Ticker

6/recent/ticker-posts

Ad Code

"புத்தகம் என்ன செய்யும்?, ஏன் புத்தகம் படிக்க வேண்டும்?’


"புத்தகம் என்ன செய்யும்?, ஏன் புத்தகம் படிக்க வேண்டும்?’" என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல ஃபிரெஞ்சு இயக்குநர் த்ரூஃபா இயக்கிய ‘Fahrenheit 451’ என்ற படம். அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைக்கதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூஃபா இயக்கிய ஒரே ஆங்கிலப்படம் அது. ‘ஃபாரன்ஹீட் 451’ என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.

எதிர்கால அமெரிக்காவில் இந்தக் கதை நடக்கிறது. அங்கே புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன. யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவரது புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீயிட்டு எரிப்பதற்கு என்று தனியே தீ எரிப்புத் துறை ஒன்று இருந்தது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை செய்கிறான்.

எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையில் அபாய மணி அடிக்கப்படும். தீ வைப்பதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அங்கே அனுப்பிவைக்கப்பட்டு, புத்தகங்களைக் கொளுத்தி வருவார்கள்.

ஒரு நாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்திலிருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக். அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண், தன்னைக் கொளுத்திக்கொள்கிறாள்.

புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன்பிறகு, தீ வைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடிவந்து படிக்கிறான் மாண்டெக். திருடியப் புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்து வைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக ‘பேபர்’ என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.

மனிதகுலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அதுதான் புத்தகம். மனித கற்பனையின் மிக உயரிய விஷயம் ‘எழுத்து’ என்று அவர் புரிய வைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். அவனை வேட்டையாடுகிறார்கள்.

உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைகிறான். அப்படி அலையும்போது நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினரைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம்போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்து புத்தகம் எரிக்கப்பட்டாலும் அவர்கள் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து தருவதாகச் சொல்கிறார்கள்.

அந்தப் பணியில் இணைந்த மாண்டெக், பைபிளின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான். அந்த நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டுமழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று, நடமாடும் புத்தக மனிதர்கள் வேறு இடம் நோக்கிப் பயணம் செய்யத் துவங்குகிறார்கள். அவர்களை வழிநடத்திப் போகிறான் மாண்டெக்.

த்ரூபாவின் இந்தப் படம் புத்தகம் வெறும் காகிதமல்ல என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது. கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால், அகத்தைக் காட்டுவதற்குப் புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்தப் பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.

ஹோவெர்டு பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் ‘பூமியின் பொக்கிஷம்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். வேற்றுக்கிரகம் ஒன்றிலிருந்து இருவர் பூமிக்கு வருகிறார்கள். பூமியில், மனிதர்கள் உருவாக்கியதில் மிக விசித்திரமானதும் விலைமதிப்பு இல்லாததும் எது... என்று தேடி அலைகிறார்கள். வைரம், தங்கம், வியப்பூட்டும் விஞ்ஞானப் பொருட்கள் என்று எதைக் கண்டபோதும் அதைவிடச் சிறப்பாகத் தங்கள் கிரகத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

முடிவில், அவர்கள் மியூஸியம் ஒன்றுக்குப் போகிறார்கள். அங்கே ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதை இரவுபகலாக வாசிக்கின்றனர். முடிவில் ‘வேற்றுக் கிரகவாசிகள் எங்கள் கிரகத்தில் இல்லாதது, பூமியில் இருப்பதில் சிறந்தது ஷேக்ஸ்பியர் நாடகங்களே. இந்தப் பூமியில் உள்ள எல்லா செல்வங்களைவிடவும் அற்புதமானது புத்தகம் மட்டுமே’ என்று ஒரு குறிப்பை வைத்துவிட்டுத் தங்கள் கிரகத்துக்குப் பறந்து சென்றுவிடுகின்றனர் என்று கதை முடிகிறது.

மனிதர்களுடனேயே நினைவுகள் அழிந்துபோவது இல்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில் ஒளிந்துகொண்டு, தன்னை உயிர்ப்பித்துக்கொள்கின்றன. புத்தகம் என்பது, மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்! 

சிறிது வெளிச்சம்
எஸ். ராமகிருஷ்ணன்
whatsapp


 



Post a Comment

0 Comments