
குமரனின் அருகே வந்து கைகளைப் பிடித்து "உண்மையாகவா? மருத்துவரே நீங்கள் கூறுவது,எங்கள் இளவரசி பட்டத்து ராணி ஆட்சி பீடம் அமரத் தயாராகி விட்டாரா?. ஐயோ என் கால் தரையில் நிற்கவில்லையே. நன்றி நன்றி மருத்துவரே" என்று கூறித் தோளைத் தட்டிக்கொடுத்து விட்டு சரி வாருங்கள் நாம் மகாராணியரைச் சந்திக்கலாம் என குமரனோடு பறப்பட்டார்.
அந்தப்புரம் இருக்கும் மகாராணியருக்கு அழைப்புக் கொடுத்து விட்டார். மந்திரியார் அவசரமாகத் தங்களைக் காண மணி மண்டபத்துக்குள் காத்திருப்பதாகச் சென்று மகாராணியிடம் கூறி "அழைத்து வாருங்கள்" எனப் பணிப் பெண்ணிடம் தூது விட்டு அமர்ந்தார் .
அருகே இருக்கும் இருக்கையில் மருத்துவரை அமரும் படி கட்டளையும் இட்டார். மந்திரியாரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட குமரன் சற்றுத் தள்ளியே உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.
சிறுது நேரத்தில் மெய்க் காவலர்கள் வருகை தந்தனர். அவர்களைத் தொடர்ந்து பணிப் பெண் சிலரும் மகாராணியரும் வந்து கொண்டு இருக்க ,மந்திரியும் குமரனும் எழுந்து நின்று கொண்டே மகாராணியை வரவேற்று வணக்கமிட்டுக் கொண்டனர்.
மகாராணியர் தலையை அசைத்து வணக்கத்தை ஏற்றுக் கொண்டவர் தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அப்போதே "அமருங்கள் மந்திரியாரே" எனக் கூறிக்கொண்டே அமர்ந்தார்.
பின்னர் மருத்துவரைப் பார்த்து "நீங்களும் அமரலாம் மருத்துவரே" என்றவர் மந்திரியை நோக்கி "அவசரத் தூது ஏன்? மந்திரியாரே என்னவாயிற்று?. ஏதேனும் அசம்பாவிதமா?. போர் முனை அறிவிப்பா?. ஓகோ இப்போது
தான் நினைவில் வருகிறது மருத்துவர் விடை பெற்றுக் கொள்வதற்காக அழைத்தீர்களா?. மன்னிக்கவும் நான் அதை மறந்து விட்டேன்." என்றவர் மந்திரியின் பதிலை எதிர் பார்க்காமல் "யார்? அங்கே" எனக் குரல் கொடுத்தார்.
உடனே இரு காவலர்கள் வந்து நின்றார்கள்."நீங்கள் சென்று மருத்துவருக்கான சன்மானம் மரியாதைப் படுத்தும் ஆவணம் அனைத்தையும் கொண்டு வாருங்கள்" என்றார்.
"ஆகட்டும் மகாராணி" என்ற காவலர்கள் போக எத்தனித்தனர், அப்போது "நில்லுங்கள்" என்றார் மந்திரியார். காவலர்கள் நின்று விட்டனர்.
"குறுக்கே பேசுவதற்கு மன்னிக்க ராணியரே, நாங்கள் பேச வந்தவை வேறு விடயம், அதனால் இவர்களை இப்போது பணிக்கு அனுப்புங்கள் மருத்துவருக்கான சன்மானம் மாலை சபையைக் கூட்டிக் கொடுத்துப் பெருமைப் படுத்தி அனுப்புவோம் அது தான் நம் பண்பாடு மகாராணியரே "என்றார் மந்திரி.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments