Ticker

6/recent/ticker-posts

அநுர அலையில் மூழ்கிப் போன ரணில் : தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள குழப்பம்


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து, நாட்டை பொறுப்பேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அவர் தான் என பலரும் எண்ணியிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட அநுர அலையால் அவரின் அரசியல் வாழ்க்கை நிர்மூலமாகியது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ரணில் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சககால அரசியல் நிலவரம்

இவ்வாறான நிலையில் நாட்டின் சககால அரசியல் நிலவரம் ஒரு குழம்பம் நிறைந்த ஒன்றாக மாறி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பலமான நிலையிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் உட்கட்சிபூசல் வெடித்துள்ள நிலையில், அது எப்போது வேண்டுமானாலும்  வெடிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது.

அநுர அரசின் பலவீனத்தை பயன்படுத்தி, அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தம்மைப் பலப்படுத்தி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணைந்து பலமான கட்சியாக மாற திட்டமிட்டுள்ளது.

இதுவரை காலமும் கட்சித் தலைமைத்துவத்தை தன்னகத்தே வைத்திருந்த ரணில் விக்ரமசிங்க, அதனை சஜித்திற்கு வழங்கி ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட திட்டமிடப்படுகிறது.

இதற்கு இரு கட்சிகளையும் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் பச்சைக்கொடி காட்டிய போதும், சஜித் பிரேமதாஸ கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தெரிய வருகிறது.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளார்.

அதற்காக ரணிலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மூலம் தூது அனுப்பியுள்ளார். எனினும் அதற்கு ரணில் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நபராக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே ஹர்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் வரவில்லை. தற்போது அதற்கான காலம் கடந்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் சஜித் பலமான நிலையில் உள்ளதால், அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என ரணில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கட்சித் தலைமையில் இருந்து விலகி, அதனை சஜித்திற்கு வழங்க தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

tamilwin

 


Post a Comment

0 Comments