
"உம்மா, உம்மா" எனக் குரல் தூக்கி கத்தி அழைத்தாள் ஆயிஷா.
"மகள் ,நான் பின்னாடி மாமாரத்து கிட்ட நிக்கிறேன் ." என பதிலுரைத்தார் தாய் பாத்திமா
"உம்மா எனக்கு அஞ்சு ரூவா தாறிங்களா? மா" எனக் கேட்டாள்.
"எதுக்கு இப்போ உனக்கு காசு" என கேட்டார் தாய் பாத்திமா
உம்மா பக்கத்து கடையிலே மிட்டாய் இருக்குமா. அந்த கடையில.இருக்குற தாத்தாகிட்ட கேட்டேன் மா அச்சுருவானு சொன்னாங்க.தாரிங்களாம்மா" என தயக்கத்தோடு கேட்க.
"உனக்கு அஞ்சுருவாய்கெல்லாம் இனிப்பு வாங்கி தரமுடியாது.வேணுமென்றா போய் ஒருவா காசு எடுத்து போய் மிட்டாய் வாங்கி தின்னு" என்று சொன்னாள்.
ஆயிஷா எமாற்றமடைந்தாலும் ,தாயின் கட்டளையை மீறி அடம்பிடிக்கவில்லை.
(ஒருக்காலம் இருந்தது 3.50சதம் பாண் அர்ராத்தல் சக்கரையோடு வாங்கிக்கொண்டு பள்ளி சென்ற காலம் அக்காலகட்டத்தோடு இக்கதையை தொடங்கிருக்கிறேன் அதனால் தான் 5ரூபா பெறுமதி என்பதாக காட்டுகிறேன்)
ஒரு தந்தையின் இடத்திலிருந்து தன்னை வளர்க்கும் தாயின் சொல்லை எப்பொழுதும் அவள் மீறியதில்லை . தாய் படும் கஷ்ட நஷ்டம் அறிந்ததால் அமைதியோடு சென்று தாயவள் சொன்ன காசை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தாள்.
ஆயிஷா தரம் மூன்றில் படித்து வருகிறாள். தாயும் மகளும் தான் உலகம்.
மேலதிகமாக அவளுக்கு பள்ளிக்கூடம் என்றால் தாய்க்கு தையல் அறை தான் எல்லாம்.
உடைகளை தைத்து வருவதால் வருமானம் அவர்களுக்கு போதுமாக இருந்தது.அந்தத் தெருவில் வசிப்பவர்கள் ஒருவராவது தினமும்
உடைகள் தைப்பதற்கு வருவார்கள்.
அவர்களின் அன்றாட செலவுகளை எப்படியோ சமாளிப்பதற்கு அது போதுமானதாகயிருந்தது.அது மட்டுமில்லாமல்.சில வீடுகளில் சின்ன சின்ன வேலைகளுக்காக சென்று வருவாள் பாத்திமா.கிடைக்கின்ற பணத்தை தன் மகளின் படிப்புக்காக பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்.கணவனை இழந்து கடந்த பத்து வருடங்கள் தனியாக மகள் ஆயிசாவை வளர்த்துகொண்டிருக்கின்றாள்.
ஆயிசா குழந்தைப் பருவம் என்றாலும் தாய் படுகின்ற கஷ்டங்களை புரிந்து நடந்துகொள்வாள்.
ஆயிஷாக்கு கஷ்டத்தை உணர்த்தியே வளர்கின்றாள். ஆயிசாவும் சின்ன வயதில் குடும்ப நிலைமையை சிந்தித்து நடந்துகொண்டாள்.
பாடசாளைக்கு செல்லும்போது உம்மா கொடுக்கின்ற பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வைத்தாள் ஆயிஷா
திடிரெண்டு உம்மாவுக்கு சுகமில்லாமல் போய் விட . ஆயீஷாவிடம் "உம்மாக்கு உடம்புக்கு முடியலைடா. கொஞ்சம் பாயிஷா மாமியை வர சொல்லுறியா" எனக் கரகரத்தக்குரலில் சொன்னார்.
"என்னம்மா செய்து வாங்கம்மா ஆஸ்பத்திரிக்கி போவம்" என படபப்போடு சொன்னாள் ஆயிஷா.
"எனக்கு ஒன்னுமில்லைடா நீ போய் பாயிஷா மாமியை வரச்சொல்லு" எனச்சொன்னார்.
"சரிமா" எனத் ஓடினாள் ஆயிஷா.
அவசர அவசரமாக பாயீஷா மாமியை அழைத்து வந்தாள் ஆயிஷா. .
பாத்திமாவின் உடல் சூடு கூடுதலாகவே இருந்தது. பாயீஷா சுடு நீர் ஒத்தடம் வைத்தார்.
நன்றாக மரக்கறியும் அரசியும் கடைந்து கஞ்சி காய்ச்சு இளம் சூடுடன் பருக்கினார்.
தாய்க்காக அவர் செய்வதைப்பார்த்துக் கொண்டிருந்த ஆயீஷாவிற்க்கு பாயிஷா மேல் பாசமுடன் மரியாதை வந்தது.
அவ்விரவும் உடல் சூடாக தான் இருந்தது. ஆனால் சோர்வாக இருந்தார்
பாயிஷா அங்கே படுத்துக்கொள்வதற்காக தனது வீட்டை சரிப்பார்த்து பூட்டி விட்டு வந்தார்.
அன்றிரவு நள்ளிரவைத்தாண்டி ஏதோ வீட்டருகே சத்தம் கேட்டது.
ஒரு சில பொறுக்கிகள் வீட்டைச்சுற்றி நோட்டம்விட்டு கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு இதுதான் தொழில் ,தனியாக ஒரு பெண் வாழ்ந்தாளே இவர்களுக்கு கொண்டாட்டம்தான்.அவளை எப்படியாவது அனுபவித்துவிடவேண்டும் என்ற நினைப்பு .
உடனே பொலீசுக்கு அறிவித்துவிட்டு ,எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தித்தாள்
சுபஹுக்கு அதான் கேட்டதில் கண் விழித்தாள் ஆயீஷா. எழுந்து காலைத்தேவைகள் முடித்து வுழு செய்தவள் தொழுது தாய்க்காகவும் தமக்காக உதவிய பாயிஷாவிற்காகவும் பிரார்த்தனை செய்தாள்.
அப்போது எழுந்து வந்த பாயீஷா அவளது தலையை கோதி சிரித்தார்.
பாயிஸா மாமியை "உம்மம்மா" என அழைத்தாள்.
அவருக்கு ஆச்சரியம் . இது நாள்வரை எந்த உறவும் சொல்லியும் ஆயீஷா அழைத்ததில்லை. முதல் முறையாக உரிமையோடு உம்மும்மா என்று அழைத்தது பாயிஷாவுக்கு உள்ளம் குளிர்ந்தது.
அவர் திரும்பி பார்த்ததும்
"தேத்தண்ணி" என்றாள்.
"இரு செல்லம் தாறேன்." என அடுப்பில் சாம்பல் அள்ளி விறகு மூட்டிபற்ற வைத்து தேநீர் கொண்டு வந்தாள்.
தாயின் தலைமாட்டில் அமர்ந்தவள் .பல்துலக்கி முகம் கழுவி இப்போது கொஞ்சம் தெம்போடு வந்திருந்த தாய்க்கும் பட்டர் பிஸ்கட்டை தேநீரில் நனைத்து பிளிந்து ஊட்டி விட, மறுக்காது உன்றார்.
பாயிஷா, பாத்திமாவுக்கும் சூடான தேநீர் கொடுத்து விட்டு , அமைதியோடு தனக்கொரு கப்போடு பாத்திமாவின் அருகில் அமர்ந்தார்.
மெதுவாகப் பேச்சைத் தொடுத்தாள் பாயிஸா
"பாத்திமா ,ஒரு விஷயம் சொல்றேன் ,தப்பா நினைக்ககூடாது"என்றாள்.
"சொல்லுங்க.நான் அப்படி ஒன்னும் நினைக்க மாட்டேன்"என்றாள் பாத்திமா.
ஒரு கணம் தன்னை சுதாகரித்துக்கொண்டு
"பாத்திமா ,இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி தனிமையில் இருக்கப்போற.முடிந்துபோன வாழ்க்கைய நெனச்சு வாழ்றதுல ஒரு அர்த்தமும் இல்ல.ஆயிஷாவும் இன்னும் கொஞ்ச நாளைல வயசுக்கு வந்திருவா.நீயும் ஒரு பெண் ,ஆயிஷாவும் பெண் ஒரு ஆண் துணை இருந்தால் நல்லமென்று தோணுது ,நீ ஏன்மீண்டும் ஒரு கல்யாணம் பணிக்கக் கூடாது? "என்றாள் தயக்கத்துடன்.
பலமுறை இதே கேள்வியை பாத்திமாவிடம் கேட்டாலும் ,அவளுடைய பதில் "வேண்டாம்" என்பதுதான்.
என்றாலும் பாயிஸா முயற்சியை கைவிடவில்லை.
சட்டென பாயிஷாவை பார்த்தவள்"உங்களுக்கிட்ட எத்தனையோ முறை சொல்லியாச்சு.அதுதான் பதில்.என்னை போய் யார் கட்டிக்க போறது. அதுவும் ஒரு பிள்ளைக்காரியை" ஒரு சிறு புன்னைகையுடன் சொன்னாள் பாத்திமா.
பாயிஷா தொடர்ந்தார்.
"இங்கே பாரு பாத்திமா. நன்றாக யோசிச்சு ஒரு முடிவச் சொல்லு.நீ எவ்வளவுதான் தைரியசாலியா இருந்தாலும் ,நீ ஒரு பெண்.உனக்கு ஒரு துணை நிச்சியமாக தேவை.நீ எதுல குறை? உனக்கு அழகு இருக்கு குடும்பத்த பார்த்துக்கிற அறிவு இருக்கு .இதவிட ஒரு கணவனுக்கு வேறென்ன வேணும்?"
"மாமி" என்று எதோ சொல்ல வந்தவளை சைகை மூலம் நிறுத்திவிட்டு தொடர்ந்தார் பாயிஸா.
"இரவைல நான் துணைக்கு வந்து படுத்தாலும்,ஓர் ஆண் உன் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்த்தாலும் ஊரில் ஆயிரம் கதை கட்டுவாங்க.நீ எவ்வளவுதான் சுததமானவள் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.அதுல பாதிக்கப்படுறது ஆயிஷாதான்"
பாத்திமாவுக்கு ஏதோ ஒன்று சுருக்கென்று நெஞ்சைத் தொட்டுக் சென்றது.
ஆயிஷாவைப்பற்றியதுதான் அது.
'தனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால்பிள்ளை தனியாகத் தவிக்குமே' என்ற எண்ணம் அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்தது.
நீண்டதொரு பெருமூச்சுடன் "சரி மாமி உங்க விருப்பம்"என்றாள் பாத்திமா.
எப்படியோயோ ,மிகப்பெரிய வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் பாயிசாவும் அன்றே ,பாத்திமாவுக்கு வரன் தேட ஆரம்பித்தாள்.
தனக்குத் தெரிந்தவர்களிடம் விபரங்களைச் சொல்லி வரன் தேட ஆரம்பித்தாள்.
அதே ஊரில் அன்வர் மாஸ்டர் என்பவர் மனைவியை இழந்து ஒரு சிறு பையனுடன் இருப்பதாக தகவல் கிடைக்க பாயிஷாவே நேரடியாக சென்று வரன் கேட்டாள்,பாதிமாவைப்பற்றிய முழு விபரங்களையும் எடுத்துச் சொல்லி "பாத்திமா எனக்கு ஒரு மகள்போல .ரொம்ப நல்லவ.அவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தீங்கன்னா அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான்" என்று சொல்லி எப்படியோ அவரை சம்மதிக்க வைத்தார் பாயிஸா மாமி.
"சரி மாமி.நானும் எவ்வளவு நாளைக்குத்தான் தனியாக மகனை வளர்ப்பது.?என் சந்தோஷத்தைவிட என் மகனுக்கு ஒரு நல்ல தாயும்,சகோதரியும் கிடைப்பது சந்தோஷம்தாம்,,பாத்திமா விருப்பம் என்றால் நானும் விருப்பம்,பள்ளி ட்ரஸ்ட்டி காசிம் ஹாஜியார்ட சொல்லிட்டா நல்லாயிருக்கும்.நல்ல காரியம் ஹலால் முறைப்படியே நடக்கட்டும் "என்றார் அன்வர் மாஸ்டர்.
"அதப்பத்தி நீங்க கவலைப்படவேண்டாம் ,நான் சொல்லிக்கிறேன்" என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு நேரடியாக பள்ளி ட்ரஸ்ட்டி காசிம் ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்று அவரிடமும் அணைத்து விடயங்களையும் சொன்னாள்.அவர் மகிழ்ச்சியில் துவாச் செய்தார்.
"இது மிகப்பெரிய ஒரு நன்மைக்கான விஷயம் மாமி .நீங்க யோசிக்க வேணாம் நானே முன்னின்று செய்றேன்.அல்லாஹ் அவர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையக் கொடுக்கட்டும்" என்றார் காசீம் ஹாஜியார்.
பாதிமாவிடமும் ,ஆயிஷாவிடமும் அந்த சந்தோஷமான விஷயத்தைச் சொன்னாள்.பாத்திமாவுக்கு சற்று வெட்கமாயிருந்தாலும் ஆயிஷா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.
அதேவாரம் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து முறைப்படி நிகாஹ் செய்து வைத்தார்கள்.காசீம் ஹாஜியாரின் உதவியோடு அத்தனையும் சிறப்பாக நடந்து முடிந்தது.
நாட்கள் நகர்ந்தது.பாத்திமாவும் ,அன்வர் மாஸ்டரும் சந்தோஷமாக இருந்தார்கள்.தனிமை வாழ்கையில் அவர்கள் பட்ட வேதனைகள் மறந்து பிள்ளைகளின் எதிகாலத்தை மட்டுமே நோக்காக எண்ணி வாழ்ந்தார்கள்.
ஆயிஷாவுக்கு தம்பி கிடைத்த மகிழ்ச்சி.அசீமுக்கு ஒரு அக்கா கிடைத்த மகிழ்ச்சியில் தினமும் ஒன்றாக முற்றத்தில் விளையாடுவார்கள்,
அன்று ஒருநாள் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அசீம் அழுகின்ற சதம் கேட்க பாத்திமா ஓடிச் சென்று பார்த்தாள்.
"மகன் என்ன நடந்திச்சு"பாத்திமா கேட்டாள்.
"தாத்தாவும் நானும் ஓடி விளையாடுற போது விழுந்திட்டேன் மா"என்றான் அசீம் .
"அவன் சின்னப்புள்ள ,உனக்கு அறிவில்லையா .பாத்து விளையாடனும்" என்று கடுப்பாக சொல்லிவிட்டு ஆயிஷாவின் முதுகில் மெதுவாகத் தட்டினாள்.
ஓடி வந்த அன்வர் மாஸ்டர் "பாத்திமா அடிக்க வேணாம்.அவங்க தாத்தாவும் தம்பியும் சமாளிக்கட்டும் ,பிள்ளைங்களுக்கு எதையும் அன்பாகச் சொல்லணும்.அடித்து சொல்லக்கூடாது.ரெண்டும் எங்க பிள்ளைங்க அவங்கள அன்பா பார்த்துக்கறது நம்ம கடமை."என்றவரை பெருமையோடு பார்த்தாள் பாத்திமா.
சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி, இலங்கை

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments