Ticker

6/recent/ticker-posts

ஈரான் - அமெரிக்கா போரை வைத்து ஸ்கெட்ச்... சவுதியை வைத்து தப்பித்த பாக்.? விரிவான அலசல்!


ஈரான் - அமெரிக்க போர் விவகாரத்தில், தன் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளின் மூலம் உண்மையில் பயனடைந்தது பாகிஸ்தான்தான்!

பாகிஸ்தான் தங்களிடம் பெற்ற 3 பில்லியன் டாலர் வரையிலான கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான கால நீட்டிப்பை கடந்த ஏழு ஆண்டுகளாக ஏற்றுவந்த அமீரகம், கடந்த 2 மாதங்களாக (ஈரான் - அமெரிக்கா போர் உச்சம் பெற்றதை அடுத்து) அந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், தன் கடனை முழுவதுமாக இந்த ஒரே மாதத்தில் (ஏப்ரல் 2026-ல்) செலுத்திவிடுவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் மொத்தமாக 3 பில்லியன் டாலரை ஒரே மாதத்தில் கொடுப்பதால், திவாலாகும் நிலைக்கு சென்றது பாகிஸ்தான். இந்நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறது சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவிடம் இந்தத் தொகையை கடனாக வாங்குவது உட்பட ‘அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன’ என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, சவுதியிடம் இருந்து 3 பில்லியன் டாலரை பெற்றுவிட்டது பாகிஸ்தான்.

ஈரான் - அமெரிக்கா போர் உச்சமடைந்து வரும் நிலையில், அதை சமரசம் செய்ய மத்தியஸ்தம் செய்து வருகிறது பாகிஸ்தான். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் நடந்தது. அது தோல்வியடைந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிறுத்தியே பாகிஸ்தான் தனது பிரச்சினையை சரிசெய்து கொண்டுள்ளது.

ஆம், முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பே பாகிஸ்தான் தனது தூதரக வழித்தடங்கள் மூலமாக ஈரானுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிக்கையை அனுப்பியது. அதில், சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்தால் தாங்கள் சவுதி பக்கம் நின்று போரிட சட்டப்படி கடமைப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெளிவுபடுத்தியது. அதாவது, பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போனால், பாகிஸ்தானும் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போரிடும் என மறைமுகமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன ஒப்பந்தம்? 2025-ல் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது தாக்குதல் நடந்தாலும் அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதன் ஒரு பகுதியாக, ஈரான் உடனான பதற்றமான சூழலில் சவுதிக்குத் தனது ராணுவ ஆதரவை பாகிஸ்தான் வழங்குகிறது, அதற்குப் பதிலாக சவுதி பாகிஸ்தானுக்கு பொருளாதார ஆதரவை வழங்குகிறது.

இதற்காக ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு (ஏப்ரல் 9) சவுதி நிதியமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜடான், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மறுநாள் (ஏப்ரல் 10), பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஷா அப்துல் அஜீஸ் விமான தளத்திற்கு சென்றடைந்ததாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் போது பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப், “பாகிஸ்தான் தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டது. எங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது தோராயமாக 2.8 மாத இறக்குமதிக்கு சமமாக இருக்கிறது. இந்த அளவைப் பராமரிப்பது வருங்காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்கு முக்கிய காரணியாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு யூரோ பாண்டுகள் வெளியிடப்படும் என்றும், வர்த்தகக் கடன்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் சவுதியிடம் இருந்து 3 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. இதுமட்டுமன்றி பாகிஸ்தான் ஏற்கனவே சவுதியிடம் வாங்கியிருந்த 5 பில்லியன் டாலர் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இனி ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்படி தன் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளின் மூலம் ஈரான் - அமெரிக்க போர் விவகாரத்தில், உண்மையில் தன் நிதி நிலைமையை பழைய நிலைக்கு கொண்டு பயனடைந்தது பாகிஸ்தான்!

news18


 


Post a Comment

0 Comments