Ticker

6/recent/ticker-posts

உணவில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோக்கள் மூலம் முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகிறார்களா?


வட இந்திய மாநிலங்களில் உணவு மாசுபாட்டைச் சமாளிக்கப் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், பா.ஜ.க ஆளும் இரண்டு வட மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அரசுகள், உணவு மாசுபாடு தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்தும் திட்டத்தை முன்மொழிந்தன.

அதன்படி, எச்சில், சிறுநீர் மற்றும் பிற அசுத்தங்களால் உணவை அசுத்தப்படுத்துவோருக்கு மிகப்பெரிய அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

உத்தராகண்ட் மாநில அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளது. அதேபோல், உத்தர பிரதேசம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

உணவை மாசுபடுத்தும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் உணவகங்களில் சில விற்பனையாளர்கள் உணவில் எச்சில் துப்பும் காணொளிகள் இணையத்தில் பரவின. ஆனால், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அரசின் கடுமையான உத்தரவுகள் வெளிவந்தன.

மேலும் ஒரு பணிப்பெண் அவர் தயாரிக்கும் உணவில் சிறுநீர் கலப்பதாகச் சந்தேகிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோக்கள் சமூக ஊடகப் பயனர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு குறித்துப் பலர் கவலை தெரிவித்த நிலையில், சில வீடியோக்கள் முஸ்லிம்களை குறிவைத்துக் குற்றம் சாட்டின. அவர்கள் மீது குற்றம் சுமத்தும் இணைய பிரசாரங்களும் நடந்தன. பின்னர் அந்தப் பதிவுகள் உண்மை சரிபார்ப்பு இணையதளங்களால் நீக்கப்பட்டன.

உணவில் சிறுநீரைக் கலந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அந்தப் பெண் ஒரு முஸ்லிம் என்று சமூக ஊடகங்களில் பலர் குற்றம் சாட்டினர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் ஒரு இந்து எனத் தெரிய வந்தது.

சிறுபான்மையினரை குறிவைக்கும் செயல்முறையா?

உணவு தொடர்பான விஷயங்களில் சுகாதாரமற்ற நடைமுறைகளில் மக்கள் ஈடுபடுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டங்களின் செயல்திறனைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு அந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் உத்தர பிரதேச மாநிலம் முன்மொழிந்த ஆணைகளை விமர்சித்துள்ளது. அவை "ஏற்கெனவே பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு வகுப்புவாத செயல்முறையாக இருக்கும்," என்று கூறியிருக்கிறது.

உணவு மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் நாட்டின் மதம் மற்றும் சாதிப் படிநிலைகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, கலாசார-பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் உணவு தொடர்பான விஷயங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகப்படுகின்றன.

உணவுப் பாதுகாப்பும் மத ரீதியான அணுகுமுறையும்

உணவைச் சுற்றியுள்ள விதிமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் (taboos) சில நேரங்களில் சமூகங்களுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுக்கும். அவநம்பிக்கை உணர்வுகளைத் தூண்டும். எனவே, "உணவுப் பாதுகாப்பு" என்ற கருத்து மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு பிணைந்துள்ளது.

இது சில நேரங்களில் உணவு மாசுப்பட்டதாகக் கூறும் சம்பவங்களில் மற்ற பிரிவினரைக் குற்றம் சாட்டத் தூண்டுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ், கடந்த செப்டம்பர் 20, 2024, ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்பற்ற உணவால் உலகளவில் 600 மில்லியன் பேர் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பற்ற உணவு 400,000 இறப்புகளையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பின்மைக்குப் பல்வேறு காரணங்களை வல்லுநர்கள் மேற்கோள் காட்டுகின்றனர், உணவுப் பாதுகாப்பு சட்டங்களைப் போதுமான அளவில் அமல்படுத்தாதது முக்கியக் காரணம். அதே நேரம் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை.

குறுகலான சமையலறைகள், அழுக்கு பாத்திரங்கள், அசுத்தமான நீர், மற்றும் உணவுப் பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் முறையற்ற போக்குவரத்து மற்றும் உணவைச் சேமிக்கும் நடைமுறைகளில் அலட்சியம் காட்டுவது என உணவுப் பாதுகாப்பு பல வழிகளில் சமரசம் செய்யப்படுகிறது.

முஸ்லிம் சமூகம் மீது வீண் பழியா?

உணவக ஊழியர்கள் உணவில் எச்சில் துப்புவது போன்ற வீடியோக்கள் வெளியாகும்போது, மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைகின்றனர்.

உத்தராகண்ட் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டது. ஹோட்டல் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும்போது சரிபார்ப்பதையும், சமையலறைகளில் சிசிடிவிகளை நிறுவுவதையும் காவல்துறை கட்டாயமாக்கியது.

உத்தர பிரதேசத்தில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, ஒவ்வொரு ஊழியரின் பின்னணியையும் போலீசார் சரிபார்க்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்களோடு பதாகைகள் வைக்கப்பட வேண்டும், சமையல்காரர்கள் மற்றும் பிற பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என கடுமையான நடைமுறைகள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களில் சிசிடிவிகள் நிறுவுவதைக் கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

உணவில் எச்சில் துப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் இரண்டு சட்டங்களைக் கொண்டு வர முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம், இந்தியாவின் உச்சநீதிமன்றம் உத்தராகண்ட் மற்றும் உத்தர பிரதேச அரசுகள் வழங்கிய உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

வருடாந்திர இந்து யாத்திரை நிகழ்வான கன்வார் யாத்ராவில் சாலையோரங்களில் உணவுக் கடைகளில், அதன் உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் பிற அடையாள விவரங்களைக் குறிப்பிட்டு போர்டு வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவுகள் முஸ்லிம்களை குறிவைத்து, அவர்களின் வியாபாரத்தைப் பாதிக்கும் என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புதனன்று, உ.பியின் பாரகங்கி நகரத்தில் உள்ள உணவக உரிமையாளர் முகமது இர்ஷாத்தை, ரொட்டி தயார் செய்யும்போது மாவில் எச்சில் துப்பியதாகக் கூறி போலீசார் கைது செய்தனர். அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்ததாக இர்ஷாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், உத்தராகண்ட் மாநிலம் முசோரியில், தேநீர் தயாரிக்கும்போது பாத்திரத்தில் எச்சில் துப்பியதற்காக, நௌஷாத் அலி, ஹசன் அலி ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியதாகவும், உடல் நலத்திற்குக் கேடு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் `தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், முதலில் உணவில் எச்சில் துப்புவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், பல இந்து தேசியவாத சமூக ஊடகப் பக்கங்களில் இந்தச் சம்பவத்தை "தூக்-ஜிஹாத்" அல்லது "ஸ்பிட்-ஜிஹாத்" (thook-jihad" or "spit-jihad) என குறிப்பிட்டுப் பகிர்ந்ததால் மதரீதியான பிரச்னையாக இது மாறியது.

மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கை?

இந்த வார்த்தை "லவ்-ஜிஹாத்" என்ற வார்த்தைப் பயன்பாட்டின் தொடர்ச்சியாகும். தீவிர இந்து குழுக்களால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் இவை.

முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களைத் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாகக் குற்றம் சாட்டுவதற்கு "லவ்-ஜிஹாத்" என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். தற்போது முஸ்லிம்கள் தங்கள் உணவில் எச்சில் துப்புவதன் மூலம் இந்துக்களின் உணவை அசுத்தப்படுத்த முயல்வதாகக் கூறி அதை "தூக்-ஜிஹாத்" என்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் எச்சில் துப்பும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. கோவிட் -19 தொற்றுநோய் சமயத்தில், ​​​​முஸ்லிம் சமூகத்தினர் சில எச்சில் துப்புவது, தும்முவது போன்ற போலி வீடியோக்கள் பகிரப்பட்டன. அவர்கள் கொரோனாவை பரப்பத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டினர்.

இந்த வீடியோக்கள் மதரீதியான பிரிவினையை அதிகப்படுத்தியது, இந்து கடும்போக்கு சமூக ஊடக பக்கங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வாசகங்களை வெளியிட்டன.

பாஜக ஆளும் இரண்டு வட மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், உணவுப் பாதுகாப்பு தொடர்பான புதிய உத்தரவுகள் முஸ்லிம்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மாநிலங்களில் நிலவும் வேலையின்மை மற்றும் விண்ணை முட்டும் பணவீக்கம் போன்ற பிற முக்கியப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் இத்தகைய உத்தரவுகளைப் பயன்படுத்துவதாகவும் எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

புதிய உத்தரவுகள் எதற்காக?

ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரி மணீஷ் சயனா, அரசின் உத்தரவுகள் உணவைப் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்கிறார்.

``உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் உணவகங்களில் திடீர் சோதனைகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சோதனைக்கு எங்கு சென்றாலும் "முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியுமாறும், சிசிடிவிகளை நிறுவுமாறும் மக்களை வலியுறுத்துகிறார்கள்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

சட்ட நிபுணரும், பத்திரிக்கையாளருமான வி.வெங்கடேசன், உணவுப் பாதுகாப்பு தொடர்பான புதிய அரசாணைகள் மற்றும் சட்டங்களைப் பற்றி சட்டசபையில் முறையாக விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார்.

"என்னுடைய கருத்துப்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006இன் கீழ், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அனைத்துக் குற்றங்களையும் கையாள, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை. எனவே, இந்தப் புதிய சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் தேவையா என்று கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம்" என்றார்.

"கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைக்கும் சட்டங்கள், மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் என்று அரசுகள் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால் இருக்கும் சட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே மக்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது."

"அப்படியெனில், இந்த மாநிலங்களில் தற்போதுள்ள சட்டங்கள் இன்னும் சரியாக அமல்படுத்தப்படவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

BBCTAMIL

கட்டுரை தகவல்
எழுதியவர்,செரிலன் மோலன்
பதவி,பிபிசி செய்தியாளர், மும்பை



 Ai SONGS

 



Post a Comment

0 Comments