“மகளின் ஆபாச படத்தை வெளியிடுவேன்” - சைபர் குற்றவாளி மிரட்டலால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

“மகளின் ஆபாச படத்தை வெளியிடுவேன்” - சைபர் குற்றவாளி மிரட்டலால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, பெட்டிக்கடை முதல் ஷேர் மார்க்கெட் வரை அனைத்தும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையாக மாறிவிட்டது. பயனாளருக்கும், சேவை வழங்குபவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க தேவையில்லை என்ற டிஜிட்டல் தளத்தில், நாள்தோறும் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

இதில், சைபர் குற்றவாளிகள் போலீஸ் என்ற பெயரில், அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதும் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அப்படியொரு சைபர் குற்றவாளி விடுத்த மிரட்டலில், ஓர் உயிர் பறிபோகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா நகரில் அச்நேரா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 58 வயதான மால்தி வர்மா என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

பள்ளியில் இருந்தபோது, நண்பகல் நேரத்தில் இவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப் கால் ஒன்று வந்துள்ளது. எதிர் தரப்பில் இருந்து பேசியவர் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். விஜய் குமார் என்ற பெயரில் வந்த வாட்ஸ்-அப் எண்ணில் போலீஸ் உடை அணிந்திருந்தவரின் போட்டோவும் இருந்தது. அதைக் கண்டதும், “எதற்கு சார் போன் செய்தீர்கள்?” என்று ஆசிரியை கேட்டுள்ளார்.

அதற்கு, “உங்களின் மகள் பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாக” கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அது தொடர்பான வீடியோவும் தன்னிடம் உள்ளதாகக் கூறியுள்ளார். “இந்த வழக்கில் உங்களது மகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாத வகையில் தான் பார்த்துக் கொள்வதாக” தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக, தான் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி விடுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார்.

தவறும் பட்சத்தில், “உங்களது மகளின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இச்சம்பவம் குறித்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ்காரர் என்ற பெயரில் பேசி மிரட்டல் விடுத்த நம்பரையும் மகனிடம் கூறியுள்ளார்.

அதை பரிசோதனை செய்த ஆசிரியையின் மகன், அந்த எண் போலியானது என்றும், உங்களிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசிய நபர் சைபர் குற்றவாளி எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். இருந்தபோதும், தனது மகள் தொடர்பான விவகாரம் என்பதால் ஆசிரியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதில் இருந்து மீள முடியாத ஆசிரியை, மன இருக்கமுடியாமலேயே வீடு திரும்பியுள்ளார்.

வீடு வந்த சிறிது நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர், அருகில் இருந்தவர்கள் ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஏற்கனவே ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து புகார் வந்ததன் பேரில் ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் தளத்தில் மோசடி நபர்கள், பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருவது தொடர் கதையாகியுள்ளது. இதில் தற்போது அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரிடம், ஒரு லட்சம் ரூபாய்க்காக அவரின் மகள் குறித்து அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைத்து பணம் பறிக்க முயன்றுள்ளனர். அந்த மிரட்டலால் ஆசிரியை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடும் அதிபயங்கர சைபர் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

news18



 



Post a Comment

Previous Post Next Post