
பாடல் - 39.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
விளக்கம்:
ஒருவன் தனது முப்பது வயதிற்குள் காமம், வெகுளி, மயக்கம் என்ற மும் மலங்களையும் கடந்து இறைவனை உணர வேண்டும். உணரவில்லை என்றால், ஒரு வயதான பெண்ணின் மார்பு, அவள் பெற்ற குழந்தைக்கு உதவாமல் இருந்தால், எப்படி அது வெறும் உறுப்பு மட்டுமே என்று கருதப் படுமோ அது போல், அவன் கற்ற கல்வி, யாருக்கும் பயனில்லாமல் போகும்.
பாடல் - 40.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
விளக்கம்:
திருவள்ளுவர் தந்த திருக்குறளும், நான்கு வேதங்களின் முழுமையான கருத்துக்களும், மூவர் எழுதிய தேவாரமும், முனிவர்களின் அறிவுரைகளும், மாணிக்க வாசகர் படைத்த திருக் கோவையாரும், திருவாசகமும், சொல்லும் அனைத்து கருத்துகளும் ஒரே கருத்து தான் என்பதை உணர வேண்டும்.
(முற்றும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments