
புராதனப்பையைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! பைக்குள்ளிருந்து நாணயக்கட்டோடு சேர்ந்து புராதன நூலும் நிலத்தில் விழுந்தன. நூலின் தாள்கள் சிதைவு பட்டிருந்ததால், அதனை அவன் மேலோட்டமாக விரித்த தாள்களை நகர்த்தியபோது, அதிலிருந்து நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்கள் கலட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.
இப்பொழுது அவனுக்குப் புரிந்தது, அந்தக் குள்ள மனிதர்கள் நாணயக் கட்டொன்றை செரோக்கிக்கு ஏன் கொடுத்துச் சென்றார்கள் என்பது!
அன்றொருநாள் இர்வின் செரோக்கி இல்லாத நேரம் குகைக்குள் வந்தபோது, அந்த புராதன நூலை எடுத்துப் பார்த்ததில் நூலில் சில பக்கங்களில் பக்கக்குறிப்பு எழுதப்பட்டும், சிவப்புக்கோடிடப்பட்டும் இருந்ததையும் கண்டான். அதில் இரண்டு தாள்கள் இப்போது கலட்டப் பட்டிருக்கின்றது. அந்தப் பக்கங்களில் அப்படி என்னதான் இருந்ததோ இர்வின் அறிய மாட்டான்!
இவற்றையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருப்பதற்கு அவனுக்கு இப்போது நேரமில்லை. செரோக்கியும் கிராமத்திலிருந்த மற்ற மனிதர்களும் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும்.
நூலையும், நாணயக்கட்டையும் பைக்குள் திணித்துவிட்டு, பையை இருந்த இடத்தில் வைத்தவன்,குகையை விட்டும் வெளியேறி, ரெங்க்மாவின் ஜாகை நோக்கி நடக்கலானான்!
அங்கும் அவனால் எந்த மனித நடமாட்டத் தையும் காண முடியாதிருந்ததால் சற்றுத் தூரம் நடந்து, புரோகோனிஷ் எல்லையில் அமைந்திருந்த ரங்குவின் ஜாகை வரை சென்றபோதிலும், எந்த மனிதர்களுமே அவனது கண்களில் படவில்லை.
இந்த மனிதர்களுக்கு என்னதான் நடந்தது?
சிலவேளை செரோக்கி தனக்குக் கிடைத்த நாணயத் தாள்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, புரோகோனிஷ் கிராமத்தவர் களைக் கூட்டிக்கொண்டு, நகரப்பகுதி நாடிச் சென்று விட்டானோ?
எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காத நிலையில் இர்வின், தொடர்ந்து நடந்து “பெரியகல்” லின் உச்சிக்கு ஏறலானான்! கல்லுச்சியிலிருந்து சுற்று முற்றும் பார்த்தான்; எங்கு தேடியும் எந்த மனிதர்களும் அவனது கண்களில் படவில்லை!
அப்பொழுது கல்லடிவாரத்திலிருந்து உச்சஸ்தாயில் அந்தக் குரல் வந்தது!
கிணற்றுக்குள்ளிருந்து ஒருவர் குரல் கொடுப்பது போன்றிருந்தது, அது அவனுக்கு!
கல்லடிவாரத்தை எட்டிப் பார்த்தபோது, பழுப்பு நிற கேசத்தைக் கொண்ட வயதான ஒரு மனிதனின் தலைப்பகுதி தெரிந்தது!
யாரந்த மனிதர்?
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments