Ticker

6/recent/ticker-posts

ஈரான் எடுத்த அதிரடி முடிவு; ஒருவழியாக தீரும் நாட்டில் நிலவும் பிரச்சனை?


அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியது. இதனால், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை.

இதனையடுத்து, ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக  அதிபர்  டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையில், லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 10 நாட்களாக லெபனானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையே தாக்குதல் நீடித்து வந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இத்தகைய சூழலில் தான், ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல மணி நேரமாக நடந்த அந்த பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்தது. எனவே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள்  ஜெனீவா அல்லது  இஸ்லாமாபாத்தில் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஹார்மோஸ் நீரிணை திறக்கப்படவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. லெபனான் போர் நிறுத்தம் ஒப்பந்தம் அடிப்படையில் ஹார்மோஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. லெபனானின் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் வரை ஹார்மோஸ் நீரிணை முழுமையாக திறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விரைவில் எரிபொருள் பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

nakkheeran


 


Post a Comment

0 Comments