Ticker

6/recent/ticker-posts

மணிப்பூரில் சோகம்... பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் மரணம் - துயர சம்பவம்!


மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து பெரும் கலவரம் வெடித்தது. மெய்தி - குக்கி என இரண்டு சமூக மக்களுக்கு இடையே நில உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் 260க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 சுமார் 50 ஆயிரம் பேர் தங்களின் வீட்டை இழந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். வன்முறையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகளவில் பதிவாகின. மணிப்பூரில் நடந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

அதில், 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ஆண்கள் பலர் இணைந்து குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இந்நிலையில், அந் கொடூர சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட நாள்பட்ட நோயால் தற்போது  அந்த பெண் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தபோதே அவருக்கு நீதி கிடைக்கவில்லேயே என அவரது பெற்றோர் பெருந்துயரில் வாடி உள்ளனர். 

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் ஏற்பட்ட கடும் அதிர்ச்சியில் இருந்து அந்த பெண் கடைசிவரை முழுமையாக குணமடையவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் ரீதியாக ஏற்பட்ட காயங்களும் பூரணமாக குணமடையவில்லை என்றும் அவரது பெற்றோர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இவையே அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, இச்சம்பவத்தால் ஏற்பட்ட காயத்தில் அவருக்கு தீவிரமாக மூச்சுத் திணறல் பிரச்னை இருந்துள்ளது. 

துக்கத்தில் பேசிய தாய்

ஊடகம் ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பேசியபோது, "இந்த கொடூரமான குற்றத்திற்கு ஆளாகுவதற்கு முன்பு என் மகள் மிகவும் துடிப்பான மற்றும் வெளிப்படையான பெண்ணாக இருந்தார். அவளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. ஆனால் அவள் எங்கள் உறவினர் ஒருவருடன் இம்பாலில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்தார். அவளுக்கு பல நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் அடிக்கடி மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவார். என் மகள் எப்போதும் புன்னகையுடன், உயிர்ப்புடன் இருப்பார். ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவள் புன்னகையை இழந்துவிட்டாள்" என்றார்.

2 மாதங்களுக்கு பிறகே புகார்

2023ஆம் ஆண்டு மே மாதம் இந்த குற்றம் நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் சுமார் 2 மாதங்களுக்கு பின்னரே போலீசாரிடம் புகார் அளித்தார். அந்தளவிற்கு மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, 20 வயது பெண் தன்னை கருப்பு சட்டை அணிந்த நான்கு ஆயுதம் ஏந்திய ஆண்கள் ஒரு மலைப்பகுதிக்கு வலுகட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும், அங்கு மூன்று பேர் மாறி மாறி தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். இன வன்முறையின் உச்சக்கட்டத்தின் போது, ஆயுதம் ஏந்திய மெய்தி இனத்தைச் சேர்ந்த அரம்பாய் தெங்கோல் அமைப்பினர் கருப்பு சட்டைகளை அணிந்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தது என்ன?

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் 2023இல் ஊடகம் ஒன்றில் பேசியபோது, "நான்கு பேர் சேர்ந்து வெள்ளை நிற பொலேரோவில் என்னை தூக்கிச் சென்றனர். ​​அவர்களில் மூன்று பேர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். காரின் ஓட்டுநரைத் தவிர. பின்னர் நான் ஒரு மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் என்னை சித்திரவதை செய்து தாக்கினர். 

எனக்கு என்னென்ன கஷ்டங்களைச் செய்ய முடியுமோ, அதையெல்லாம் அவர்கள் அன்று செய்தார்கள், இரவு முழுவதும் எனக்கு சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. தண்ணீர் கூடக் கொடுக்கவில்லை. காலையில், எப்படியோ, கழிவறைக்கு போவது போல் சென்றேன்... கண்ணைக் கட்டியிருந்தார்கள், அருகில் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என பார்க்க முயற்சித்தேன். மலையில் இருந்து இறங்கி ஓடிச்சென்று தப்பிக்க முடிவெடுத்தேன்" என வலி மிகுந்த அனுபவத்தை அன்று பகிர்ந்துள்ளார். தப்பி வந்தபோது அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரின் நிலையை பார்த்து, பரிதாபப்பட்டு அவரை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார். குறிப்பாக, ஆட்டோவில் இருந்த காய்கறி மூட்டைகளின் இடையே இந்த பெண்ணை மறைத்துவைத்து பத்திரமாக காங்போக்பி பகுதிக்கு கொண்டுவந்துள்ளார். அங்கிருந்து அருகாமை மாநிலமான நாகலாந்தின் தலைநகர் கோஹிமாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். 

zeenews

 


Post a Comment

0 Comments