Ticker

6/recent/ticker-posts

அநுர அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் கைவைக்காது!


சிறுவயதுத் திருமணங்களை தடைசெய்ய வேண்டும், 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான கல்விகற்கும் உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஓர் ஊடக சந்திப்பின்போது ஐந்து வருடங்களுக்கு முன்,  NPP உறுப்பினர் ஒருவரின் பரிந்துரைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

சிறுவயதுத் திருமணங்களுக்கான பொருளாதார மற்றும் இன்னபிற சமூகக் காரணிகள் பற்றி அவர் அப்போது முன்வைத்த கருத்துக்களை ஐந்து வருட காலமாக  எவரும் கண்டு கொள்ளவுமில்லை; எதிர்க்கருத்து வெளியிட்டதாகவும் தெரியவில்லை!

ஓர் ஆண் அல்லது பெண் உடல்-உள ரீதியாக  பருவமடைந்து ஆணிற்கு பொருளாதார ரீதியாக குடும்பத்தைக் கட்டியெழுப்பும் முதிர்ச்சியுள்ளது என்று கருதுமிடத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாம் சொல்கிறது.  

குறிப்பிட்ட வயதொன்றை இஸ்லாம் நிர்ணயம் செய்யாததற்குக் காரணம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் உடல்-உள ரீதியான முதிர்ச்சியை அடையும் வயதுகள் வித்தியாசப்படலாம் என்பதனாலேயே.  பொது வயதெல்லையை நிர்ணயம் செய்வது அவ்வயதெல்லையை விடக் குறைவான, திருமணம் செய்யும் தகுதியை அடையும் அல்லது திருமணம் செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படும் ஆண் - பெண் இருவருக்கும் நடக்கும் ஒரு அநீதியாகும். 
ஆனால் இலங்கைச் சூழலில் இந்த சட்டமானது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது கண்கூடு என்றபடியினாலும், அடிப்படைக் கல்விக்கு அது தடையாக அமைகின்றமையினாலும் திருமண வயதெல்லையை சில விதிவிலக்குகளோடு பதினெட்டாக மாற்றப்பட வேண்டும் என்பது உடன்பட்ட ஒரு விடயமாகும்!

நம் நாட்டிற்கு ஒரு பொதுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குறிப்பிடும் அந்த NPP உறுப்பினர், பன்மைத்தவத்தை மறுக்கின்ற, எல்லாரையும் ஒரே அடையாளத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டினை இலங்கையில் அமுல்படுத்துவது கடினமானது என்பதை உணரவில்லை போலும். 'ஒரே அடையாளம்' என்றால் எந்த அடையாளத்தைப் பொது அடையாளமாகக் குறிப்பிடுகின்றார் என்பது புதிராக உள்ளது!

சிறுவயதுத் திருமணங்களை ஈஸ்டர் தாக்குதலோடு சம்பந்தப்படுத்திப் பேசும் இவர்,  தற்கொலை குண்டுதாரிகளின் மனைவிகளில் ஏராளமானோர் சிறுவயதில் திருமணம் செய்தவர்கள் என்று குறிப்பிடுவதோடு, இந்தச் சட்டத்தைத் திருத்தாவிடில் மீண்டும் இது முஸ்லிம் சமூகத்தினை மிலேச்சத்தனத்திற்கு இட்டுச் செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றார். 

இவ்வாறான தீவிரவாத பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரக் கூறுகள்தான் காரணம் என்று அவர் நினைப்பது முற்றிலும் தவறானது!

அவர் தனது உரையில், மஹர் வழங்குவதைப் பதிவு செய்வது, பெண்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று தரம் தாழ்ந்த விதத்தில் குறிப்பிடுகின்றார்.

மஹர் என்பது ஒரு ஒரு பெண்ணிற்கு திருமணத்தின்போது மணமகன் வழங்கும் ஒரு பரிசு; அது மணமகளின் உரிமையும் கூட; சீதனத்திற்கு முற்றிலும் மாற்றமான ஒரு கலாச்சாரம். இதனைப் பதிவு செய்வது எந்த விதத்திலும் ஒரு அசிங்கமான காரியமாக எடுத்துக்கொள்ள முடியாது!

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் இல்லை! 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னோக்கிய இக்காலத்தில்,  தூசிதட்டி எடுக்கப்பட்டுள்ள இச்சர்ச்சைக்குரிய கருத்துக்கள் புதிய அரசாங்கத்தின் ஆணித்தரமான முடிவை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஒருவகையில் வழி பிறக்கப் செய்துள்ளமை மகிழ்ச்சிதரும் விடயமாகும்!

அந்தவகையில் NPP உயர் பீடத்தின் சார்பாக, வெளியுறவுத்துறை, புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விஜித ஹேரத் சகோதரர்  ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்பதையும், தேசிய மக்கள் சக்தி ஒரு அரசியல் கட்சியாகத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதுபற்றிக் குறிப்பிடவுமில்லை; NPPஅரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத்தினூடாக, ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தையே தாங்கள் அமைக்க விரும்புவதாகவும், அதில் சிங்கள, இந்து,  கிறித்தவ, முஸ்லிம், பேர்க, மலே போன்ற சகல சமூகங்களும்,  இனத்தவர்களும் உள்வாங்கப்பட்ட ஒருமைப்பாட்டு அரசாக அமையும் என்பதால் எவரும் அச்சமோ, சந்தேகமோ கொள்ள வேண்டிதில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments