Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏழைகளுக்கான ஜனாதிபதி நிதியில் பெருந்தொகை பணத்தை பெற்ற முன்னாள் அமைச்சர்கள்!


முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி நிதியிலிருந்து பாரபட்சமான முறையில் பயனடைந்துள்ளதாகவும், நிதியின் அசல் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியை அவர்கள் பெற்றுள்ளதாகவும் இன்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிதியிலிருந்து உதவி பெற்றதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று(17) சபையில் தெரிவித்துள்ளார்.

பெருந்தொகை பணம்

இந்த நிதி, ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த நிதியில் இருந்து 11 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார்.

ராஜித சேனாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹார 2.2 மில்லியனைப் பெற்றுள்ளார் அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார 4.6 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார்.

அத்துடன் இந்த நிதியின் மூலம் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு 30 மில்லியன் ரூபாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜித் சொய்சா 18 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா 2.7 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு 4 மில்லியன் ரூபாய்களும்? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்கவுக்கு 3 மில்லியன் ரூபாய்களும் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கும் 1.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மனோஜ் சிறிசேன, தயாசிறி ஜெயசேகர, பி. ஹாரிசன், பி. தயாரத்ன, ஆகியோருக்கும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய பெரேரா, பியால் நிசாந்த டி சில்வா ஆகியோரும் அண்மைய ஆண்டுகளில் இந்த நிதியிலிருந்து உதவி பெற்றுள்ளதாக அரசாங்க பிரதம அமைப்பாளர் தெரிவித்துள்ளர்.

இதேவேளை ஜனாதிபதி நிதிச் சட்டத்தின்படி முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

tamilwin



Post a Comment

0 Comments