Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-40


அடுத்த நாள் இர்வின்  செரோக்கியை சந்தித்தபோது அவனது உந்துருளியை அன்பளிப்பாகக் கொடுத்து, அதிலே வேலைக்குப் போகும்படி   கூறினான்.

பின்பு அங்கே  மைதானத்தில் பணியிலிருந்த காவலாளியிடம் பேசி, செரோக்கியை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, இரவு வேலை விட்டு வந்ததும் உந்துருளியை மைதானத்தில்  வைத்துவிட்டுச் செல்லும் ஒழுங்கு முறை ஒன்றைத் தற்காலிகமாக  ஏற்படுத்தி வைத்தான்!

இரவில் செரோக்கி தன் ஜாகை வரைக்கும் நடந்து செல்வதில் சிரமம் உண்டு என்பதை இர்வின் புரிந்திருந்தாலும், வண்டியைக் கிராமத்துக்குள் கொண்டு செல்வது சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்தான். அதனால் சில நாட்கள் இப்படியே விட்டு, எதிர்வரும் காலங்களில் வேறோரு முறையைச்  செய்யலாம் என்று நினைத்துக் கொண்டான்.

செரோக்கி முதல் நாளன்று வழமைபோல் மரவேரடி வரைக்கும் நடந்து வந்து, மைதானத்துக் காவலாலியிடமிருந்து உந்துருளியைப் பெற்றுக்கொண்டு, அதில் சவாரித்தவனாக வேலைக்குப் போனான்!

அவனது வேலையை அங்கிருந்த ஏனையயோர் பழக்கிக் கொடுத்தனர். அவனும் ஆர்வமாக வேலை செய்தான்.

வேலை முடிந்ததும்  அவனுக்குரிய சம்பளப் பணத்தை முகாமையாளர் கொடுத்தபோது, தனது உழைப்பிற்கான ஊதியத்தை முதன் முறையாகப் பெற்ற சந்தோசத்தில்  அவனின் உள்மனம் உவகை மிகக் கொண்டது.

இவ்வாறு ஐந்து நாட்கள் வேலை செய்து பணத்தைத் தனது பைக்குள் பத்திரப்படுத்தி வைத்தூக் கொண்ட அவன், அடிக்கடி பணத்தைப் பையிலிருந்து எடுப்பதும் எண்ணிக் கணக்கிட்டு, மீண்டும் அழகாக மடித்துப் பைக்குள் வைப்பதுமாக இருந்தான்!

அவன் தொடராக வேலைக்குச் சென்று வந்தபோதிலும், காலை வேளையில் தனது தந்தையுடன் வனத்துக்குச் செல்வதை விட்டுவிடவில்லை.  வனத்தில் அலைந்து திரிந்து எச்சங்களையும், மூலிகைகளையும் தேடுவதில் உள்ள கஷ்டத்தை விடவும் அவனுக்கு அச்சக வேலை இலேசாக இருந்திருக்க வேண்டும்! ஐந்து நாள் வேலைக்குச் சென்ற அவனுக்கு, அடுத்த வந்த இரண்டு நாட்கள் விடுமுறை!

“பரகஹா” திருவோட்டு உண்கலனில் சமைத்து வைத்த உணவு எப்போதும் கெட்டுப் போவதில்லை! தாய் சமைத்து வைத்திருந்த உணவை வயிறுமுட்ட உண்டபின் குகைக்கு வெளியில் சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தவன்,  அயர்ந்து தூங்கிவிட்டான்.

வெளியாரின் சலசலப்பு தந்தையை மீன்பிடிப்பதற்கு  “ஒரினோகோ” கலப்பிற்கு  அழைத்துச் செல்வதற்காக  கிராமத்தவர்  சிலர் வந்திருந்திருந்ததை உணர்த்தியது. 

“ரியோ கரோனி” வடிகால் “சியுடாட் குவாயானா” என்ற இடத்தில் “ஒரினோகோ” நதியுடன் கலக்குமிடத்திற்குச் சென்று புரோகோனிஷ் கிராமத்தவர் வகை வகையான மீன்களை நிறையப்பிடித்து வந்து, சுத்தமாக்கி தும்மேசையில் காயவைத்து அவ்வப்போது சமையலுக்கு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். 

அப்படியானால் இன்று தந்தை மீன் பிடிக்கச் சென்றுவிடுவார். தான் ரெங்க்மாவை அழைத்துக் கொண்டு  நகருக்குச் சென்று தன்னிடமுள்ள ஐந்து தாள்களுக்கும் ஆடை - அணிகள்  வாங்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு வந்தது.

விறுவிறென்று படுக்கையிலிருந்து எழுந்து அங்கவஸ்தியை இறுக்கிக் கொண்டு குகைக்கருகிலிருந்த நீரில் முகம் கழுவிக்கொண்டவனாக ரெங்க்மாவின் ஜாகைக்குச் செல்வதாகத் தாயிடம் கூறிவிட்டு, அங்கிருந்து விரைந்து ரெங்க்மாவின் ஜாகை நோக்கி நடந்தான்!

அவன் அங்கு சென்ற வேளை, ரெங்க்மா இன்னும் தூக்கத்திலிருந்து எழுந்தில்லை! முன்றலில் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த அத்தை, அவனைக் கற்பாறையில் உட்கார வைத்துவிட்டு, ஜாகைக்குள் சென்று ரெங்க்மாவை எழுப்பினாள்.

செரோக்கி வந்திருக்கும் செய்தியை கூறியபோது, அவள் சுறுசுறுப்படைந்து எழுந்து கொண்டாள்.

அங்கவஸ்தியையும் மார்க்கச்சையையும் தேடி எடுத்து அணிந்து  கொண்டவள், பின்புறமாக ஜாகைக்கு வெளியில் சென்று முகத்தை அலம்பிக் கொண்டு, அங்கு தொங்கிக் கொண்டிருந்த துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு வெளியில் வந்தாள்.

இருவரும் புன்னகைகளை ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொண்டனர். 

“நகரத்திற்குச்  செல்வோமா?” செரோக்கி கேட்டான்.

ஏனேன்றும், எதற்கென்றும்  கேட்பதுபோல் நாணிக் கோணியவாறு அவனை நோக்கினாள்!

இர்வின் தந்த அழைப்பிதழை தன் கைப்பைக்குள்ளிருந்து எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“பெரிய இடத்தில் நடக்கும் கொண்டாட்டம். நாங்க நல்லா உடுத்தித்தான் செல்ல வேண்டும்” என்றான் அவன்.

அவளுக்கு நகரம் செல்வதில் ஆர்வமும், கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் ஆசையும் வந்தது.

அவள் வெளியுலகம் செல்லத் தயாரானாள்! பக்கத்துக்  காட்டுக்குள் நடந்து விட்டு வருவதாகத் தாயிடத்தில் சின்னப்பொய் ஒன்றைக் கூறிவைத்தாள். தாயும் மறுக்கவில்லை. இருவரையும் ஆசிகூறி வழியனுப்பி வைத்தார். 

ஆனால் அவளது தாய் ஒன்று மட்டும் கூறினால்; 

“தந்தை வர முன்னர் ஜாகைக்குத் திரும்பிவிடு!”  என்பதே அது.

தாயின் வார்த்தைகளை தன் காதுகளுக்குள் வங்கியவாறு, ரெங்க்மா செரோக்கியை நிமிர்ந்து  பார்த்தாள்.  அவன் அதன் பொருளுணர்ந்து தன் தலையசைப்பினால் பதிலளித்தான்!

இருவரும் காட்டுவழிப் பாதை நோக்கி  நடக்கலாயினர்!

(தொடரும்)

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments