Ticker

6/recent/ticker-posts

வீட்டிலிருந்து வேலை செய்வது மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா பரவலின் போது, ​​உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு பரவிவிட்டது. அமேசான் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதிகளை வழங்கியுள்ளன. கோவிட் தொற்று பரவி சில ஆண்டுகளான பிறகும், இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்குகின்றன. ஆனால் நீண்ட நேரம் வீட்டிலிருந்து வேலை செய்வது மக்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அமேசான் தனது ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வேலை செய்ய வருமாறு கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், வெளி வந்துள்ள சமீபத்திய ஆய்வு என்னவென்றால், அலுவலகத்தில் வேலை செய்வது சிறந்த மன ஆரோக்கியத்திற்கும், ஊழியர்களின் சிறந்த செயல்திறனுக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs இன் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உலக அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளது.

அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும், அலுவலகத்தில் உள்ள சூழலும் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 65 நாடுகளைச் சேர்ந்த 54,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில், வீட்டில் இருந்தோ அல்லது கலப்பின (வீடு மற்றும் அலுவலகம்) முறையிலோ வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்களின் சிரமத்திற்கு பணிச்சுமையே முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலை போன்ற காரணங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படும் அதே வேளையில், வேலையில் நல்ல உறவுகள் மற்றும் வேலையில் பெருமைப்படுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று அறிக்கை காட்டுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், கலப்பின வேலை முறையில் பணிபுரிபவர்கள் சிறந்த மனநலம் கொண்டவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது, அதேசமயம் இந்தியாவில், அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. முற்றிலும் வீட்டிலிருந்து வேலை செய்வது குழப்பம், தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

தனியாக வேலை செய்பவர்களை விட குழுக்களில் பணிபுரிபவர்கள் சிறந்த மன ஆரோக்கியத்துடன் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், குழுவின் அளவு மற்றும் மன ஆரோக்கியம் பொறுத்தவரையில், மற்ற நாடுகள் இந்தியாவை விட சிறந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் குழு மனப்பான்மை, போட்டி, பரஸ்பர உறவுகள், ஒருவரின் வேலையைப் பற்றி பெருமிதம் கொள்வது, வேலையில் ஆர்வம் போன்றவை பணி வாழ்க்கையையும், மன நலனையும் மேம்படுத்தும் அம்சங்களாகும்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments