
நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.
நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா?
இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிப்பது சரி?
ஒருவர் எத்தனை முறை மலம் கழிக்கிறார் என்பது நபருக்கு நபர் மாறுபடும். நாம் உணவு உண்ணும்போதெல்லாம், பெருங்குடல் சுருங்கி உணவைச் செரிமானப் பாதையில் தள்ளுகிறது. இந்தத் தன்னிச்சையான "கேஸ்ட்ரோ-கோலிக் ரிப்லெக்ஸ்" எனும் விளைவால் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தூண்டும் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.
நம்மில் பெரும்பாலானோர் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த கற்றுள்ளோம். அதனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது என்பது புதிய நடைமுறையாகிவிட்டிருக்கிறது.
"நாம் மலம் கழிக்கக்கூட நேரமின்றி இருக்கிறோம்," என்கிறார் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா மருத்துவமனையில் இரையகக் குடலியலாளரும் (gastroenterologist), பொது மருத்துவருமான மார்டின் வேய்சே.
பொதுவாக ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது நல்ல குடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மலம் கழித்தலைப் பொறுத்தவரை சரியானது எது என்பது கடந்த காலங்களில் தெரியாமல் இருந்தது.
ஆனால் முன்னர் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது முதல் ஒரு நாளைக்கு 24 முறை மலம் கழிப்பது வரை இயல்பானது எனக் கருதலாம் என்றுகூடத் தெரிவித்திருந்தது.
ஆனால், பிரிட்டன் பிரிஸ்டல் ராயல் இன்பர்மரி மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் கென் ஹீட்டன் போன்ற விஞ்ஞானிகளின் முன்னோடி ஆய்வுகள் காரணமாக இப்போது நமக்கு அதன் உண்மைத்தன்மை தெரியும். 1980களின் பிற்பகுதியில் கீட்டனும் அவரது சகாக்களும் கிழக்கு பிரிஸ்டல் மக்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
ஆய்வு முடிவுகள் மலம் கழித்தலில் பல வகைகள் இருப்பதைக் காட்டின. ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் ஆண்களில் 40 சதவீதம் பேரும், பெண்களில் 33 சதவீதம் பேரும் மட்டுமே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சிலர் வாரத்திற்கு ஒருமுறைக்கும் குறைவாகவே மலம் கழித்தனர், வேறு சிலர் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தனர்.
மொத்தத்தில் இயல்பான குடல் செயல்பாடு, மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களிடமே இருந்தது என்றும் மனித இயங்கியலில் இளம் பெண்கள் பாதகமான சூழலை எதிர்கொள்கின்றனர் என்றும் இந்த ஆய்வு முடிவு செய்தது.
மலம் தொடர்பான அறிவியலுக்கு ஹீட்டனின் பங்களிப்பு இது ஒன்று மட்டுமல்ல. அதன் பின்னர், 'தி பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல்' என்ற அளவுகோலை வடிவமைக்கவும் அவர் உதவினார். இந்த அளவுகோலும் அதனுடன் வரும் வரைபடங்களும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை அடையாளம் காண மருத்துவர்கள் பயன்படுத்தும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
இந்த அளவுகோலில், "தனி கடலைகள் போலக் கட்டியாக இருக்கும் மலம்" முதல் "நைந்த ஓரங்களைக் கொண்ட பஞ்சு போன்ற கட்டிகள்" வரை பல வகையான மலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
கோல்டிலாக்ஸ்/கோல்டிலாப்ஸ் நிலை
ஒரு நாளைக்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை மலம் கழிப்பது இயல்பானதாகக் கருதப்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இயல்பானதும், ஆரோக்கியமானதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் எவ்வளவு முறை மலம் கழிக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கலாம். ஆனால் நாம் எவ்வளவு முறை மலம் கழிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அது பதிலளிக்கவில்லை. ஒரு மனிதர் மலம் கழிப்பது அவரது ஆரோக்கியத்தின் வலுவான அளவுகோல் என ஆய்வாளர்கள் அதிகமாகக் கண்டறிந்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு 2023இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அமெரிக்காவில் 14,573 வயது வந்தவர்களின் மலம் கழிக்கும் பழக்கங்களை ஆராய்ந்தது. இதில் அதிகமான நபர்களிடம், வாரத்தில் ஏழு முறை மலம் கழிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
மலம் "ஒரு சாஸேஜ் அல்லது பாம்பு போல மிருதுவாகவும், மென்மையாகவும்" அதிகம் காணப்பட்டது. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், இறப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, ஆய்வில் பங்கேற்றவர்களை ஆய்வாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் கண்காணித்து வந்தனர்.
வாரத்தில் ஏழு நாட்கள் இயல்பான மலம் கழித்தவர்களோடு ஒப்பிடுகையில் வாரத்திற்கு நான்கு முறை மென்மையான மலம் கழிப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குள் உயிரிழப்பதற்கு 1.78 மடங்கு வாய்ப்பு அதிகம் எனக் கண்டறிந்தனர். அதிக இடைவெளியில் மலம் கழிப்பவர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 2.42 மடங்கு அதிக வாய்ப்பும், இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழப்பதற்கு 2.27 மடங்கு அதிக வாய்ப்பும் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்தது.
அமெரிக்காவின் சியாட்டலில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியில் நுண்ணுயிரியல் வல்லுநரான சான் கிப்பன்ஸ் முன்புள்ள கேள்வி எவ்வளவு மலம் கழிப்பது சரியான அளவு என்பதுதான். 2024இல் கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 1400 ஆரோக்கியமான வயது வந்தவர்கள் அவர்களின் மலம் கழிக்கும் வழக்கத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.
மலச் சிக்கல் உள்ளவர்கள் (வாரத்திற்கு ஓரிரு முறை மட்டும் மலம் கழிப்பவர்கள்), குறைவான இயல்பு (வாரத்திற்கு மூன்று முதல் ஆறு முறை மலம் கழிப்பவர்கள்), அதிக இயல்பு (ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை வரை மலம் கழிப்பவர்கள்) மற்றும் டயாரியா அல்லது பேதி. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், குடல் நுண்ணுயிர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதய நோய்க்கும் மலம் கழிப்பதற்குமான தொடர்பு
கழிப்பறைக்கு அதிகமாகச் செல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை மலம் கழிப்பவர்களின் குடலில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை கிப்பன்ஸ் கண்டுபிடித்தார்.
மற்றொரு புறம், ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவர்கள் ரத்தத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அல்சைமர் நோயோடு தொடர்புபடுத்தப்பட்ட நச்சுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது.
"மலம் கழித்தலில் அதிக இயல்பு பிரிவில், குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்கள் எனப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் காற்றில்லா உயிரினங்கள் அதிகரிப்பதைக் கண்டோம்," என்கிறார் கிப்பன்ஸ். இந்தக் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களில் ஒன்றான ப்யுடிரேட், உடலில் அழற்சியைக் குறைக்கும் திறன் கொண்டது. இது முக்கியமானது, ஏனென்றால் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றுக்கு நாள்பட்ட அழற்சிதான் தற்போது காரணமாகக் கருதப்படுகிறது."
"அதிக அளவு ப்யுடிரேட் இருப்பது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி 'இன்சுலின் ஏற்பு நிலை' அதிகரிக்க உதவுகிறது," என்கிறார் கிப்பன்ஸ். ப்யுடிரேட் குடலில் உள்ள அணுக்களுடன் ஒட்டிக்கொண்டு வயிறு நிறைந்தது போல் உணர வைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வைக்கிறது," என்கிறார் அவர்.
ஒரு நபர் அரிதாக மலம் கழிக்கும்போது, மலம் அவரது குடலில் நீண்ட காலம் தங்கிவிடுவது மலச்சிக்கல் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக நச்சுகள் இருக்க ஒரு காரணம் என்று கிப்பன்ஸ் நம்புகிறார். இதனால் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்துகள் அனைத்தையும் தின்று அவற்றை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகின்றன.
இதில் பிரச்னை என்னவென்றால் நார்ச்சத்து தீர்ந்தவுடன் பாக்டீரியா புரதத்தை உட்கொள்ளத் தொடங்குகின்றன. இது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை ரத்தத்தில் கலக்கிறது. இந்த நச்சுகள் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியவை. உதாரணமாக பெனிலசிடைல்குளுடாமைன் எனப்படும் நச்சு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஓர் அபாயகரமான காரணியாக உள்ளது.
"வளர்சிதை மாற்றத்தில் உருவான இந்தப் பொருள் அதிக அளவில் நீண்ட நாட்கள் உங்கள் ரத்த ஓட்டத்தில் இருந்தால், பெருந்தமனி தடிப்பை அது ஊக்குவிக்கக்கூடும். இது தமனிகளைக் கடினப்படுத்தி இதய அமைப்பைப் பாதிக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ்.
மருத்துவ நடைமுறைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தலில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை மலம் கழிப்பது வரை ஆரோக்கியமானது எனக் கூறினாலும், தமது ஆய்வில் இந்தக் குறைவான இயல்பைக் கொண்ட பிரிவினர் மத்தியிலும்கூட ரத்த ஓட்டத்தில் நச்சுகள் அதிகரித்து இருந்ததாக கிப்பன்ஸ் கூறுகிறார்.
"எதிர்காலத்தில் இந்த நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா என்கிற தரவுகள் இல்லாததால் உறுதியாகச் சொல்வது கடினம். இருப்பினும், நாம் பார்த்தவரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் முதல் ஒரு நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது, ஆரோக்கியமாக இருப்பதற்குச் சிறந்த பழக்கமாக இருக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ்.
இருப்பினும், எப்போதும் போல, தொடர்பு என்பது காரண, காரியத்திற்குச் சமமாக இருக்காது. மற்ற வழிகளில் ஏற்கெனவே குறைவான ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கக்கூடும். இதைக் கட்டுப்படுத்த கிப்பன்ஸின் ஆய்வில் எந்த நோய் பிரச்னைகளும் இல்லாதவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி
உங்கள் குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி உங்கள் செரிமானப் பாதையைக் கடக்க உணவு எடுத்துக்கொள்ளும் நேரம். இதை ஆங்கிலத்தில் கட் டிரான்ஸிட் டைம் என்கிறார்கள். பிரகாசமான நிறமுடைய ஸ்வீட்கார்ன் போன்ற உணவை உட்கொண்டு, அதன் பின்னர் அது வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே பரிசோதிக்கலாம்.
பொதுவாகச் சொல்வதானால், ஒரு நபரின் கட் டிரான்ஸிட் டைம் அதிகரிக்கும்போது அவர் மலம் கழிக்கும் இடைவெளி அதிகரித்து அவர்கள் மலச் சிக்கலால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
கடந்த 2020இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கட் டிரான்சிட் நேரத்தைக் கணக்கிட 863 பேருக்கு நீல நிற மஃபின்களை கொடுத்தனர். இது வெவ்வேறு உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைப் பாதிப்பதை, மரபியல், குடல் நுண்ணுயிர் தொகுப்பு மற்றும் பிற காரணிகள் எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பபிரெடிக் 1 ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது.
இதில் கட் டிரான்ஸ்ட் டைம் என்படும் உணவு செரிமானக் குழாயைக் கடக்கும் நேரம் நபருக்கு நபர் 12 மணிநேரத்தில் இருந்து பல நாட்கள் வரை மாறுபட்டதாகத் தெரிய வந்தது. குறிப்பாக, குறுகிய டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் - அதாவது அடிக்கடி மலம் கழிப்பவர்கள் மத்தியில் - காணப்பட்ட நுண்ணுயிர்கள் அதிக டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் இருந்த நுண்ணுயிர்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தன. குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருந்தவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் இருந்ததாகத் தெரிய வந்தது.
"அதிக டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிக தீய குடல் பாக்டீரியாக்கள் இருந்ததை நாங்கள் கண்டோம். இவை மோசமான இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்குப் பாதகமானவையாக முன்பு அடையாளம் காணப்பட்டவை," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நுண்ணுயிர் தொகுப்பு விஞ்ஞானியாக இருக்கும் எமிலி லீமிங்.
இது 58 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கட் டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. இவர்கள் ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.
குடலில் மலம் அதிக நேரம் இருப்போரிடம் நுண்ணுயிர்களுக்குப் புதிய உணவு கிடைக்காமல் அவை நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்துகளை உண்பதை விடுத்து புரதங்களை உண்ணத் தொடங்குவதாக கிப்பன்ஸ் போலவே லீமிங்கும் கருதுகிறார். இவை உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் தொகுப்பு இருந்ததுடன் விசெரெல் ஃபேட் எனப்படும் உள்ளுறுப்புக் கொழுப்பும் குறைவாக இருந்ததாக லீமிங்கின் ஆய்வில் தெரிய வந்தது. இந்த வகையான கொழுப்பு வயிற்றின் ஆழமான பகுதிகளில் உள்ளுறுப்புகளைச் சுற்றிக் காணப்படுகிறது.
இந்த உள்ளுறுப்புக் கொழுப்பு பல இதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய சீர்கேடுகளைக் கொண்டு வரலாம் என்பதால் அபாயகரமானது. குறைவான கட் டிரான்ஸிட் இருப்பவர்களிடம் போஸ்ட்பிராண்டியல் ரெஸ்பான்ஸ் எனப்படும் உணவுக்குப் பிந்தைய வினை ஆரோக்கியமானதாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.
அதாவது அவர்கள் உணவு எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிட்ஸ் எனப்படும் கொழுமியங்களின் அளவு குறைவாக இருந்தது. இதனால் அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
மலச் சிக்கல் குறித்தும், நாள்பட்ட நோய்களுடன் அதற்கிருக்கும் தொடர்பு குறித்தும் விஞ்ஞானிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த தகவல்களுடன் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒத்துப் போகின்றன. யாருக்கேனும் நாள்பட்ட மலச் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு குடல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இதற்கு ஆதாரம் கலவையாக இருக்கிறது. ஒரே கேள்விக்குப் பதிலளிக்கும் பல ஆய்வு முடிவுகளைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் மெட்டா அனாலிசிஸ் என்ற முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் மலச் சிக்கல் இருப்பவர்களிடம் குடல் புற்றுநோய் அதிக அளவில் இல்லை எனத் தெரிய வந்தது.
"ஆனால் நாங்கள் உடலின் பிற பகுதிகளுடன் தொடர்புகள் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்கள் அறிகுறிகள் தெரிவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலச் சிக்கலால் பாதிக்கப்படலாம்," என்கிறார் லீமிங்.
இதற்கிடையில் பெருங்குடல் வழியாக மலம் கடத்துவதில் தாமதத்திற்கும், பித்தப்பை கற்களுக்கும் இருக்கும் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார். "அது குடலில் புற்றுநோய்க் கட்டிகளுக்கு முன் தோன்றும் பாலிப்ஸ் உருவாவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவை பின்னர் புற்றுநோயாக மாறலாம்" என்கிறார் அவர்.
உங்கள் மலம் உங்களைப் பற்றிச் சொல்வது என்ன?

ஒரு வாரத்திற்கு எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது. ஆனால், அதைவிட, மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதுதான் முக்கியமானது என்கிறார் லீமிங். நீங்கள் வழக்கமாக மலம் கழிக்கும் பழக்க வழக்கத்தைக் கவனத்தில் கொள்வதால் உங்கள் உடலுக்கு எது இயல்பானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
"நாம் அனைவரும் நமது மலத்தைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அடிப்படையில் அது ஓர் இலவச குடல் ஆரோக்கிய பரிசோதனையைப் போன்றது," என்கிறார் லீமிங். "நீங்கள் எப்போதெல்லாம் மலம் கழிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் மலத்தின் நிறம் மற்றும் வடிவமும் கவனிக்கப்படவேண்டும். (பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல் அளவுகோலில்) டைப் 3 அல்லது டைப் 4, அதாவது வெடிப்புகளுடன் ஒரு சாஸேஜ் அல்லது மிருதுவான சாஸேஜ் வடிவில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்."
நிறத்தைப் பொறுத்தவரை, மலத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தைப் பார்த்தால் அது ரத்தம் இருப்பதைக் குறிக்கிறது. இதற்கு அபாயமில்லாத ஒரு விளக்கம் இருக்கக்கூடும் என்றாலும் இது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
எனவே ஒரு மருத்துவரை முடிந்த வரை உடனடியாகப் பார்ப்பது முக்கியமானது. உங்களுக்கு அடிக்கடி பேதி ஏற்பட்டாலோ, திடீரென மலம் கழிக்க வேண்டியிருந்தாலோ, உணவு உட்கொண்ட பின்னர் பிடிப்பு, வயிறு கனத்திருப்பது போன்ற உணர்வு அல்லது வாயுத் தொந்தரவு இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.
இறுதியாக மேலும் இயல்பாக மாற விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய மூன்று எளிதான காரியங்கள் உள்ளன.
"எங்களது ஆய்வில் இயல்பான கட்டத்தில் இருந்தவர்கள், அதிகமாகப் பழங்களையும், காய்களையும் உட்கொண்டதுடன், அதிகமாக நீர் அருந்தினர், உடல் ரீதியாக அதிகம் சுறுசுறுப்பாக இருந்தனர்," என்கிறார் கிப்பன்ஸ்.
கட்டுரை தகவல்
எழுதியவர்,ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி
bbctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments