Ticker

6/recent/ticker-posts

இந்தியா 9க்கு 5 தோல்வியை சந்திக்க கம்பீரின் இந்த அணுகுமுறையே காரணம்.. இதை மாத்துங்க.. ரஹானே விமர்சனம்


நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே 2024இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் முறையாக தோற்றிருந்தது.

இந்த தோல்விகளுக்கு சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அடிக்கடி செய்யும் மாற்றங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல முகமது ஷமி பதிலாக பிரசித் கிருஷ்ணா என்பது போன்ற அவருடைய தவறான தேர்வுகளும் தோல்விக்கு வித்திடுகின்றன. இந்நிலையில் அடிக்கடி அணியை மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ள கௌதம் கம்பீரின் அணுகுமுறையே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று அஜிங்க்ய ரஹானே விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே கடினமான கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் இந்தியா கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்திய அணியில் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதே அதற்கான காரணமாகும். அதனாலேயே உலகக் கோப்பைக்கு அணியை உருவாக்கும் போது நிர்வாகத்திடமிருந்து நமது வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தெளிவு தேவை என்று சொல்வேன்”

“வீரர்களை அடிக்கடி மாற்றுவதற்கு பதில் குறிப்பிட்ட ஃபார்மெட்டுக்கு குறிப்பிட்ட வீரர்களை தெளிவாக தேர்ந்தெடுங்கள். இது ஒரு பொதுவான கேள்வியாகும். குறிப்பாக இந்திய ரசிகர்களிடமிருந்து இந்தக் கேள்வி வருகிறது. இந்திய அணி வெல்வதையே அனைவரும் விரும்புகிறார்கள். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளையும் தொடர்களையும் வெல்ல வேண்டும்”

“ஏ அல்லது பி அணியை வைத்து நியூஸிலாந்து விளையாடினாலும் நம்முடைய அணி மேலே எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். பொதுவாக சொந்த மண்ணில் இந்தியா 3 – 0 என எளிதாக வெல்லும் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வென்றது. இந்திய அணியின் கண்ணோட்டத்திலேயே நிறைய கடினமான கேள்விகள் காணப்படுகின்றன. முதலில் அவர்கள் செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்”

“எந்த வீரர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பாருங்கள். ஏனெனில் மீண்டும் நீங்கள் 6 மாதங்கள் கழித்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவீர்கள். நியூசிலாந்து டி20, ஐபிஎல் தொடருக்குப் பின் நம் வீரர்கள் மீண்டும் விளையாடுவார்கள். அதன் பின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேவையான சரியான வீரர்களையும் சேர்க்கையையும் கண்டறிந்து அவர்களுக்கு போதுமான ஆதரவைக் கொடுங்கள்” என்று கூறினார்.

crictamil

 


Post a Comment

0 Comments