1935 ஆம் ஆண்டு மேத்திங்கள் 18,19 ஆகிய இரு நாட்களில் திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற ஒரு கழகத்தார் சென்னையில் திருவள்ளுவர் திருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். இக்கழகத்திற்குத் தலைவராக பொறுப்பேற்று நடத்தியவர் திரு. சு.நமச்சிவாய முதலியார் என்ற பெருந்தகை. இவ்விழா பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருநாட்கழகத் தலைவர் திரு.கா.நமச்சிவாய முதலியார். திரு.வி.கலியாணசுந்தரம் முதலியார், திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திரு. மணி, திரு. கோடீச்சு முதலியார் ஆகியோர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவை தலைமை ஏற்று நடத்தியவர் மறைத்திரு மறைமலை அடிகள்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை, கழகப் பொறுப்பாளர் வித்துவான் பாரிப்பாக்கம் திரு. கண்ணப்ப முதலியார் அவர்கள் வரவேற்றுப் பேசினார். பின், அந்த வரவேற்புத் தானை தங்கப் பூணிட்ட விலையுயர்ந்த வெள்ளிப் பேழை ஒன்றில் வைத்து, விழாவிற்குத் தலைமை திரு. மறைமலை அடிகளுக்கு அளித்தனர்.
கழகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகிய திரு.மா. பாலசுப்பிரமணியம் என்பார் “திருவள்ளுவர் திருநாட்கழகத் தலைவிழா அறிக்கை" யைப் படித்தார். இவ்விழாவிற்கு வாழ்த்துத் தந்திகளும் வந்திருந்தன.
கொழும்பில் இருந்தும் (ரெவரெண்டு கிங்ஸ்பரி), கல்கத்தாவில் இருந்தும் (ரெவரெண்டு பாப்ளி), மதுரை திரு. கார்மேகக் கோனாரிடமிருந்தும், இரங்கூன் திரு. பி.டி. சாமி ஆகியோரிடமிருந்தும் வாழ்த்துத் தந்திகள் வந்திருந்தன.
மேலும் பல்லோர்கள் வாழ்த்து மடல்களை அனுப்பியிருந்தார்கள். ஈ.வெ.இராமசாமிப் பெரியார், ஈரோடு. ரா.பி.சேதுப்பிள்ளை, திருநெல்வேலி, டாக்டர். கே.ஆர்.மீனாட்சிசுந்தரம், செவ்வாய்ப்பேட்டை, பேராசிரியர். டாக்டர். எம். வின்டர்னிட்ஸ், செக்கோசுலோவேக்கியா, பேராசிரியர். ஈ.ஐ.ராப்ஸன், மார்ட்டிமர் ரோட் - கேம்பிரிட்ஜ். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள், கும்பகோணம், திரு.கி. சிதம்பரநாத முதலியார்.
சீர்காழி, திரு. ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை, தஞ்சாவூர், ஆகியோரின் வாழ்த்துமடல்களையும், மேலும் வந்த சில வாழ்த்து மடல்களையும், வாழ்த்துத் தந்திகளையும் திரு.காழி சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்கள் படித்த பின்னர், விழாவிற்கு தலைமை ஏற்ற மறைமலை அடிகள் விழாவிற்கு தலைமையுரை ஆற்றினார்.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments