Ticker

6/recent/ticker-posts

வெனிசுவேலாவில் சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு குரல் - நோபல் பரிசு பெறுவதற்கு மாறுவேடமிட்டு பயணம்: யார் இந்த மச்சாடோ?


ஒரு தேசத்தின் விடுதலை என்பது ஆயுதங்களால் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் அசைக்க முடியாத உறுதியாலும் சாத்தியப்படும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கரினா மச்சாடோ.

58 வயதான இந்த 'இரும்புப் பெண்மணி', இன்று வெனிசுவேலா மக்களின் சுதந்திரத் தாகத்தின் அடையாளமாக மாறியுள்ளார்.

நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை ஒரு "குற்றவியல் அரசாங்கம்" என பகிரங்கமாகச் சாடிய மச்சாடோவுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட போதிலும், அவர் பின்வாங்கவில்லை.

தனக்குப் பதிலாகக் களமிறங்கிய எட்முண்டோ கோன்சாலஸுக்காக நாடு முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் கோன்சாலஸ் அமோக வெற்றி பெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தும், அதிகார பலத்தால் மதுரோ வெற்றி அறிவிக்கப்பட்டதாகக் கூறி, மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி மச்சாடோ போராடினார்.

மச்சாடோ ஒரு அரசியல் தலைவி மட்டுமல்ல, மூன்று பிள்ளைகளின் தாயுமாவார்.

மதுரோ அரசாங்கத்தின் தொடர் கைது அச்சுறுத்தல்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்கள் காரணமாக, கடந்த ஆண்டின் பெரும்பகுதியை அவர் தலைமறைவாகவே கழிக்க வேண்டியிருந்தது.

தனது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, சுமார் இரண்டு ஆண்டுகளாக அவர்களை நேரில் பார்க்கக் கூட முடியாத ஒரு துயரமான சூழலிலும் அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்தார்.

வெனிசுவேலாவில் அமைதியான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட போராட்டத்தைப் பாராட்டி, அவருக்கு 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், அந்தப் பரிசைப் பெறுவதற்காக அவர் நோர்வே சென்ற பயணம் ஒரு திரைப்படத்தையே மிஞ்சக்கூடிய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

மதுரோவின் உளவுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, மாறுவேடமிட்டு அவர் பயணித்தார்.

வழியில் இருந்த காவல்துறையினரின் 10 சோதனைச் சாவடிகளைத் துணிச்சலாகக் கடந்து, இறுதியில், ஒரு கடலோர கிராமத்திலிருந்து சிறிய மரப்படகு மூலம் நடுக்கடலில் ஆபத்தான முறையில் பயணம் செய்து, சர்வதேச எல்லையை அடைந்து நோர்வே சென்றடைந்தார்.

தற்போது மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெனிசுவேலாவில் மீண்டும் ஜனநாயகம் மலரும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. "ஆபத்துக்கள் என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் என் நாட்டு மக்களுக்காக நான் மீண்டும் திரும்புவேன்" என அவர் மதுரோவின் கைதுக்கு முன்னதாக உறுதியளித்திருந்தார்.

இதனிடையே, வெனிசுவேலா சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அவர் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், தனது நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபித டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளமை, சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு தாயாக, ஒரு தலைவியாக மரியா கரினா மச்சாடோ இன்று வெனிசுவேலா வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனிடையே, அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு நோர்வே சென்ற மரியா கரினா மச்சாடோ இன்னும் வெனிசுவேலாவுக்குத் திரும்பவில்லை. நேற்று அமெரிக்காவின் ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், அவர் ஒரு பாதுகாப்பான ஆனால் வெளிப்படுத்தப்படாத இடத்திலிருந்து பேசினார்.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மச்சாடோ "மிக விரைவில்" தனது தாய்நாட்டிற்குத் திரும்பப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப், வெனிசுவேலாவில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்ஸி ரோட்ரிகஸ் இன்று அந்த நாட்டின் (உயர்நீதிமன்றத்தில் உத்தரவின்படி) இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.

hirunews

 


Post a Comment

0 Comments