழ்நிலையிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தவறான முடிவை எடுத்து விட்டேன். ஆனால் 46 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டு விடுவோம் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதுதான் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் சிறப்பாக இருந்தது. இன்னும் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments