Ticker

6/recent/ticker-posts

அலை ஓசை..!


ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி, வீட்டிற்குள் நுழைந்ததும், பேன் சுவிட்சை அழுத்திவிட்டு, அருகில் இருந்த சேரில் சாய்ந்துக் கொண்டான், கிருஷ்ணகுமார்.

"மேகலா... குடிக்க தண்ணிக் கொண்டுவா."

மேகலா நீட்டிய சொம்பில் இருந்த தண்ணீரை வாங்கி குடித்தவிட்டு, தன் செல்போனை எடுத்துப் பார்த்தான். மூன்று மிஸ்ட்கால்கள் தெரிந்தது.

"உன்னோட சித்தப்பா பையன், கார்த்திக்  போன் பண்ணியிருக்கான். என்னான்னு கேளு."

செல்போனை வாங்கி, அதே நம்பருக்கு டயல் பட்டனைத் தட்டினாள்.

ஒரு நிமிஷங்களுக்கு பிறகு.

"என்னங்க... பார்கவிக்கு நேற்று பிரசவ வலியா இருந்திடிச்சாம். உடனே ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி, அவசர அவசரமா சிசேரியன் பண்ணிட்டாங்களாம்.  கார்த்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திடிச்சாம்."

"எந்த ஆஸ்பிட்டல்ன்னு கேட்டியா.?"

"இன்பா ஆஸ்பிட்டல்.."

"சரி... வீட்டுக்கு வந்ததும் போய் பார்த்திடலாம். ஏன்னா... அவ்வளவு தூரம் என்னால டிராவல் பண்ணமுடியாது."

ஒருமாதம் கழிந்தது.

"என்னங்க... கார்த்தியோட பிள்ளையை பார்க்க, நாம இதுவரையும் போகலை. அவங்க என்ன நினைப்பாங்க. நீங்கதான் நாளைக்கு போகலாம்ன்னு காலத்தை கடத்திட்டீங்க. வர்ற இருபதாம்தேதி நூல்கட்டு வெச்சிருக்காங்களாம். நம்மகிட்ட சொல்லுவாங்களான்னு தெரியலை..."

"மேகலா... வர்ற பத்தாம்தேதி பார்கவியோட சொந்தத்தில ஒரு மேரேஜ் இருக்கு. அன்னிக்கு போய்  குழந்தையையும் பார்த்திட்டு வந்திடலாம்."

தலையாட்டினாள், மேகலா.

குறிஞ்சி லைட் ஹவுஸ்.

"என்னங்க, கல்யாணத்துக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. இப்பவே சாப்பிட்டுட்டு கிளம்பினால்தான் கார்த்தியோட வீட்டுக்கு போய், குழந்தையும் பார்த்திட்டு வரலாம்."

"அக்கா..."

சத்தம்கேட்டு திரும்பினாள், மேகலா.

கார்த்திக் வந்துக்கொண்டிருந்தான்.

"வாடா... குழந்தை உன்னைப்போல தான் இருக்கானா? பார்கவி எப்டி இருக்கா..? நாங்க இன்னிக்கு அங்கே வர்றதா இருக்கோம்."

அமைதியா நின்றவன் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை சுத்தமாக இல்லை.

"பார்கவி வீட்ல இல்லை. அவங்க அம்மா நேற்றைக்கே அழைச்சிட்டு போனாங்க. முதல்குழந்தையை பார்க்கவேண்டிய கடமை அவங்களுக்கு. ஆனா... என்னோட பிடிவாதத்தால தான், பிரசவம் முடிஞ்சதும், என்வீட்டுக்கு குழந்தையோட அனுப்பியிருந்தாங்க. ஒருமாசமா இங்கதான் இருந்தா. இனி தொண்ணூறு நாள் கழிந்தப் பின்புதான், பார்கவியை என் வீட்டுக்கு விடுறதாச் சொன்னாங்க. நீங்க இரண்டுபேரும், இதுவரையிலும் என்னோட குழந்தையை வந்துப் பார்க்கலை. எல்லோரும் உங்கமேல கோபத்திலதான் இருக்காங்க. இரண்டு மாசத்தில பார்கவி, குழந்தையோட வீட்டுக்கு வந்திடுவா. வந்ததும் நானே சொல்றேன். இப்ப நீங்க சாப்பிட்டு கிளம்புங்க."

"கார்த்திக், நான் சொல்றத கேளுடா."

"நீங்க கிளம்புங்க. குழந்தையை வந்துப்பார்க்கிறதும், பார்க்க வராம இருக்கிறதும் உங்க இஷ்டம்."

எதுவும் பேசாமல் இருக்கையில் இருந்து எழுந்த கிருஷ்ணகுமார், தனது சட்டைப்பாக்கெட்டில் இருந்த சின்ன கர்ச்சீப்பை எடுத்தார். அந்தநேரத்தில் சட்டைப்பாக்கெட்டில் நான்காய் மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை பேப்பர் கீழே விழுந்ததை கவனிக்கத் தவறியவர் அங்கிருந்து கிளம்பினார், மேகலாவோடு.

சில நிமிஷங்கள் கழிந்ததும்...

தன்தோளை தட்டியவரை திரும்பிப் பார்த்தான், கார்த்திக்.

ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

"தம்பி... வெள்ளைப்பேப்பர் இந்த சீட்ல கிடந்தது. இதில உட்கார்ந்து இருந்தவரோடதுன்னு நினைக்கிறேன்."

பெரியவரிடம் இருந்து வாங்கிய, நான்காய் மடித்திருந்த வெள்ளைப்பேப்பரை பிரித்தான்.

உள்ளே

சொர்ணம் ஆஸ்பிட்டல்.

பெயர் கிருஷ்ணகுமார்.

வயது 52

கீழே

கிறுக்கலாய்

சில மாத்திரைகள் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.

அவசரமாக வெளியே வந்தவன், மண்டபத்திலிருந்து சில நூறு அடிகள் தள்ளியிருந்த பிரணவா மெடிக்கல்ஸ் ஸ்டோரில் நுழைந்தான்.

"சார்... இதில் எழுதியிருக்கிற மாத்திரை, காய்ச்சல் மாத்திரையா...?"

மெடிக்கல்ஸ் ஸ்டோரில் இருந்த நபர், வாங்கிப் பார்த்தார்.

"கிருஷ்ணகுமார் பேஷண்ட் யாரு..?"

"அவர்... எனக்கு ரொம்ப வேண்டியவர். அவர்க்கு என்னவாம்....?"

"இது கேன்சர்  பேஷண்டுக்கான  மாத்திரை. இதனால ஒரு பிரோயசனமும் கிடையாது. கடவுளை வேண்டிக்குங்க, தம்பி."

கோபால்
       

Email;vettai007@yahoo.com



Post a Comment

1 Comments

  1. மிக்க மகிழ்ச்சி.
    எனது சிறுகதை "அலை ஓசை" வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.

    இனிய ரமலான் வாழ்த்தாக அமைந்துள்ளது.

    மிக்க அன்பில்

    ReplyDelete