Ticker

6/recent/ticker-posts

பூங்காற்று புதிதானது...!


திருவள்ளுவர் பஸ் நிலையம். காலை மணி 5:20. ஊட்டி பஸ்ஸிருந்து இறங்கியவன், தோளிலிருந்த பேக்கை கீழே வைத்துவிட்டு, பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான். வயது நாற்பதை கடந்திருந்தது.

"ஸார்... சவாரி வேணுமா.?" ஆட்டோ டிரைவரின் கண்ணியமான குரல் கேட்டு திரும்பினான்.

"டிரைவர், பக்கத்தில நல்ல லாட்ஜ் ஏதும் உண்டுமா...?"

"ஊருக்கு புதுசுங்களா? இங்கிருந்து நேரா போனீங்கன்னா, ஒரு பிள்ளையார் கோவில் வரும். கோவிலை அடுத்த பெரிய தெருவில லாட்ஜ் நிறைய இருக்குங்க. எல்லாமே ரேட் ஜாஸ்திங்க."

"ரொம்ப நன்றிங்க."

ஆட்டோ டிரைவருக்கு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான்.

மூன்று நிமிடங்களில், லாட்ஜ்கள் இருந்த தெருவை நெருங்கினான். அந்த பெரியதெருவில் வரிசை வரிசையா அமைந்திருந்த லாட்ஜிகளில், நான்கு மாடிகள் கொண்ட லாட்ஜினுள் நுழைந்தான்.

வெளியே நின்றிருந்த பேரர், அவனைப் பார்த்து வணக்கம் சொல்ல, ரிசப்ஷடனில் உட்கார்ந்திருந்தவர் நிமிர்ந்தார்.

"ரூம் கிடைக்குமா...?"

"சிங்கிளா? டபுல்லா, ஸார்?"

"சிங்கிள் ரூம் போதும்."

"எத்தனை நாள் தங்குறீங்க..?"

"ஜஸ்ட்... ஒருநாள் மட்டும் தான்."

"ஒருநாள் வாடகை 'டூ தௌஸண்ட் ருப்பீஸ்'.   ஏசி ரூம் வேணுமின்னா, 'பைவ் ஹண்டரட்' அதிகமா வரும்."

"ஏசி ரூம் வேண்டாம்ங்க."

"ஓகே. ஒரு 'த்ரீ தௌஸண்ட் ரூப்பீஸ்' அட்வான்ஸா கட்டிடுங்க. ரூமை காலி பண்ணும்போது மீதி பணத்தை வாங்கிக்கலாம். உங்க பேரும் அட்ரஸும், மொபைல் நம்பரையும் இந்த நோட்டில் எழுதிடுங்க."

அந்த நீளமான நோட்டில் எழுத  ஆரம்பித்தான்.

"உங்க ஆதார் கார்டை தாங்க. கம்ப்யூட்டரில்   முகவரியை பதிவு செய்யணும். 

ஒரு நிமிடங்கள் கழிந்தது.

"பேரர்... 312-ம் நம்பர் ரூமை காட்டு."

"வாங்க ஸார். லிப்ட்டில் போகலாம்"

மூன்றாவது மாடியை தொட்டதும், லிப்ட் நின்றது.

கதவை திறந்ததும், உள்ளே நுழைந்தான். ரூம் சின்னதா இரண்டு பெட் மற்றும் சகலவசதியுடன் தெரிந்தது.

"ஸார்... டீ, காபி ஏதும் வேணுமா.?"

"ஒரு லைட் டீ, சர்க்கரை குறைச்சலா கொண்டுவா."

"ஓகே, ஸார்."

"ஒருநிமிஷம். இங்கே வேறு ஏதும் கிடைக்குமா.?"

"புரியலை ஸார்.!"

குரலை மெதுவாக தாழ்த்திக்கொண்டு கேட்டான், அவன்.

"பட்சிகள் ஏதும் கிடைக்குமா.?"

"ஸார்... நீங்க நினைக்கிற மாதிரியான லாட்ஜ் இது இல்லீங்க."

"ஓகே... ஸாரி."

"ஸார்... நீங்க போலீஸா..?"

"என்னை பார்த்தா போலீஸா தெரியுதா?சாதாரண மனுசன், பிரதர்."

"ஸாரி... ஸார்! சில நேரம், அவங்க கெடுபிடி அதிகமா இருக்கும். அதான் நீங்க போலீஸான்னா கேட்டேன். இங்கே, விஐபிகளுக்கு மட்டும் தான் பெண்களை சப்ளை பண்ணுவோம். ஆனா... ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கும்."

"ரேட் ஒரு பிராப்ளமே இல்லை. எனக்கு காலைல பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டு ஒரு பிரண்டோட  வீட்டுக்கு போகணும். திரும்பி வர்றதுக்கு ஏழுமணியாயிடும். வந்ததும் உடனே கிளம்ப வேண்டியதுதான். இப்போ இருக்கிற மூணுமணி நேரம் ப்ரீயா இருக்கு. அதான் கேட்டேன்."

"இரண்டுபேர் லைன்ல, இருக்காங்க. அவங்களில் யார்வேணும்ன்னு சொல்லுங்க. ஒருமணி நேரத்தில வந்திடுவாங்க."

சொன்னவன், செல்போனின் கேலரியில் இருந்த பக்கத்தை நோண்ட ஆரம்பித்தான்.

"ஸார்... இதில்ல முதல்ல இருக்கிறவ பேரு மதுமிதா. இரண்டாவது இருக்கிறவ பேரு ராணி."

செல்போனை வாங்கியவன், கேலரியில் இருந்த போட்டோவை பார்த்தான். வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்தை காட்டியது.

"சொல்லுங்க, ஸார். இதில யார் வேணும்? மதுமிதாவா? ராணியா?" சிரித்துக் கொண்டே கேட்டான், பேரர்.

சட்டென்னு சொன்னான்.

"இரண்டு பேரையும் வரச்சொல்லு..."

"ஸ... ஸார்...!"

*******

பத்துநாள்களுக்கு பிறகு.

நேசமணி பூங்காவில் அமர்ந்திருந்தவளின் தோளை தட்டினாள், அவள்.

"ஸாரிடி... கொஞ்சம் லேட்டாயிடிச்சு. ஃப்ரீ பஸ் கிடைக்குமான்னு பார்த்தேன். கூட்டம் அதிகமா இருந்திச்சி. அதான் அடுத்த பஸ்ல ஏறி வந்தேன், ராணி."

"நானும் இப்பதான் வந்தேன். என் மனசு சரியில்லை, மதுமிதா."

"இன்னிக்கு தொழிலுக்கு போகலியா?"

"அதப்பற்றி பேசதான், உன்னை கூப்பிட்டேன். உட்கார், மதுமிதா."

"என்ன விஷயம்? ஏதாவது பிரச்னையா?"

"உடம்பும் முன்புபோல ஒத்துழைக்க மாட்டேங்குது. இந்த தொழில விட்டிடலாம்ன்னு நினைக்கிறேன். ஏன்னா... அன்னிக்கு லாட்ஜில வந்தவன், நம்ம இரண்டுபேரையும் கூப்பிட்டிருக்கான். நாமும் போனோம். எத்தனையோ கஸ்டமரை பார்த்திருக்கோம். எல்லோருக்கும் நம்மோட உடம்பைத் தான் அனுபவச்சிருக்காங்க. ஆனா... வந்தவன், நம்ம இரண்டு பேரோட உடம்பைத் தொடாமலே, ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாயை தந்திட்டு கையெடுத்து கும்பிட்டான். எனக்கே ஆச்சரியமா இருந்தது. இருந்தாலும், அவனோட பார்வை கொஞ்சம் வித்தியாசமா தெரிய ஆரம்பிச்சது எனக்கு."

"என்னடி சொல்றே?"

"ஆனா... அதுதப்பான பார்வை இல்லை. அவன் பேசவேண்டியதை அந்த பார்வையில சொல்லிட்டான், ராணி."

ராணி பேசுவதை ஆச்சரியமா பார்த்தாள், மதுமிதா.

"எத்தனையோ தொழில் இருக்குது. கேவலம், இந்த உடம்பை வித்துதான் சம்பாதிக்கணுமா? யோசிச்சு பாருங்கன்னு சொன்னதுபோல எனக்கு தெரிஞ்சிது. நானும் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். அதனாலதான் உன்னை இந்த பூங்காவுக்கு வரச்சொன்னேன்."

"நானும் இதைப்பற்றி உன்கிட்ட கேட்கணும்ன்னு நினைச்சிட்டே இருந்தேன்.   முழுசா இரண்டுநாளு, இந்த தொழில போனாதான் நமக்கு இரண்டாயிரம் ரூபா கிடைக்கும். ஆனா, அன்னிக்கு திடீர்ன்னு ஜாக்பாட் போல இந்த ரூபாய் கிடைச்சிடிச்சி. எனக்கு முன்புபோல ஃபீரியட் சரியா வர்றது இல்லை. டாக்டருட்ட கன்சல்ட் பண்ணினேன். இந்த தொழிலுக்காக, ஃபீரியட் வராம இருக்கிறதுக்கான மாத்திரையை அதிக அளவு எடுத்திருக்கேன். இன்னமும் அதிகமா எடுத்திட்டா, கேன்சர் வர்றதுக்கு வாய்ப்பு அதிகம்ன்னு டாக்டர் சொல்றார்."

"ஒருவிஷயம் புரிஞ்சிக்க. நாம, இந்த தொழில்ல வர்றதுக்கு நம்மோட சூழ்நிலைதான் காரணம். இரண்டு அல்லது மூணுவருசம் தான் இந்த தொழில்ல இருக்கமுடியும். வயசாயிட்டா நாயைவிட கேவலாம நம்மளை பார்ப்பானுங்க. அதற்கு பிறகு ஏது வருமானம். அதனால யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். நீ என்னச் சொல்றே?"

"நீ சொல்றது சரதான். இந்த தொழில்ல இளமை இருக்கிற வரைதான் வருமானம். இதையும் விட்டுட்டு, வேற என்னத் தொழில் செய்யலாம். நீயே சொல்லு."

பூங்காவில் உயரமா வளர்ந்திருந்த அந்த பெரிய மரத்தின் அருகே, உட்கார்ந்தனர், இருவரும்.

தனதுதோள் பேக்கிலிருந்து அதை எடுத்து நீட்டினாள், ராணி.

வாங்கிய மதுமிதா, பார்த்தாள். அது நேற்றைய நாளிதழின் ஒருபக்கம். நான்காய் மடிக்கப்பட்டிருந்த நாளிதழின் பக்கத்தை படிக்க ஆரம்பித்தாள். கலெக்டர் பவித்திரா அவர்கள், பெண்களுக்கான சுயஉதவி குழுவை ஆரம்பித்து, பல நல்ல திட்டங்களை வெளியிட்டிருந்தார்.

"இப்போது எனக்கு புரியுது, ராணி."

ராணியின் கையை மெல்ல இறுக்க ஆரம்பித்தாள், மலர்ந்த முகத்துடன் மதுமிதா.

அந்தநேரத்தில்

அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்குழந்தை ஒன்று, மதுமிதாவின் தோளை, செல்லமா தட்டிச் சென்றாள்.

*******
இரண்டு வருடங்களுக்கு பிறகு.

திருவள்ளுவர் பஸ்நிலையம். காலை மணி 6:10. குளிரூட்டப்பட்ட ஏசி பஸ்ஸிலிருந்து  இறங்கினான், அவன்.

சில நிமிட நடைநேரத்தில்,

அந்த லாட்ஜை நெருங்கி, உள்ளே நுழைந்தான்.

"ஒரு சிங்கிள் ரூம்..."

"இதற்கு முன்னாடி இங்கே வந்து தங்கியிருக்கீங்க. கம்யூட்டரில், உங்க ஐடி காட்டுது." ரிசப்ஷனில் இருந்தவர் சொன்னார்.

"ஸார்...!"

குரல் கேட்டு திரும்பினான்.

அந்த பேரர் நின்றிருந்தான்.

"ஸார்... எப்டி இருக்கீங்க..?"

ஆச்சரியமுடன் பார்த்தான்.

"இரண்டு வருஷத்துக்கு பிறகு இங்கே வந்திருக்கேன். என்னை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கே? ஆச்சரியமா இருக்கு.!"

"வாங்க ஸார்... உங்க ரூமுக்கு போகலாம்."

சரியா முப்பது வினாடிகளில் அறை எண் 444, கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

"ஸார்... ரொம்ப இளைச்சிட்டீங்க."

சொன்ன பேரர்ரை ஆச்சரியமுடன் பார்த்தான், அவன்.

"உங்களை என்னால மறக்கமுடியாது, ஸார். லாட்ஜீக்கு வர்றவங்க, ரூமை காலிசெய்து போகும்போது, எங்களுக்கு சில்லறையா டிப்ஸ் ஏதாவது தருவாங்க. ஆனா... நீங்க அன்னிக்கு வந்து ஒருநாள் கூட தங்கலை. இரண்டாயிரம் ரூபாவை எனக்கு டிப்ஸா தந்தீங்க. அந்த ரூபாயில்தான் நாங்க தீபாவளியை சந்தோசமா கொண்டாடினோம். உங்களை மறக்க முடியுமா, ஸார்."

"இந்த தீபாவளியையும் சந்தோஷமா கொண்டாடிடலாம்."

"வேணாம், ஸார்...! உங்க நிலமை என்னான்னு எனக்கு தெரியாது. இப்போ உங்களுக்கு தேவை, சூடான காபியா?"

"காபியும் வேணும். பட்சியும் வேணும்."

"ஸார்... இப்போது எல்லாம் அந்தமாதிரியான பெண்கள் வர்றதே இல்லை. அவங்க, செல்போன் நம்பரும் மாத்திருக்காங்க. இந்த தொழிலை விட்டிட்டு, வீடுகளுக்கு தேவையான மளிகை சாமான்களை மொத்தமா வாங்கி, பாக்கெட் கவரில் அடைச்சு, வியாபாரம் செய்திட்டு வாராங்க. இந்த ஊரில் எந்தவொரு லாட்ஜிலும் பட்சி கிடைக்காது. நாங்களும் போலீஸ் தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்கிறோம்."

"சரி... ஓகே. சூடா ஒரு காபி கிடைக்குமா...?"

"இரண்டு நிமிஷத்தில வந்திடுறேன், ஸார்."

பேரர் சென்றதும், தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸில் கையை நுழைத்து, அந்த போட்டோவை எடுத்தான்.

போட்டோவில் இருந்த பெண் மிகவும் அழகாக இருந்தாள்.

போட்டோவை பார்த்தவன் கண்களில் கண்ணீர்துளிகள் வழிய ஆரம்பித்தது. அந்த கண்ணீர்துளியில், ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உறைந்திருந்தன.

கோபால்




 Ai SONGS

 



Post a Comment

1 Comments

  1. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete