Ticker

6/recent/ticker-posts

Ad Code



அழிவின் விளிம்பில் இருந்த Great Indian Bustard பறவையினத்தை மீட்ட இந்தியா!


அழிவின் விளிம்பில் இருந்த பெரிய இந்திய பஸ்டர்ட் பறவையை செயற்கை கருவூட்டல் முறையில் பிறக்க வைத்து இந்தியா சாதனை செய்துள்ளது. இதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டில் முதன்முறையாக ஜெய்சால்மரின் சுதாசாரியில் உள்ள, தேசிய பெரிய இந்தியன் பஸ்டர்ட் பறவை பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தில், செயற்கை கருவூட்டல் மூலம் இந்த அறிய பறவை குஞ்சு உருவாக்கப்பட்டது. இந்த சாதனை பறவைகள் பாதுகாப்பில் ஒரு மைல்கல் ஆகும். இந்த முறையின் மூலம் ஆபத்தான  இனத்தை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த உலகின் முதல் நாடு இந்தியா என்று பெருமை பெற்றுள்ளது.

இந்த மையம் ராஜஸ்தான் பாலைவனத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பறவைகளின் முட்டைகளை பாதுகாப்பாக குஞ்சு பொரிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சேகரித்து வருகிறது. மேலும் அதன் வளாகத்தில் அடைக்கப்பட்ட சுமார் 45 பறவைகளின் இனச்சேர்க்கை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

உள்ளூர் வன அதிகாரி ஆஷிஷ் வியாஸ்,  "பெரிய இந்திய பஸ்டர்ட் பறவை செயற்கை கருவூட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்ட முதல் நிகழ்வு இது. இந்த முன்னேற்றம் இந்த அரிய பறவைகளின் விந்தணுக்களை சேமிக்கவும், விந்தணு வங்கியை உருவாக்கவும் உதவும். இறுதியில் பஸ்டர்ட் பறவை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்." என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, இந்திய வனவிலங்கு நிறுவன (WII) விஞ்ஞானிகள் அபுதாபிக்கு சென்று அங்குள்ள பறவைகள் செயற்கை கருவூட்டல் ஆய்வு மையத்தில் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டனர். அதன் பிறகு இந்தியாவின் தங்களது சோதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.

ராம்தேவ்ரா கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இனப்பெருக்க மையத்தில், சுதா என்ற ஆண் பெரிய இந்திய பஸ்டர்ட் பறவைக்கு செயற்கை இனச்சேர்க்கைக்கு எட்டு மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு அதன் விந்தணு சேகரிக்கப்பட்டது. இந்த நுட்பம், ஒரு செயற்கை பெண்ணை முன் வைத்து இனச்சேர்க்கை செய்யாமல் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் முறையாகும். விந்தணு பின்னர் சுதாசரியில் உள்ள இனப்பெருக்க மையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு டோனி என்ற பெண் இந்திய பஸ்டர்ட் பறவைக்கு செப்டம்பர் 20 அன்று செயற்கையாக கருவூட்டப்பட்டது.

செப்டம்பர் 24 அன்று, டோனி ஒரு முட்டையை இட்டது, இது விஞ்ஞானிகளால் கவனமாக கண்காணிக்கப்பட்டது. இறுதியாக, அக்டோபர் 16 அன்று, ஒரு ஆரோக்கியமான குஞ்சு பொரித்தது, இது கருவூட்டல் முயற்சிகளில் பெரும் வெற்றியாகும். ஒரு வார கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, குஞ்சு ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு மையத்தின் துணை முதல்வர் தியா குமாரி இன்ஸ்டாகிராமில் சாதனையை கொண்டாடி, "ஜெய்சால்மரில் உள்ள கிரேட் இந்தியன் பஸ்டர்டுகளை பாதுகாக்கும் முயற்சியில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் ஆரோக்கியமான குஞ்சு பிறந்தது. இது வரலாற்றுப் சாதனையாகும். கிரேட் இந்தியன் பஸ்டர்டின் குறைந்து வரும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அதை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கும் இது உதவும்" என்று வெளியிட்டிருந்தார்.

தற்போது, ​​ஜெய்சால்மரில் உள்ள பெரிய இந்திய பஸ்டர்டுகளின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. இவற்றில் 128 பறவைகள் காடுகளில் சுற்றித் திரிகின்றன மற்றும் 45 பறவைகள் இனப்பெருக்க மையங்களில் உள்ளன. ஜெய்சால்மரின் பாலைவன தேசியப் பூங்கா பறவை இனங்களின் முக்கிய சரணாலயமாகக் கருதப்படுகிறது. சுமார் 70 அடைப்புகள் அவற்றின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலைகளை வழங்குகின்றன. பூங்காவின் குஞ்சு பொரிக்கும் மையத்தில், முட்டைகளை அறிவியல் முறையில் அடைகாத்து, புதிய குஞ்சுகள் உற்பத்திக்கு வழி செய்கின்றனர்.

kalkionline



 Ai SONGS

 



Post a Comment

0 Comments