
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஜிம்பாப்வே முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 26ஆம் தேதி புலவாயோ நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய அந்த அணியை அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் 32.3 ஓவரில் வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31, தியோன் மேயர்ஸ் 33 ரன்கள் எடுத்தார்கள். மறுபுறம் பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது 4, ஆகா சல்மான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
பின்னர் 146 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் நிதானமாக விளையாடினார். ஆனால் மறுபுறம் அவருக்கும் சேர்த்து சாய்ம் ஆயுப் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் பவர் பிளே கடந்தும் அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. அதில் அப்துல்லா சபிக் கடைசி வரை நிதானமாகவே விளையாடி 32* (48) ரன்கள் குவித்தார்.
ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சாய்ம் ஆயுப் சதத்தை அடித்து 17 பவுண்டரி மூன்று சிக்சருடன் 113* (62) ரன்களை 182.26 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 18.2 ஓவரில் 148-0 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு ஜிம்பாப்பே அணிக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுத்தது.
மேலும் 1 – 1* (3) என்ற கணக்கில் இந்த தொடரை பாகிஸ்தான் சமன் செய்து வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்த வெற்றிக்கு சதம் அடித்து முக்கிய பங்காற்றிய சாய்ம் ஆயுப் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த போட்டியில் வெறும் 150க்கும் குறைவான இலக்கை சேசிங் செய்த போது அவர் அதிரடியாக விளையாடி சதத்தை பதிவு செய்தார்.
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150க்கும் குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு போட்டியில் சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் வேறு வீரர்கள் 150க்கும் குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் இப்படி சதத்தை அடித்ததில்லை. இதை அடுத்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments