Ticker

6/recent/ticker-posts

ஐரோப்பிய நாடுகள் சில 'ஹோர்மூஸ்' வழியாக கப்பல்கள் செல்ல ஈரானுடன் பேச்சுவார்த்தை!


'பாரசீக வளைகுடா' என்பது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாக, ஈரான் மற்றும் அரேபிய தீபகற்பத்திற்கிடையே அமைந்துள்ள ஒரு முக்கிய நீர்ப்பரப்பாகும்.

இந்த வளைகுடாவை ஒட்டிய எட்டு நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய், எரிவாயு வளங்களைக் கொண்டுள்ளன.

ஈரானின் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பாரசீக வளைகுடாவை ஒட்டிய நாடுகளாக, ஈராக்கின் வடமேற்குப் பகுதி, குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன. இவை உலக எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளாகக் கருதப்படுகின்றன.

1981ல் தொடங்கப்பட்ட,பொதுவாக GCC என்று அழைக்கப்படும் ஆறு அரபு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் விலகிக் கொண்டது. ஈராக் மற்றும் ஈரான் GCC உறுப்பு நாடுகளல்ல.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20%க்கு மேல் ஹோர்முஸ் நீரிணை  வழியாகவே செல்கிறது.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் காரணமாக, சில ஐரோப்பிய நாடுகள் தற்போது நேரடியாக ஈரான் கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசு ஊடகமான IRIB வெளியிட்ட தகவலின்படி, மேற்கத்திய கடற்படை கூட்டணிகளை தவிர்த்து சில ஐரோப்பிய அரசுகள் நேரடியாக IRGC கடற்படையிடம் அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளின் கப்பல்களுக்கு தடைகள் இருந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

ஈரான் பற்றிய அமெரிக்காவின் கடுமையான கொள்கையிலிருந்து  சில ஐரோப்பிய நாடுகள் விலகி, நடைமுறை இராஜதந்திர அணுகுமுறையை தெரிவு செய்கின்றன என்பதற்கான அறிகுறியாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல ஈரானுடன் நேரடியாக இவை பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணம், எண்ணெய் மற்றும் வர்த்தக கப்பல்களின் இயக்கத்தை உறுதி செய்தல் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைத்தலுமாகும்.

இது ஈரானிய அரசு ஊடகங்களால் பரப்பப்படும் தகவலாக இருந்தபோதிலும், ஐரோப்பிய ஆதாரங்களால்  உறுதி செய்யப்படவில்லை.

2026 மே 16ம் திகதியன்று ஈரானிய அரசு தொலைக்காட்சி (IRIB) சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற கிழக்காசிய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற பிறகு, சில ஐரோப்பிய நாடுகள் ஈரான் புரட்சிகர காவலர் படை (IRGC) கடற்படையுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியது.

இது ஈரானின் "நட்பு நாடுகளுக்கு" அனுமதி அளிக்கும் கொள்கையின் ஒரு பகுதியாகக் காட்டப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் IRGCயிடம் "டிரான்சிட் அனுமதி" கோரி பேச்சு நடத்துவதாகவும் கூறப்படுகின்றது.
2026ல் அமெரிக்க/இஸ்ரேல் ஈரானுடனான மோதல் அல்லது பதற்றத்தில் பிறகு ஹோர்முஸ் நீரிணை பாதிப்புக்கு உள்ளானது; ஈரான் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்தன.

மார்ச் 2026ல் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஈரானுடன் இராஜதந்திர அணுகுமுறை மூலம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக Financial Times போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிரான்ஸ் அதை மறுத்து, பன்னாட்டு கூட்டணி மூலம் பாதுகாப்பை வலியுறுத்தியது.

பிரித்தானியா தலைமையில் பிரான்ஸ், பொதுவாக பன்னாட்டு கடற்படை பணியகம் ஒன்றை (Defensive Escort Mission) அமைக்க முயற்சிக்கின்றது.

இது அமெரிக்கக் கொள்கையிலிருந்து விலகல் அறிகுறியாக இல்லாவிட்டாலும், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா போன்ற E3 நாடுகள் அமெரிக்காவின் "Maximum Pressure" கொள்கையில் எப்போதும் முழுமையாக ஒத்துப்போகவில்லை என்பதைக் காட்டுகின்றது. இருந்தபோதிலும், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் காரணங்களால் நடைமுறை இராஜதந்திர அணுகுமுறை  எடுப்பது இயல்பு என்ற காரணத்தால்,  ஈரானுடன் நேரடி தொடர்பு இருந்தால் நல்லதென E3 நாடுகள் கருதலாம்.

சுயாதீன ஐரோப்பிய உறுதிப்பாடு இல்லாவிட்டாலும், இந்தச் செய்தி முக்கியமாக ஈரானிய அரசு ஊடக ஆதாரத்திலிருந்து வருகின்ற நிலையில்,  அமெரிக்க-ஈரான் பேச்சுகளுடன் இணைந்து, ஐரோப்பா இன்னும் பன்னாட்டு/பாதுகாப்பு அணுகுமுறையை வலியுறுத்தி வருவதை உணர முடிகின்றது.

 ஈரானிய தரப்பு கூறுவதுபோல் "நேரடி பேச்சுவார்த்தை" நடைபெறுவது சாத்தியமானபோதிலும், இது பெரிய அளவிலான "அமெரிக்காவிலிருந்து விலகல்" என்பதை விட, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கான நடைமுறை நடவடிக்கை என்று கூடக் குறிப்பிடலாம். 

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments