Ticker

6/recent/ticker-posts

ஓமான் பேச்சுவார்த்தையின் பின்னர் மத்திய கிழக்கில் மோதல் வருமா?


ஈரானுக்கும், அமெரிக்காவுக்குமிடையே நீண்டகாலமாக இருந்து வந்த மோதல்,  தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் மேலும் வலுவடைந்துள்ளது.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பாததுதான் இந்த மோதலுக்கான முக்கிய காரணமாகும். அணுவாயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்று ட்ரம்ப் விரும்புகிறார்.

ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்கா தரும் பதற்ற நிலையே ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதில் மும்முரமாவதற்குக் காரணமாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது,  அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று ஈரான் முடிவு செய்ததையடுத்து, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அத்தோடு ஈரானை தாக்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள படைத்தளங்களில் அமெரிக்கா தமது வீரர்களை உசார்படுத்தியும், போர் விமானங்களைத் தயார் படுத்தியும்  வருகின்றது. 

இதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளைத் தாக்குதல்களை நடாத்தத் தயார் நிலையில் உள்ளது.
இதன் காரணமாக விரைவில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்  வெடிக்கலாம் என்று ஹேஷ்யம் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஸவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கத்தார், குவைத் உள்ளிட்ட நான்கு அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறப்பதை அதிரடியாகத் தடை செய்து விட்டது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அமெரிக்கா காய்நகர்த்தி வரும் நிலையில், அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையையொட்டிய தங்களின் வான் எல்லையில் இரண்டு நாட்கள் பறப்பதற்கான தடையைஇந்த நான்கு அரபு நாடுகளும் விதித்துள்ளமை, அமெரிக்காவுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் நாட்களில் இந்த தடை  நீட்டிப்புக் கூட செய்யப் படலாம் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வரும் சனிக்கிழமை (12.04.2025) அமெரிக்கா அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற உள்ளது. 

சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமானதாக அமையும் என்று டொனால்ட் டிரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இரு நாடுகளிடையேயும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதை டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.

ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்து டிரம்ப், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதியபோதிலும், ஈரான் அதனை ஏற்றுக் கொள்ளாமல், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று அறிவித்து விட்டது.

அதாவது சில தினங்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசினர்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஈரான் குறித்த கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் காட்டமாகப் பதிலளித்தார்.
ஈரான், நேரடியாக அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லாத நிலையில், ஓமானிலிருந்து, பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்தான்  வரும் சனிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ஷி உறுதி செய்துள்ளார்.

முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் அமெரிக்காவுடன் மறைமுக பேச்சு வார்த்தைக்கு ஈரான் காத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிலையில் ஈரான் அதற்கு உடன்படாமல், மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளமைக்கான பின்னணிக்கு முக்கிய காரணம், அமெரிக்கா - ஈரானிடையே நேரடியான தூதரக உறவுகள்  இல்லாமையாகும். இதற்கு முன்பு இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு மற்ற நாடுகள்தான் மத்தியஸ்தம் செய்தன.

கடைசியாக அமெரிக்கா - ஈரானிடையே கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது; அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தார்.

அதன்போதுதான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக இருநாடுகளும் நேரடியாகப் பேசிக் கொள்ளவில்லை.

ஈரான் அமெரிக்காவை முற்றிலுமாக புறக்கணித்தமையினால், அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது என்பதில் ஈரான் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்து வந்துள்ளது.

இதனால் தான் வெள்ளை மாளிகைக்கு ஈரான் தலைவரை வரவழைத்து டிரம்ப் பேச நினைத்து, ஈரான் உயர்மட்ட தலைவர் காமேனிக்குக் கடிதமும் எழுதினார்.

ஆனால் அதனை ஈரான் ஏற்காமல் ஓமன் வழியாக பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. ஓமன் என்பது ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவில் உள்ள ஒரு நாடாகும்.

இதனால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய ஓமனைத் தேரிவு செய்து, இதன் மூலம் அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணியாதது போன்தொரு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனாலும் ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடாமல் தடுக்க வேண்டியதுதான் முக்கிய நோக்கம் என்பதால் அமெரிக்காவும் ஓமானில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தைக்கு சரி சொல்லி உள்ளது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ஈரான் தரப்புக்களில் யார் யார் பங்கேற்கிறார்கள், பேச்சுவார்த்தை எப்படி நடக்கும் என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
அமெரிக்கா இப்படி இறங்கி வந்தாலும் கூட, பேச்சுவார்த்தையின்போது,  ஈரான் உடன்பாடு செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார்.

அதன்படி  ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசலாம்; ஈரானின் அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கலாம்;
இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கலாம் .

இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளதால் மோதல் என்பது, பேச்சு வார்த்தையின்போது எட்டப்படும் முடிவை பொறுத்துதான் அமையப் போகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments