
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து இப்போது வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களை இளம் வயதிலியே இந்தியா வெல்ல பங்காற்றிய விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல உதவினார்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் இனிமேல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஆல் டைம் பேட்ஸ்மேன்கள் பட்டியலை ஐசிசி புதுப்பித்துள்ளது. அதன் படி 897 புள்ளிகளை பெற்றிருந்த விராட் கோலி ஓய்வுக்குப்பின் 909 புள்ளிகளுடன் கேரியரை முடித்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் விராட் கோலி 3வது சிறந்த பேட்ஸ்மேனாக கேரியரை முடித்துள்ளார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஆல் டைம் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 937 புள்ளிகளுடன் வரலாற்றின் 11வது சிறந்த பேட்ஸ்மேனாக கேரியரை முடித்துள்ளார். அதே போல ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான ஆல் டைம் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் வரலாற்றின் 6வது சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
மொத்தத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஐசிசி ஆல் டைம் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 937, 909, 909 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் வாயிலாக 3 விதமான ஐசிசி ஆல் டைம் தரவரிசைப் பட்டியலில் 900+ புள்ளிகளைப் பெற்ற ஒரே பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் 3 விதமான கிரிக்கெட்டிலும் 900 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 57, ஒருநாள் கிரிக்கெட்டில் 14, டி20 கிரிக்கெட்டில் 5 வீரர்கள் 900+ புள்ளிகள் பெற்றுள்ளனர். ஆனால் விராட் கோலி மட்டுமே 3 விதமான ஐசிசி ஆல் டைம் பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் 900+ புள்ளிகளைப் பெற்றுள்ளார். அந்த வகையில் ஓய்வு பெற்றாலும் கிங் என்பதை நிரூபித்துள்ள விராட் கோலி இந்தியாவுக்கு மற்றொரு பெருமை சேர்த்துள்ளார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments