பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா சுமாராக பேட்டிங் செய்து 104க்கு ஆல் அவுட்டானது. மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களம் இறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து 201 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
கிங் கோலி சாதனை:
அதில் ஜெயஸ்வால் சதமடித்து 161, ராகுல் 77 ரன்கள் குவித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து படிக்கல் 25, ரிஷப் பண்ட் 1, ஜுரேல் 1 ரன்னில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3வது நாளில் அபாரமாக பேட்டிங் செய்தார். சமீப காலங்களில் பெரிய ரன்கள் குவிக்காததால் விமர்சனங்களை சந்தித்த அவர் இந்தப் போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்து 100* ரன்கள் குவித்த போது 487-6 ரன்களில் இந்தியா தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் 29, நித்திஷ் ரெட்டி 38* ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் மொத்தம் 10 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஜேக் ஹோப்ஸ் 9 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இறுதியில் 534 என்ற கடினமான இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவுக்கு நேதன் மெக்ஸ்வீனியை டக் அவுட்டாக்கிய பும்ரா அடுத்து வந்த லபுஸ்ஷேனை 3 ரன்களில் அவுட்டாக்கினார். அதே போல கேப்டன் பட் கமின்ஸை 2 ரன்களில் சிராஜ் காலி செய்தார். அதனால் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 12-3 என திணறி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா 522 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் மேற்கொண்டு 7 விக்கெட்கள் எடுத்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments