
பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற்றன
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதை எடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். முந்தைய மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாத சஞ்சு சாம்சன் இந்த மேட்சில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாம்சன் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து 45 பந்துகளில் 5 சிக்சர் 3 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் வெளியேறினார். அடுத்து வந்தவர்களில் ரியான் பராக் 43 ரன்களும் நித்திஷ் ரானா 12 ரன்கள் ஹெட்மேயர் 20 ரன்களும் எடுத்தனர். ஜுரல் 13 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 205 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்திலேயே பஞ்சாப் பேட்ஸ்மேன் பிரியன்ஷ் ஆர்யாவை போல்ட் என்ற முறையில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டம் இழக்கச் செய்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போல்டாகி வெளியேறினார்.
தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் பஞ்சாப் அணி ரன்கள் சேர்க்க முடியாமல் திணறத் தொடங்கியது. அந்த அணியின் நேஹல் வதேரா 41 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். கிளென் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments