Ticker

6/recent/ticker-posts

Ad Code



மனித உரிமைகளின் அடிப்படையும் அதன் போதனைகளும்!


இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன்னரே மனித உரிமைகள் பற்றி இஸ்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்துள்ளது.

அடிப்படை மனித உரிமை என்று கூறும் போது, முதலாவது விடயம் இஸ்லாம் மனிதனை, மனிதனாக மதிக்கிறது என்பதுதான். ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த நாடு, எந்த இனம், எந்த மொழி பேசுபவனாக இருப்பினும் அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தாலும் சரி, இறை மறுப்பாளனாக இருப்பினும் சரி, காட்டில் வாழ்பவனாக இருப்பினும் சரி, நகரில் வாழ்பவனாக இருந்தாலும் சரி, பாலைவனத்தில் வாழ்ந்தாலும் சரி, 'மனிதன்' என்ற காரணத்தினால் பல அடிப்படை உரிமைகளை அவன் பெறுகிறான்.
 
இஸ்லாம் பிரகடனப்படுத்தியுள்ள மனித உரிமை குறிப்பிட்டதோர் சமூகத்திற்கோ, வர்க்கத்திற்கோ, நாட்டவருக்கோ, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடோ, வெள்ளையர், கறுப்பர் என்ற பேதமோ காண முடியாத ஒன்றாகும்.

இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டதாகும். அவற்றைத் திருத்தவோ, திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரமில்லை. அவை இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்க முடியாத அங்கமுமாகும்.

ஒவ்வொரு முஸ்லிமும், தன்னை முஸ்லிம் என வாதிடும் உரிமையைக் கொண்டுள்ளான் என்பது பொது விதியாகும்.

ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்; அவதூறு கற்பிக்காதீர்;
பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர், புறங்கூறாதீர், தரக்குறைவாகப் பேசாதீர் என்று இஸ்லாம் ஆணித்தரமாகக் குறிப்பிடுவதோடு, உளவு பார்ப்பதையும், அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழைவதையும் இஸ்லாம் மறுத்துள்ளது.

எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தின் முன் நிரூபணமாகாத வரை சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சிறையிலடைக்கக் கூடாது என்றும் இஸ்லாம் கூறிப்பிடுகின்றது. 

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இஸ்லாம் உத்தரவாதம் அளிக்கிறது; மன்றங்கள் அமைத்து மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும்; தேவையுள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்குரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

இஸ்லாம் எந்த ஒருவர் மீதும் அதிகார பலத்தையோ, நிர்ப்பந்தத்தையோ திணிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள், சுதந்திரம் என்ற அடிப்படையில் செயற்பட அனுமதித்துள்ளது. 

உரிமைகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் பல விடயங்களைக் கொண்டு மதிப்பிடுகின்றது. விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை, பொருளாதார உரிமை, கல்வி கற்கும் உரிமை, ஏனைய சமூக அரசியல் விடயங்களில் பங்கேற்கும் உரிமை போன்றவையாகும்
மத சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாகும்.  மார்க்கத்தில் எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை (2:256) “மேலும் நாடியவர் விசுவாசம் கொள்ளட்டும், நாடியவர் நிராகரிக்கட்டும்” (அல்குர்ஆன் 18:29) என்று அல்-குர்ஆன் கூறுகின்றது.

இஸ்லாம் மனிதனுக்கு எத்தகைய தலையீடுகளுமின்றி சுதந்திரமாக உலகில் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. 

அல்குர்ஆன் மனிதனின் உரிமையினை பெறுமதியானதாக மதித்து அதனைப் புனிதமானதாகக் கருதுகிறது. அது முஸ்லிமின் உயிர் என்பதற்காகவல்ல; மனிதன் என்ற கண்ணோக்கிலேயானும்.

அந்தவகையில், மனித உயிர் அழிக்கப்படுவதை அது தடுப்பதோடு, தற்கொலையையும்  வன்மையாகக் கண்டித்துத் தடை செய்துள்ளது. 'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான்' (அல்குர்ஆன்4:29)

நியாயமான காரணமின்றி மனித உயிர் அழிக்கப்படக் கூடாது என குறிப்பிடும் அல்குர்ஆன், இவ்வாறு நியாயமான காரணமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்வதானது, மனித சமுகம் முழுவதையும் கொலை செய்வதற்கு சமமானதாகக் கருதுகின்றது.

'இணைவைப்பதற்கு அடுத்தபடியான மிகப்பெரிய குற்றம் மனிதக் கொலையாகும்' எனவும் 'இறைவனுக்கு இணை கற்பிப்பதும் மனிதர்களைக் கொல்வதும் பெரும் பாவமாகும்' எனவும் குறிப்பிடுகின்ற இஸ்லாம், மனிதனுக்கு வாழும் உரிமையை வழங்கியுள்ளது.

மனித உரிமை பற்றி பேசுவோரின் ஏனைய தரப்பினரை நோக்கினால், மனித உரிமைகள் அவர்களது அரசியல் சாசனத்தில் அல்லது பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவ்வுரிமைகள் அவர்களது குடிகளுக்கு மட்டுமே அல்லது இனத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை காணப்படும். ஆனால் இஸ்லாம் வழங்கியுள்ள மனித உரிமை முழு மனித சமுதாயத்துக்குமானதாகும்.

இஸ்லாம் மனிதனுக்கு வழங்கியுள்ள அடுத்த முக்கிய உரிமையே அவர் சமுகவாழ்வின்போது நீதி பெறும் உரிமையாகும்.

மனிதன் மற்றொரு மனிதனின் மீது கொண்ட வெறுப்பு, குரோதம், பகைமை போன்ற எந்த ஒரு மனிதனுக்கு எதிராக செயற்படுவதற்கு, அந்த மனிதனுக்கு விரோதமாக தீர்ப்புக் கூறுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை..
 'ஒரு சாரார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு உங்களை அத்துமீறலுக்கு இட்டுச் செல்லக்கூடாது'  (அல்குர்ஆன் 5:2).

 'விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக உறுதியான சாட்சிகளாக இருங்கள். மக்களின் ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள தவறான எண்ணம் நீதியாக நடப்பதிலிருந்து உங்களைத் தவறச்செய்து விடக்கூடாது. நீதியாக நடந்து கொள்ளுங்கள். இதுவே இறையச்சத்துக்கு மிக்க நெருக்கமானதாகும்'. (அல்குர்ஆன் 5:8)

இவை போன்ற அல்-குர்ஆன் வசனங்களின் ஊடாக அல்லாஹ் எந்தக் காரணம் கொண்டும் நீதிக்கு மாற்றமாக நடப்பதைத் தடை செய்கின்றான்.

இஸ்லாம், இன, நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மார்க்கமாகும்.

இன வெறியும், கோத்திர வெறியும் உச்ச நிலைக்குப் போயிருந்த ஜாஹிலிய்ய சமுகத்திற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கும், இனம், கோத்திரம், நிறம், பிரதேசம் என பிரிந்து வாழும் நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அதனால் இஸ்லாம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கின்றது என்பதை நாம் குறிப்பிட்டுக் கூற முடியும்.

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments